சில படங்களின் டைட்டிலே, மொத்தக் கதையின் சாரம்சத்தையும் சட்டென்று சொல்லிவிடும்.
அந்த வரிசையில், மது போதையின் தீமையைப் புட்டு புட்டு வைக்கும் திரைப்படம் என்ற எண்ணத்தை ஊட்டியது ‘பாட்டல் ராதா’. அப்படத்தின் ட்ரெய்லரும் அதனை வெளிக்காட்டும் விதமாக அமைந்தது.
குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், லொள்ளுசபா மாறன், பாரி இளவழகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தைப் புதுமுக இயக்குநரான தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கிறார். ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
அருண் பாலாஜியுடன் இணைந்து இயக்குநர் பா.ரஞ்சித் இதனைத் தயாரித்திருக்கிறார்.
‘பாட்டல் ராதா’ தரும் திரையனுபவம் எத்தகையது?

பா.ரா. கதை!
சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒன்றான ஆவடி அருகே ஒரு சிற்றூரில் வாழ்கிறார் ராதாமணியின் (குரு சோமசுந்தரம்).
மனைவி அஞ்சலம் (சஞ்சனா நடராஜன்), மகள், மகன் என்று சிறிய, அழகான குடும்பம் அவருடையது.
ஆனால், அவர்களது அருமையை, அருகாமையைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குப் பிரச்சனையொன்றில் சிக்கியிருக்கிறார் ராதாமணி.
‘பாட்டல் ராதா’ என்று அப்பகுதியில் வசிப்பவர்கள் அழைக்கும் அளவிற்கு மது போதையில் திளைப்பது, அவரது வாழ்வின் நலன்கள் அனைத்தையும் மொத்தமாகச் சரிக்கிறது.
கட்டடப் பணியில் சிறந்த பணியாளர் எனும் சிறப்பை மதுப்பழக்கம் கெடுத்தொழிக்கிறது. உறவு, நட்பு என்று அனைவரிடமும் தீயவராகக் காட்டுகிறது.
குடும்பத்தில் உள்ள உறவுகள் தினமும் தற்கொலை, கொலை எண்ணங்களுக்கு ஆட்படும்விதமாக அமைகிறது அவரது மதுப்பிரியம்.
ஒருகட்டத்தில், அதனைப் பொறுக்கமாட்டாமல் போதை மறுவாழ்வு மையமொன்றில் ராதாவைச் சேர்க்கிறார் அஞ்சலம். ‘கட்டட வேலை’ என்று ஏமாற்றித்தான் அதன் பணியாளர்கள் அவரை அழைத்துச் செல்கின்றனர்.
அங்கு தன்னைப் போலவே இருக்கும் மதுப்பிரியர்களைப் பார்த்தபிறகுதான், தான் எப்படியொரு மது அடிமையாக இருந்து வருகிறோம் என்பது புரிகிறது.
மெல்ல அதனை உணர்ந்தாலும், அதிலிருந்து விடுபடுகிற எண்ணம் மட்டும் அவரைத் தீண்டுவதாக இல்லை.
இந்த நிலையில், அங்கிருந்து தப்பித்துச் செல்ல முடிவு செய்கிறார் ராதா. அவருடன் இரண்டு பேர் கூட்டணி சேர்கின்றனர்.
அந்த மையத்தில் அவர்கள் தப்பிக்கும்போது, மூவரும் போலீசில் மாட்ட வேண்டியதாகிப் போகிறது. அது அம்மையத்தை நடத்தி வரும் அசோகனை (ஜான் விஜய்) சோர்வடையச் செய்கிறது.
மீண்டும் வீடு திரும்பினாலும், மது இல்லாத மனிதனாக வாழ ராதா மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைகின்றன. அவரைத் தாங்கி நின்ற தூண்களான மனைவி, மகன், மகளைப் பிரியும் நிலை ஏற்படுகிறது.
அதன்பிறகாவது ராதா தன் கையில் இருக்கும் ‘பாட்டல்’லை துறந்தாரா, இல்லையா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
மது போதையால் விளையும் தீமைகள் என்னவென்று தெரியுமா எனப் படம் எடுக்காமல், அவ்வாறு வாழ்கிற ஒரு மனிதனின் வாழ்க்கையாகக் காட்டுகிறது ‘பாட்டல் ராதா’.
‘வசந்தமாளிகை’க்கு முன்னே பாகவதர் காலத்திலேயே இக்கதைகளுக்கான விதை திரையுலகில் விழுந்துவிட்டது. உயர்ந்த உள்ளம், சிந்து பைரவி, என் ராசாவின் மனசிலே உட்படப் பல படங்களை அதற்கான உதாரணமாகச் சொல்லலாம்.
