Take a fresh look at your lifestyle.

உழவர்களைப் பெருமைப்படுத்திய கார்த்தி!

விவசாயத்தில் சாதனைப் புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது.
 
இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பவா செல்லதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், 
 
• சிறந்த பெண் வேளாண் தொழில் முனைவோர் விருது திருமதி. சுகந்திக்கும்.  
 
• நீர்நிலைகளை மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு விருது திருமதி. சியாமளாவுக்கும்,
 
• மாபெரும் வேளாண் பங்களிப்புக்கான விருது – கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்திற்கும்,
  
• கால்நடைத் துறையில் சிறந்த பங்களிப்பு வழங்கியதற்கான விருது கால்நடை மருத்துவர் திருமிகு. விஜயகுமாருக்கும்,
 
• சிறந்த பெண்கள் வேளாண் கூட்டமைப்புக்கான விருது – நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
 
இந்த ஆண்டு விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் உழவர் விருதோடு இரண்டு இலட்ச ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.  
 
இந்த விழாவில் பேசிய நடிகரும் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி, “இந்த நிகழ்ச்சி மூலம் நமக்கு நிறைய வெளிச்சம் கிடைக்கிறது.
 
அந்த வெளிச்சத்தின் மூலம் தங்களின் வாழ்க்கையை மற்றவர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்களை,
 
குறிப்பாக உழவுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மக்களை எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
 
இவ்வாறு செய்வது அவர்களுக்கு ஊக்கமளிக்கும். இவர்கள் அங்கீகாரம் பெறுவதின் மூலம், மேலும் பலர் இவர்களை போல் மாற வேண்டும் என்று நினைப்பார்கள். இதன் மூலம் பல உழவர்கள் பயனடைவார்கள் என நம்புகிறேன் என்றார்.
 
இதையடுத்து பேசிய நடிகர் அரவிந்த் சாமி, “நான் எனது 15 வயது வரை அப்பா, அம்மாவுடன் நசரத்பேட்டையில் உள்ள தோட்டத்தில்தான் தான் வசித்து வந்தேன்.
 
சிறு வயதில் விவசாயத்தில் இருந்ததால் விவசாயிகளின் கஷ்டம் எனக்கும் புரியும். அவர்களை கெளரவிக்கும் இப்படி ஒரு விழாவில் கலந்துக் கொண்டதில் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார். 
 
அடுத்து பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “இதுவரை எல்லா மேடையும் நம்மை மேலே தூக்கிச் செல்லும் வகையில் தான் இருக்கும்.
 
ஆனால், இந்த மேடை தான், நாம் யார், நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம், நமது அடிவேர் என்ன என்பதை அறிந்துகொள்ள உதவுகிறது.
 
விவசாயத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்பதை இங்கு வந்த பிறகு தான் அறிந்து கொண்டேன்.
 
இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது” என்றார்.
 
இந்த விழா, ஜனவரி 14, தமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்று, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் காலை 11.00 மணி முதல் 12.30 மணி வரை சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ளது.