-25வது ஆண்டு திரையுலகப் பயணத்தில் இயக்குநர் பாலா; விழா எடுத்து கொண்டாடிய தமிழ் திரையுலகம்!
1999-ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா.
தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் பாலாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விழாவும் சென்னை வர்த்தக மையத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் முன்னிலையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் இயக்குநர்கள் சீமான், மிஷ்கின், சமுத்திரக்கனி, ஏ.எல். விஜய், லிங்குசாமி, ராம், மணிரத்னம், கே. பாக்கியராஜ், மாரி செல்வராஜ், விக்ரமன், ஆர். வி. உதயகுமார், கே. எஸ். அதியமான், வினோத் (கொட்டுக்காளி), பிருந்தா சாரதி, வசந்த பாலன், சீனுராமசாமி, கஸ்தூரி ராஜா, பேரரசு, பொன்ராம், V.Z. துரை, சிங்கம் புலி, சரண், அரவிந்த் ராஜ், எழில், கோபிநாத் (ஜீவி), பி. எஸ் வினோத் ராஜ், பாரி இளவழகன், ஜி. ஆர். ஆதித்யா, நாகேந்திரன், சுரேஷ், அஜயன் பாலா, கேபிள் சங்கர், அறிவழகன் (ஈரம்), சுசீந்திரன், மீரா கதிரவன், மூர்த்தி, நித்திலன், நம்பிராஜன்,
நடிகர்கள் சிவக்குமார், விஜயகுமார், சூர்யா, சிவகார்த்திகேயன், ஜி. வி பிரகாஷ், கருணாஸ், தம்பி ராமையா, மன்சூரலிகான், வெற்றி, பிரஜின், பிரதீப், சிவாஜி, அரீஷ் குமார், ஆர்.கே சுரேஷ், கூல் சுரேஷ், சூப்பர் குட் சுப்பிரமணி, வீரா, அப்புக்குட்டி, ஏ.எல். உதயா, ஆர். கே. கிரண் (ஆர்ட் டைரக்டர்).
தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், ஏ.எல். அழகப்பன், தனஞ்செயன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, P L தேனப்பன், சித்ரா லஷ்மண், வெற்றிக்குமரன்.
நடிகைகள் கருத்தம்மா ராஜஸ்ரீ, சாயா தேவி, வரலஷ்மி, காயத்ரி ரகுராம், அபிதா, வேதிகா, ரித்தா, வசுந்தரா, மதுமிதா, பிரிகிடா, ஜுலி, ஸ்வேதா டோரத்தி உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த விழாவை தொகுப்பாளினி அர்ச்சனா மிகச்சிறப்பான முறையில் தொகுத்து வழங்கினார்..
நிகழ்ச்சியின் துவக்கத்தில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த படங்களின் ஹிட் பாடல்களைப் பாடி அசத்தினார்கள். அடுத்து வந்த தப்பாட்டம் அரங்கை அதிரவைத்து அடங்கியது.
நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார், “நான் சினிமாவிற்கு வருவதற்கு மிக முக்கிய தூண்டுதலாக இருந்தவர்களில் முக்கியமானவர் இயக்குநர் பாலா. அவருடைய 25வது வருட விழா என்பது எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஏனென்றால் அவரது பல படங்களில் நான் இசையமைத்திருக்கிறேன்.
அவரது டைரக்ஷனில் நடித்திருக்கிறேன். அந்த வகையில் எனக்கு நடிப்பில் அவர்தான் குரு. ‘வணங்கான்’ படத்திற்கு நான் பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். சாம் சி.எஸ் பின்னணி இசை அமைத்திருக்கிறார்” என்று கூறினார்.
இயக்குநர் மிஷ்கின், “ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் சரியாக போகாத நிலையில் அப்படியே சோர்வுடன் அண்ணன் பாலா ஆபீஸ் இருந்த தெரு வழியாக வந்து கொண்டிருந்தேன். அப்போது என்னை பார்த்து பாலா உள்ளே அழைத்து ஆறுதல் படுத்தினார். கண்ணீரும் விட்டார்.
அடுத்து உடனே என்னிடம் நான் தயாரிக்கும் படத்தை நீ இயக்குகிறாயா என்று ஒரே வார்த்தை தான் கேட்டார். அப்படி அவர் எனக்கு மறுவாழ்வு கொடுத்த படம் தான் பிசாசு.
தோல்வியால் என் மீது எனக்கே நம்பிக்கை குறைந்திருந்த நிலையில் என்னை உற்சாகப்படுத்தி மேலே அழைத்து வந்தவர் அண்ணன் பாலா தான்.” என்று கூறினார்.
நடிகர் கருணாஸ், “இன்று நான் உங்கள் முன்னால் ஒரு நடிகனாக நிற்கிறேன் என்றால் இதற்கான அடையாளத்தை கொடுத்தது எனது குருநாதர் அண்ணன் பாலா தான்.
அவருடைய இந்த 25 ஆவது வருட விழாவிலும் அவர் இயக்கியுள்ள இந்த வணங்கான் பட இசை வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன்” என்று கூறினார்.

நடிகர் மன்சூர் அலிகான், “இயக்குநர் பாலா ஒரு ஒப்பீடற்ற உலகத்தரம் வாய்ந்த இயக்குநர்.
ஜாதி, மதம், இனம் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு கொரியன், அமெரிக்கன் போன்ற படங்களுடன் போட்டி போடக்கூடிய வகையில் மக்களுடைய வாழ்வியலை சரியாக படம் பிடித்து தன்னுடைய படங்களில் காட்டியவர்.
அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது” என்று கூறினார்.
நடிகை வரலட்சுமி, “இயக்குநர் பாலாவை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால் என்னுடைய குரு அவர்தான். அவருக்காக தான் இந்த விழாவிற்கு நான் வந்திருக்கிறேன்.
என்னுடைய அம்மா இந்தப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகி இருக்கிறார். இரட்டிப்பு சந்தோஷத்துடன் வந்திருக்கிறேன்” என்று கூறினார்.
இயக்குநர் சீனு ராமசாமி, “எங்கள் பாலு மகேந்திரா சார் பட்டறையிலிருந்து முதன்முதலாக இயக்குநராகி அந்த நம்பிக்கை ஒளியை ஏற்றியவர் அண்ணன் பாலா தான். பாலு மகேந்திரா பட்டறையின் தலை மகன் என்று அவரை சொல்லலாம்.
அவருடைய ஒவ்வொரு பல தலைப்புகளும் அவரின் சுபாவத்தை, அவரது நம்பிக்கையை, கருணையை கேள்வியை வெளிக்காட்டுவது போலவே இருக்கும்” என்று கூறினார்.
நடிகரும் சண்டை பயிற்சியாளருமான ஸ்டண்ட் சில்வா, “ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு இயக்குநர்கள் தங்களது படங்களால் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். அந்த வகையில் இயக்குநர் பாலாவும் தன் பங்களிப்பை அதில் கொடுத்திருக்கிறார்.
அவரது படங்களைப் பார்த்து ரசித்து வளர்ந்த எனக்கு தற்போது வணங்கான் படத்தின் மூலம் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு முதன் முறையாக கிடைத்துள்ளது.
பாலா ஒரு டெரரான மனிதர் என்று என்னை பயமுறுத்தினார்கள். ஆனால் அவருடன் பழகும் போது தான் தெரிந்தது அவர் ஒரு குழந்தை என்று” என்றார்.