கடந்த ஆண்டு வெளியான ‘லோக்கல் சரக்கு’ திரைப்படம் கூட மதுவுக்கு அடிமையான ஒருவரைப் பற்றியதுதான்.
அவ்வளவு ஏன், கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா பாத்திரம் ஒரு போதை மறுவாழ்வு மையத்தில் சேர்வதாகச் சில காட்சிகள் உண்டு.
இப்படத்தில் அதுவே பிரதானமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
போதை மறுவாழ்வு மையத்திற்கு ஒருமுறை வந்தவர்கள் மீண்டும் மது அருந்துவார்களா அல்லது முற்றிலுமாக அப்பழக்கத்தில் இருந்து விடுபடுவார்களா என்ற கேள்விக்குப் பதிலளிக்கிறது. அனைத்தையும் மீறி, குடி நோயாளிகளாக அவர்களை உருவகப்படுத்துகிறது.
மது அருந்துவோரைக் கேவலமாக எண்ணுகிற வழக்கத்தைக் கேள்விக்குட்படுத்துவதோடு, அவ்வாறு இருப்பவர்களைத் திசை திருப்ப வேண்டிய உந்துதலையும் முன்னிறுத்துகிறது ‘பாட்டல் ராதா’. அந்த நோக்கமே இப்படத்தில் இருக்கும் குறைபாடுகளைப் புறக்கணிக்கத்தக்கதாக்குகிறது.
சிறப்பான நோக்கம்!
குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், லொள்ளு சபா மாறன், ஆண்டனி, பாரி இளவழகன், கருண பிரசாத், மாலதி அசோக் நவீன், சுஹாசினி சஞ்சீவ், சேகர் நாராயணன் என்று இதில் நடித்துள்ள அனைவருமே சிறப்பான நடிப்பைத் தந்திருக்கின்றனர்.
மது அருந்தும் பழக்கம் நாளடைவில் விஸ்வரூபமெடுக்கும்போது, அதற்கு அடிமையான மனிதர்களின் உடல்நலத்தைப் பாதிப்பதைக் காட்சிப்படுத்துகிறது இப்படம்.
அவர்களைச் சார்ந்த குடும்பத்தினரின் உடல், மனச்சிதைவுகளைப் பேசுகிறது. ஆதலால், இப்படத்தின் பின்னிருக்கும் நோக்கம் மிகச்சிறப்பானது.
அதற்கு நியாயம் செய்யும்விதமான தோற்றத்துடன் இதில் நடித்தவர்கள் அனைவரும் தோன்றியிருப்பது அருமை.
அவர்களது ஒரு சோறு பதமாகப் பிரதான வேடத்தில் நடித்திருக்கிற குரு சோமசுந்தரம் வெவ்வேறு தோற்றத்தில், பலவித உடல்மொழியோடு திரையில் தோன்றியிருக்கிறார்.
‘நகர்ப்புறப் பெண்’ எனும் அடையாளத்தைத் தனது நடிப்பால் மாற்ற முயற்சித்து, இதில் வெற்றி கண்டிருக்கிறார் நாயகி சஞ்சனா.
சென்னையின் புறநகர் பகுதியொன்றில் நிகழ்வதாகக் கதை வடிவமைக்கப்பட்டிருப்பதால், ஒரு பாத்திரத்திற்கும் இன்னொன்றுக்குமான உறவு என்னவென்பது வசனங்களில் ஆங்காங்கே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனை உணர்ந்து அனைவரும் நடித்திருக்கின்றனர்.
நாயகனின் ‘ட்ரிங்மேட்’களாக வருபவர்களில் பாரி இளவழகனும் ஒருவராக இருக்கிறார். ‘ஜமா’வில் நாயகனாக நடித்தவர் இப்படியொரு பாத்திரத்தில் இடம்பெற்றிருப்பது ஆச்சர்யத்தைத் தருகிறது.
அசோகன் எனும் பாத்திரமாக வரும் ஜான் விஜய் முதல் மறுவாழ்வு மையத்தில் பணியாற்றுபவர்கள், அங்கிருக்கும் நோயாளிகளின் பாத்திரங்களும் சுவைபட வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜியின் கைவண்ணத்தில் ‘யதார்த்தமான’ லொகேஷன்களில் சுற்றித் திரிந்திருக்கிறது கேமிரா.
அது, ஒரு பகுதி மக்களின் வாழ்வியலை உணரச் செய்கிறது.
