‘ஒரு வாரம் வெளியாகாமல் போனால், அடுத்து நல்லதொரு வாரத்தில் இடம்பிடிக்கலாம்’ என்று தள்ளி வைக்கப்பட்ட திரைப்பட வெளியீடுகள் ஒவ்வொரு மாத இறுதியையும் வட்டமிட்டு நிற்கும்.
ஆண்டு முழுவதும் அப்படிக் காத்திருப்பில் இருந்த படங்கள் டிசம்பர் மாதக் கடைசியைக் குறி வைக்கும். அந்த வகையில், இந்த வாரம் தியேட்டரை நிறைக்கச் சில படங்கள் வருகின்றன.
அனைத்தும் வரும் 27ஆம் தேதியன்று வெளியாகின்றன. ஆக, வழக்கம் போல இந்த ஆண்டிறுதியிலும் ‘சினிமா மழை’ கொட்டப் போகிறது.
அலங்கு:
செல்ஃபி, பகாசுரன் படங்களில் நடித்த குணநிதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் காளி வெங்கட், ஸ்ரீரேகா, மலையாள நடிகர்கள் செம்பன் வினோத் ஜோஸ், சரத் அப்பானி உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக – கேரள எல்லையோரத்தில் நிகழ்வதாக அமைந்த இக்கதையில் ஒரு நாய் முக்கியப் பாத்திரமாக இடம்பிடித்திருக்கிறது. எஸ்.பி.சக்திவேல் இதனை இயக்கியிருக்கிறார்.
கஜானா:
இனிகோ பிரபாகர், வேதிகா, யோகிபாபு, வேலு பிரபாகரன், சாந்தினி, ஹரீஷ் பேரடி, ராஜேந்திரன், செண்ட்ராயன், மறைந்த பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் பேண்டஸி அட்வெஞ்சர் வகைமையில் அமைந்தது. பிரபதீஷ் சாம்ஸ் இயக்கியிருக்கிறார்.
மழையில் நனைகிறேன்:
இரு வேறு மதங்களைச் சார்ந்த ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் காண்பதும் காதலில் உருகுவதும் இப்படத்தின் அடிப்படை. மலையாள நடிகர் அன்சன் பால், ‘பிகில்’ புகழ் ரெபா மோனிகா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.சுரேஷ்குமார் இதனை இயக்கியிருக்கிறார்.
தி ஸ்மைல்மேன்:
சரத்குமாரின் 150வது படம் என்கிற சிறப்போடு வெளியாகிறது ‘ஸ்மைல்மேன்’. போர்தொழில் பாணியில் இது ஒரு க்ரைம் த்ரில்லர் படமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இனியா, ஜார்ஜ் மரியான், சிஜா ரோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஷ்யாம் – பிரவீன் இணை இயக்கியிருக்கிறது.
திரு. மாணிக்கம்:
சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனன்யா, நாசர், தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ‘ஒரு கல்லூரியின் கதை’ நந்தா பெரியசாமி இயக்கியிருக்கிறார். சமீபகாலத்தில் பல தமிழ் இயக்குநர்கள் பாராட்டுகளை அள்ளிய படம் என்பதே இதன் அடையாளம்.
இன்னும் சில..
ராமகிருஷ்ணா, தருஷி, பட்டிமன்றம் ராஜா, சித்ரா லட்சுமணன், சுஜாதா, ராஜஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகிறது ‘வாகை’. இதனை ராம் சேவா இயக்கியிருக்கிறார்.
உமாபதி ராமையா இயக்கத்தில் தம்பி ராமையா, சமுத்திரக்கனி, எம்.எஸ். பாஸ்கர், இளவரசு, ஆடுகளம் நரேன், தீபா சங்கர், கிரிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ராஜாகிளி’யும் வரும் 27ஆம் தேதி வெளியாவதாகச் சொல்லப்படுகிறது.
இது போக கூரன், நெஞ்சு பொறுக்குதில்லையே, பீமா சிற்றுண்டி, இது உனக்கு தேவையா படங்களும் அன்றைய தினம் வெளியாகின்றன.
இந்தப் படங்கள் தியேட்டர்களுக்கு வருவதற்கு முன்னால், வரும் 25ஆம் தேதியே கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘பரோஸ் 3டி’, ‘மேக்ஸ்’ படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.
மோகன்லால் முதன்முறையாக இயக்கியுள்ள ‘பரோஸ் 3டி’ குழந்தைகளைக் குறிவைத்து தியேட்டர்களுக்கு இழுத்து வரும் வகையில் ஆக்ஷன் பேண்டஸி அட்வெஞ்சர் வகைமையில் அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சுதீப் நடித்த கன்னடப்படமான ‘மேக்ஸ்’ படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கியிருக்கிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கிறார்.
இவ்விரு படங்களின் தமிழ் பதிப்பும் வெளியாவதாகச் சொல்லப்படுகிறது. இறுதியாக, ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘பேபி ஜான்’ உட்படச் சில இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களும் வெளியாகவிருக்கின்றன.
இந்தப் படங்களைத் திரையிட வேண்டுமானால் திருமண மண்டபங்களைத்தான் குத்தகைக்கு எடுக்க வேண்டும்.
இந்த ஆண்டிறுதி திரைப்பட களேபரத்தில் ஜெயிக்கப் போவது யார்? எந்தப் படங்கள் எல்லாம் திரைக்கு வரும்? அவற்றில் எவையெல்லாம் நம் பார்வையில் படும்?
-மாபா