Take a fresh look at your lifestyle.

விஜய்யின் ஆரம்ப கால வெற்றிகளில் ஒன்றான ‘செல்வா’!

நடிகர் விஜய்யின் ஆரம்பகாலப் படங்கள் ஒவ்வொன்றுமே இன்று பார்க்கையில் வெவ்வேறு அனுபவங்களைத் தருவதாக உள்ளன. செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்ளே ஆகியவற்றின் வெற்றிகள் படிப்படியாகத் திரையுலகில் கண்ட வளர்ச்சியை வெளிக்காட்டுவதாக இருந்தன. ‘பூவே உனக்காக’ அவற்றையெல்லாம் ஊதித்தள்ளும்விதமாக ‘ப்ளாக்பஸ்டர்’ ஆக அமைந்தது. அதன்பின் வசந்த வாசல், மாண்புமிகு மாணவன் படங்கள் சுமார் வெற்றியைப் பெற்றன.

அந்த வரிசையில் இன்னொரு வெற்றிப்படமாக இடம்பெற்றது ஏ.வெங்கடேஷ் இயக்கிய ‘செல்வா’. அதுவரை வந்த விஜய் படங்களை விடப் பிரம்மாண்டமான தயாரிப்பாக இது இருந்தது. அதனால், திரையுலகினரைச் சேர்ந்தவர்களே திரும்பிப் பார்க்கிற வகையில் இப்படத்தின் வருகை அமைந்தது.

கமர்ஷியல் பட பார்முலா!

ஆபத்தில் சிக்கும் ஹீரோயினை ஹீரோ காப்பாற்றுவார் என்பதே கமர்ஷியல் படங்களின் பொதுவான சாராம்சமாக இருந்து வந்திருக்கிறது. ‘செல்வா’வும் அப்படியொரு படம் தான்.

விஜய் ஹீரோ என்றால், படத்தில் சுவாதி, ரீவா பப்பர் என்று இரண்டு ஹீரோயின்கள் உண்டு. வழக்கம்போல, அதிலொருவர் இன்னொரு நாயகியைப் பார்த்து பொறாமைப்படுவார் என்பதெல்லாம் ரசிகர்களான நமக்கு அத்துப்படியான விஷயம் தான்.

இதில் ரகுவரன் விஜய்யின் தந்தையாக வருவார். ‘காதலன்’ டைப்பில் ரகுவரனே வில்லனாகவும் இடம்பெற்றிருக்கிறார்.

மேற்சொன்ன விஷயங்களைச் சொன்னவுடன், சுமாராக நம் மனதில் வந்து போகும். அது போக, இலங்கை அதிபரின் மகள் இந்தியாவுக்கு வருவதாக இன்னொரு ‘ட்ராக்’கை சேர்த்திருப்பார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். அந்தப் பெண்ணாகத்தான் ரீவா நடித்திருப்பார். விஜய் வசிக்கும் குடியிருப்பைச் சேர்ந்த பெண்ணாக சுவாதி வருவார்.

இரு ஹீரோயின்களோடு சேர்ந்து ஹீரோ ஆடும் பாடல்கள் இதிலுண்டு. அதேநேரத்தில், அந்த காலகட்டத்திலேயே ஒரு ‘ஆக்‌ஷன் ஹீரோ’வாக ’செல்வா’வில் விஜய்யை முன்னிறுத்தியிருப்பார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். அதனால் ‘கமர்ஷியல் பட பார்முலா’வில் அனைத்து அம்சங்களும் கலந்ததாக இப்படம் ரசிகர்களுக்குத் தென்பட்டது.

’கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் அருவி சூழ்ந்த மலைப்பகுதியில் விஜய் ‘டூப்’ பயன்படுத்தாமல், அபாயத்தைப் பொருட்படுத்தாமல் நடித்ததை இன்றும் தன்னால் மறக்க முடியாது’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.

ராஜன் பி.தேவ், செந்தில், மணிவண்ணன், ஜெயசித்ரா, விசித்ரா, சி.ஆர்.சரஸ்வதி உட்படப் பலர் இதில் உண்டு. அவர்களது பங்களிப்பே இப்படத்தின் உள்ளடக்கத்தைச் செறிவானதாக ஆக்கியது.

சிறப்பான ஒருங்கிணைப்பு!

’செல்வா’ படத்தின் கதையை எழுதியவர் மஜீத். இவர்தான் விஜய்யை நாயகனை வைத்து ‘தமிழன்’ படத்தைத் தந்தவர்.

சிலம்பாட்டம், சிப்பாய் படங்களை இயக்கிய சரவணன் இதற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். பேரரசு இயக்கிய திருப்பாச்சி, திருப்பதி, தர்மபுரி படங்களின் ஒளிப்பதிவாளர் இவரே.

