தமிழில் ஷங்கர் போன்று, தெலுங்கு சினிமா உலகில் பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்தவர் எஸ்.எஸ். ராஜமௌலி.
இவரது கை வண்ணத்தில் உருவான ‘பாகுபலி’ இரண்டு பாகங்களும், இதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய ஆர்.ஆர்.ஆர்., படமும் நல்ல விமர்சனத்தைப் பெற்றதோடு, வசூலிலும் சாதனை புரிந்தது.
‘ஆர்.ஆர்.ஆர்’ வெற்றியை அடுத்து, ராஜமௌலி, தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ்பாபு நடிக்கும் படத்தை டைரக்டு செய்ய உள்ளார்.
இந்தப் படத்தின் கதையை ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதி உள்ளார். இப்போதுதான் கதையை எழுதி முடித்துள்ளார்.
“இந்தப் படத்தின் கதையை எழுத எனக்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது. பார்வையாளர்களுக்கு, ஒரு புதிய உலகத்தைப் பார்த்த அனுபவம் கிடைக்கும்” என பிரசாத் சொல்லி இருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
படத்தின் பட்ஜெட் ஆயிரம் கோடி ரூபாய் என முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பட்ஜெட்டையும் தாண்டும் என்கிறார்கள் தகவலறிந்த வட்டாரங்கள். அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.
ராஜமௌலியின் இனிஷியலையும், மகேஷ் பாபு பெயரையும் சேர்ந்து ‘SSMB 29’ என இந்தப் படத்துக்கு தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
படத்தில் மகேஷ்பாபு, அனுமானின் குணாதிசயங்களையொட்டிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவரது தோற்றம் வித்தியாசமாக இருக்கும், அதற்கு மகேஷ்பாபு தயாராகி வருவதால், ஷுட்டிங் தொடங்கி, முடிவடையும் வரை அவர் பொதுவெளியில் தோன்ற மாட்டார் என்கிறார்கள்.
இந்தப் படம் ராஜமௌலியின் பாகுபலி போன்று, இரண்டு பாகங்களாக உருவாகிறது என்பது லேட்டஸ்ட் தகவல்.
– பாப்பாங்குளம் பாரதி.