கலை இயக்குநர் ராஜராஜ், படத்தொகுப்பாளர் சங்கத்தமிழன், ஒலிக்கலவையைக் கையாண்ட சுரேன் – அழகியகூத்தன்,
நடன இயக்குனர் சாண்டி மற்றும் ஒப்பனை, ஆடை வடிவமைப்பு கலைஞர்கள் என்று பலரது உழைப்பு அருமையாகத் திரையில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது.
முக்கியமாக, சமூகப் பிரச்சனையொன்றைச் சொல்லும் இக்கதையில் ஆங்காங்கே வரும் நையாண்டிகளை உயர்த்திப் பிடிக்கும்விதமாகப் பின்னணி இசை தந்திருக்கிறார் ஷான் ரோல்டன்.
அவரது இசையில் ஏற்கனவே வெளியான ‘யோவ் பாட்டிலு’, ‘நா குடிகாரன் நானா குடிகாரன்’, ‘என் வானம் நீ’, ‘தண்ணியில கிறுக்கு’, ‘கண்களின் ஈரம்’ என்று அனைத்து பாடல்களும் உடனடியாக மனதுக்குள் அமர்ந்து கொள்கின்றன.
மதுப்பழக்கத்திற்கு அடிமையாவதால் ஒரு மனிதனின் மரியாதை எந்த அளவுக்குப் பாதிப்புக்குள்ளாகிறது? தன்மானம் எவ்வாறு சிதைக்கப்படுகிறது?
குடும்ப உறுப்பினர்கள் சமூகத்தால் எத்தகைய அவமானங்களுக்கு ஆளாகின்றனர்? உணவின் சுவையை முழுமையாக அறிவதில் தொடங்கி வாழ்வின் அற்புதமான கணங்களை அடைவது வரை, அவர்கள் எதையெல்லாம் தவறவிடுகின்றனர்? இப்படிப் பல விஷயங்களைப் பேசுகிறது ‘பாட்டல் ராதா’.
சமகால மக்களின் வாழ்வைச் சீரழிக்கிற ஒரு பிரச்சனையைக் கதையாக்கி, அதனைச் சொல்வதில் பிரச்சார நெடி கொஞ்சம் கூட இருக்கக்கூடாது என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார் புதுமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம்.
அவரது உழைப்பும் முயற்சியும் நிச்சயம் அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற்றுத் தரும்.
இந்தக் கதையில் ராதாவின் மனைவி அஞ்சலத்தைச் சிலர் தவறான நோக்கத்துடன் அணுகுவதாக, அவரே பேசுவதாக ஒரு வசனம் வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, ‘நீ சரியில்ல தான். அதுக்காக நான் யார் கூட வேணும்னாலும் போயிருவேனா, அதை நான் தானே முடிவு பண்ணணும்’ என்று அப்பாத்திரம் சொல்வதாகவும் அவ்வசனம் நீள்கிறது.
மதுவுக்கு அடிமையான மனிதர்களின் மனைவிகளை, மகள்களை, இதர பெண் உறவுகளை அடக்கியாள நினைக்கிறவர்களுக்கான ‘சாட்டையடி’யாகவும் சில விஷயங்கள் இதில் இருக்கின்றன.

இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் கவிதை மொழியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
‘குடியில மூழ்கின ஒருத்தர் மனம் மாறி திருந்திட்டார்’ என்று ஒற்றை வரியில் இப்படம் முடிவடைவதில்லை.
இப்படிப்பட்ட சித்தரிப்புகள் தான் இதர படங்களில் இருந்து ‘பாட்டல் ராதா’வை வேறுபடுத்துகிறது.
அந்த வகையில் இப்படம் சில உயரங்களை எட்டியிருக்கிறது. ரசிகர்கள் தரும் ஆதரவின் வழியாக, மேலும் சில சிகரங்களை இப்படம் அடையக்கூடும்.
அதனால் கிடைக்கும் விருதுகள், பாராட்டுகளை விட, ‘இந்த பழக்கம் நமக்கெதுக்கு’ என்று யாரோ சில மனிதர்கள் இப்படம் பார்த்து தம்மைச் சீர்படுத்திக்கொண்டால், அதனைவிடப் பெரிய வெற்றி எதுவுமில்லை.
அந்த வகையில், கதை சொல்லும் நீதி ‘கனெக்ட்’ ஆகும் வகையிலேயே இந்தப் ‘பாட்டல் ராதா’ படைக்கப்பட்டிருக்கிறது.
– உதயசங்கரன் பாடகலிங்கம்.