பி.லெனின் – வி.டி.விஜயன் இணை இப்படத்தைத் தொகுத்திருந்தது. இவர்கள் பணியாற்றிய கமர்ஷியல் படங்கள் அனைத்துமே திரையில் பரபரப்பான அனுபவத்தைத் தருவதாக இருக்கும். ‘செல்வா’வும் அதிலொன்றாக இருந்தது.

வசந்தகாலப் பறவைகள், சூரியன் படங்களை இயக்கிய பவித்ரன் இதனைத் தயாரித்திருந்தார். ஏ.வெங்கடேஷ் ஆரம்பகாலத்தில் இப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார்.

மகாபிரபு படத்திற்குப் பிறகு அவர் இயக்கிய இரண்டாவது படம் இது. இதனைத் தொடர்ந்து விஜய்யை நாயகனாகக் கொண்டு நிலாவே வா, பகவதி படங்களை இயக்கினார். சாக்லேட், தம், குத்து, ஏய், மலை மலை ஆகிய படங்கள் அவரது வெற்றிப் படங்களில் முக்கியமானவை.

வெவ்வேறுவிதமான நடிப்புக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களைச் சரியான வகையில் ஒருங்கிணைத்து இப்படத்தைத் தந்திருந்தார் ஏ.வெங்கடேஷ். அதுவே திரையுலகில் அடுத்தடுத்து படங்களைப் பெறக் காரணமானது.

‘செல்வா’வின் வெற்றியின் இசையமைப்பாளர் சிற்பியின் பங்களிப்பும் மிக முக்கியமானது.

வித்தியாசமான இசை!

‘காதலன்’, ‘ஜெண்டில்மேன்’ பாணியில் இப்படத்திற்குப் பின்னணி இசை தந்திருந்தார் சிற்பி. அது, ஆக்‌ஷன் காட்சிகளை ரசிகர்கள் பிரமித்துப் பார்க்க வைத்தது.

பாடல்களைப் பொறுத்தவரை, இப்படத்தில் வித்தியாசமானதொரு இசை அனுபவத்தைக் கொடுத்தார்.

அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, ‘செல்வா’ திரைப்படம் என்றதும் ‘சிக்கன் கறி’ பாடல் தான் நினைவுக்கு வரும். துள்ளல் இசை கொண்ட அப்பாடலை விஜய் உடன் இணைந்து சிற்பியும் ஸ்வர்ணலதாவும் பாடியிருப்பர். குறிப்பாக, வித்தியாசமாக ஒலித்த சிற்பியின் குரல் இன்றளவும் அதே துள்ளலை நமக்குள் விதைக்கத்தக்கது.

ரகுவரனின் வில்லத்தனத்தைக் காட்டுவதில் இருந்து இப்படத்தின் திரைக்கதை தொடங்கும். அதுவே டைட்டில் காட்சியாகவும் இருந்தது. அதற்கடுத்தாற் போல, ரஜினிகாந்த் பாணியில் இதில் ‘டோண்ட் கேர் மாஸ்டர்’ பாடலோடு விஜய்யின் அறிமுகம் அமைக்கப்பட்டிருந்தது. மனோ பாடிய அந்தப் பாடல், விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மனோ உடன் சுஜாதா இணைந்து பாடிய ‘பொட்டபுள்ள மனசு’ பாடலும், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் – ஸ்வர்ணலதா கூட்டணியின் ‘தரையில் நடக்குது தாமிரபரணி’ பாடலும் டூயட் பாடல்கள் என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை.

இது போக ‘லப்பு டப்பு’ எனும் பாடலில் அதிரும் இசையோடு சுரேஷ் பீட்டர்ஸ், ஸ்வர்ணலதா, தீபிகாவின் குரல்கள் இடம்பெற்றன.

படம் வெளியான காலகட்டத்தில் இப்பாடல்கள் கவனிப்பைப் பெற்றாலும், அதன்பிறகு விஜய் ரசிகர்களிடத்தில் அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ரசிகன், தேவா, கோயம்புத்தூர் மாப்ளே, சந்திரலேகா, பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், நிலாவே வா, துள்ளாத மனமும் துள்ளும், என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சார கண்ணா என்று விஜய்யின் படங்களில் மொத்த ஆல்பமும் ‘ஹிட்’ ரகங்களாக அமைந்ததும், அவை தொடர்ந்து வானொலி, தொலைக்காட்சிகளில் இடம்பெற்றதும் அதற்குக் காரணமாக இருக்கலாம். அவற்றின் புகழ் வெளிச்சத்தில் ஏனோ ‘செல்வா’ அமிழ்ந்துவிட்டது.

ஆனால், இன்று ‘செல்வா’வைக் காணும் விஜய் ரசிகர் ஒருவர் மகிழும் வகையிலேயே இப்படமும் பாடல்களும் அமைந்திருக்கின்றன. அதுவே இப்படத்தின் வெற்றியைத் தனித்துவமானதாகக் காட்டும்!

  • மாபா