ரஜினி, கமல், விஜய் என தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களுடன் பயணித்த ஷங்கர், முன் எப்போதும் இல்லாத வகையில் படபடப்புடன் இருக்கிறார்.
ஜெண்டில் மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என தொடர்ச்சியாக வெற்றி படங்களைக் கொடுத்த அவர், முதன் முதலாக ‘பாய்ஸ்’ படத்தில் சறுக்கினார். புதுமுகங்களை வைத்து அவர் இயக்கிய அந்தப் படம், ஊடகங்களால் வறுத்தெடுகப்பட்டது.
எனினும் அடுத்த படமான ‘அந்நியன்’ படத்தில் ஷங்கர் விசுவரூபம் எடுத்தார். அதன் பிறகு அவர் தொட்டதெல்லாம் பொன்தான். ரஜினிக்கு மூன்று சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தார்.
‘பாய்ஸ்’ படத்துக்குப் பிறகு ஷங்கருக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி – ‘இந்தியன் -2’. இதனை அவர் எதிர்பார்க்கவில்லை. கொஞ்ச நாட்கள், மனதுக்குள் குமைந்து கொண்டிருந்தவர், இப்போது, பெரிதும் நம்பிக்கை வைத்துள்ள படம், ‘கேம் சேஞ்சர்’.
இந்தப் படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார், இவருடன் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், சமுத்திரக்கனி மற்றும் ஜெயராம் ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். எஸ். தமன் இசையமைத்துள்ளார், எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் பொங்கலையொட்டி, ஜனவரி 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ‘பான் இந்தியா’ படமாக ரிலீஸ் ஆகிறது.
பாடல்களுக்கு மட்டும் பல கோடி:
வழக்கமான ஷங்கர் படங்களைப் போன்று, இதுவும் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ளது. ‘கேம் சேஞ்சர்’ படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இதனைப் படமாக்க மட்டும் மொத்தம் 92 கோடி ரூபாயை ஷங்கர் செலவிட்டுள்ளார்.
வெளியீட்டுத் தேதி நெருங்கி வருவதால் படத்தின் ‘புரமோஷன்’ வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. அண்மையில் ‘புரமோஷன்’ நிகழ்ச்சி அமெரிக்காவின் டல்லாஸ் நகரத்தில் நடைபெற்றது.
நடிகர் ராம்சரண் பேசும்போது, “ஷங்கர் இயக்கும் படத்தில் நான் நடித்ததை என்னால் நம்ப முடியவில்லை – அவர் படத்தில் நடிப்பது என்பது என்னுடைய கனவு – நான் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்று குறிப்பிட்டார்.
“இது ஒரு அழகான பயணம் – கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ சினிமாவுக்கு ஷங்கர் – அவர் தான் நம்பர் ஒன் கமர்ஷியல் இயக்குநர்.
கடந்த 5 ஆண்டுகளில் இது என்னுடைய முதல் தனி திரைப்படம்” என மேலும் தெரிவித்தார், ராம்சரண்.
விழாவில். இயக்குநர் ஷங்கரும் மனம் திறந்தார்.
“எனது பாணியில் தனித்துவமான கதையுடன் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பினேன் – அதன் விளைவுதான் ‘கேம் சேஞ்சர்’.
கடந்த 30 ஆண்டுகளாக நான் நேரடி தெலுங்குப் படம் எடுக்கவில்லை என்றாலும், தெலுங்கு ரசிகர்கள் எப்போதும் என் மீது பெரும் அன்பு செலுத்தினர். ராம்சரணுடன் தெலுங்கில் அறிமுகமானதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
இந்தப் படம் தனக்கு ‘அக்னி பரீட்சை’ என நெருக்கமான வட்டாரங்களில் ஷங்கர் பகிர்ந்து உள்ளார்.
மக்கள் எத்தனை மதிப்பெண் கொடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
– பாப்பாங்குளம் பாரதி.