திரைத் தெறிப்புகள் – 66 :
*
இயக்குநர் ஸ்ரீதரின் திரைப்படங்கள் என்றாலே பாடல்கள் தனிச்சிறப்புடன் இருக்கும். அவற்றில் குதூகலமும் இருக்கும், சிலவற்றில் இழையோடியபடி சோகமும் இருக்கும்.
அப்படி 1967-ம் ஆண்டில் ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான ‘ஊட்டி வரை உறவு’ என்கிற படம் ரசிகர்கள் பார்வையில் ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், கே.ஆர். விஜயாவும் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தில், ஒரு அருமையான காதல் பாடலை மென்மையான மெலடியாய்ப் பாடியிருப்பார்கள் டி.எம். சௌந்தரராஜனும், பி. சுசீலாவும்.
பசுமையான சூழலுக்கிடையே இப்படித் துவங்கும் அந்தப் பாடல்,
“பூமாலையில் ஓர் மல்லிகை – இங்கு
நான் தான் தேன் என்றது.
உந்தன் வீடு தேடி வந்தது இன்னும்
வேண்டுமா என்றது…”
காதல் உணர்வை மிக மென்மையான வரிகளில் வெளிப்படுத்தியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்.
“சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்.
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்.
கரும்போ, கனியோ, கவிதைச் சுவையோ
விருந்தோ கொடுத்தான், விழுந்தாள் மடியில்….” என்று நீளும் அந்தப் பாடல்.
உண்மையிலேயே ஊட்டி மலைப் பிராந்தியத்தில் பரவி இருக்கும் மென் குளிரை இப்பாடலில் உணர முடியும். இப்பாடலுக்கு அருமையாக இசையமைத்திருப்பவர் எம். எஸ். விஸ்வநாதன்.
“மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்.
மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்.
இளமை அழகின் இயற்கை வடிவம்.
இரவைப் பகலாய் அறியும் பருவம்…”
என்று இப்பாடல் நிறைவடையும்போது காதல் உணர்வை இவ்வளவு நளினமாகவும், நாகரீகமாகவும், கவித்துவமாகவும் சொல்ல முடியுமா? என்கிற அளவுக்கு இருக்கும்.
கவிஞர்கள் அப்போது எவ்வளவு மென்மையாக காதலைச் சொல்லியிருக்கிறார்கள் என்பதை இந்தப் பாடலின் கடைசி வரியில் உணரலாம்.
இப்படிப்பட்ட எளிமையும் ஒரு வசீகரம்தான்!
*
-மணா.
*