Take a fresh look at your lifestyle.

மார்ச்சில் தொடங்குகிறது ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு!

‘அண்ணாத்த’ படம் தோல்வி அடைந்ததால், சோர்வடைந்திருந்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை, பெரிய உயரத்துக்கு தூக்கிச்சென்ற படம் ‘ஜெயிலர்’.

‘அண்ணாத்த’ படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே, இதையும் தயாரித்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார். ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகிபாபு ஆகியோருடன் மோகன்லால், ஜாக்கிஷெராப், சிவராஜ் குமார் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்தனர்.

2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. முதல் ரிலீசிலேயே 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது.

அப்போதே இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க நெல்சன் திட்டமிட்டார். ரஜினி தயக்கம் காட்டினார். அவர், இதுவரை தனது படங்களின் இரண்டாம் பாகத்தில் நடித்ததில்லை.

பிரமாண்ட வெற்றிகண்ட ‘பில்லா-2’ படத்திலும் நடிக்க ரஜினி விரும்பவில்லை. அதனால்தான், அஜித், அந்தப் படத்தில் நடிக்க நேர்ந்தது.

இந்த நிலையில்தான், ஆரோக்கியமான விமர்சனங்களையும், பெரும் வசூலையும் நிகழ்த்திய ‘ஜெயிலர்-2’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் ரஜினி.

கதை – திரைக்கதையை எழுதி முடித்து விட்டார் நெல்சன்.

இப்போது ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு முடியவடைய உள்ளது.

அதைத் தொடர்ந்து ‘ஜெயிலர்-2’ படத்தின் ஷுட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

– பாப்பாங்குளம் பாரதி.