அன்பு நண்பரும், எம்.ஜி.ஆர் அவர்களின் பேரனுமான டாக்டர் குமார் ராஜேந்திரன் இன்று எனக்கு அனுப்பியது இந்தப் புகைப்படம்.
எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தில் தன்னைக் காண வருபவர்களைச் சந்திக்கும் வரவேற்பரையில் வைக்கப்பட்டிருந்தது தலைவர் கலைஞர் புகைப்படம்.
(இந்தப் படம், பேரறிஞர் அண்ணா காலத்தில் 1962 – ல் திமுகவுக்காக தலைவர் கலைஞர் பிரச்சாரம் செய்தபோது எடுத்த படம்)
ஆனால், எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து விலக்கப்பட்டு அண்ணா திமுகவைத் துவக்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போதும், எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்தில் இருந்த வரவேற்பறையில் கலைஞருடைய புகைப்படத்தை எடுக்காமல் வைத்திருந்தது நெழ்ச்சியைத் தருகின்றது.
எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், நட்பு ரீதியில் அன்பும், பாசமும் இருவருக்கும் இடையே அதிகமாகவே இருந்தது.
திருச்செந்தூர் நோக்கி (கோவிலில் முருகன் வேல் களவு போனபோது) மதுரையிலிருந்து நீதி கேட்டு நெடிய பயணம் மேற்கொண்டார் கலைஞர்.
எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கண்டித்து சென்றபோதுகூட முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., தலைவர் கலைஞரின் உடல்நிலையை மனதில் கொண்டு அக்கறையோடு “பார்த்து சென்று வாங்க” என்றார்.
அதனால்தான் எம்.ஜி.ஆர். மறைந்த செய்தியைக் கேட்டதும் ஈரோட்டில் மாவட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த கலைஞர், ஏற்காடு எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை திரும்பி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேராக ராமாபுரம் தோட்டத்திற்குச் சென்று அந்த விடியல் பொழுதில் முதன்முதலாக எம்.ஜி.ஆர் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் என்பதெல்லாம் செய்திகள்.
எம்.ஆர்.ராதா இந்த அறையில்தான் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை 1967ல் சுட்டார். இங்குதான் முதன்முதலாக எம்.ஜி.ஆரை பிரபாகரனும் நானும் சந்தித்தோம்.
எம்.ஜி.ஆர் மறைவு அன்று, அண்ணா சாலையில் இருந்த கலைஞருடைய சிலையை சிலர் உடைக்க, அதற்காக ஜானகி அம்மையார் வருத்தப்பட்டதும் உண்மை. கலைஞர் அவர்கள் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு தனது கருத்தைக் கூறினார்.
திரு. குமார் ராஜேந்திரன் இந்தப் படத்தை எனக்கு அனுப்பியவுடன் இந்தத் தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது. இது கடந்த கால செய்திகள் மட்டுமல்ல, இன்றைய அரசியல் சூழலில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டியதும் ஒன்று.
– வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்