Take a fresh look at your lifestyle.

ஆதங்கப்படும் நடிகைகள்: கேள்விகள் நியாயம் தானா?

ஒரே நேரத்தில் பிரபல நடிகைகள் நயன்தாரா, கஸ்தூரி, ஜோதிகா ஆகியோர் ஊடகங்களில் பரபரப்பு செய்தியாகியுள்ளனர்.

‘போலி முகமூடி அணிந்து வலம் வரும் தனுஷ்’ என கடும் சொற்களால் நயன்தாரா, தனுஷை குற்றம் சாட்டியுள்ள நிலையில், ‘கங்குவா’ படம் குறித்த விமர்சனங்களுக்கு ஜோதிகா ஆத்திரத்தோடு பதில் அளித்துள்ளார்.

தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து, கைதட்டல்களுக்காக அவதூறாகப் பேசி, சிறையில் அடைக்கப்படும் சூழலுக்கு ஆளாகியுள்ளார் கஸ்தூரி. மூன்று நட்சத்திரங்களின் கொதிப்பையும், குமுறலையும் விவரமாகப் பார்க்கலாம்.

புழல் சிறையில் கஸ்தூரி:

சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற திரைப்பட நடிகை கஸ்தூரி, தெலுங்கு மொழி பேசுவோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்தார்.

‘அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சென்னை மற்றும் மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகங்களில் தெலுங்கு அமைப்புகள் புகார் அளித்தன.

கஸ்தூரி மீது மதுரை திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீசார் இறங்கியதால், முன்ஜாமின் கேட்டு கஸ்தூரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

கஸ்தூரிக்கு முன்ஜாமின் வழங்க, அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கஸ்தூரி தரப்பில், தான் பேசியதில் தவறு ஏதும் இல்லை என வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து கஸ்தூரி தலைமறைவானார். அவரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே பப்பலக்குடா என்ற இடத்தில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணா வீட்டில் பதுங்கி இருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ‘எனது பேச்சில் எந்தவித உள்நோக்கமும் இல்லை – படித்துத் தெரிந்து கொண்ட கருத்தையே நான் பதிவு செய்தேன் – அந்தக் கருத்தை நான் திரும்ப பெற்ற பின்பும் என் மீதான நடவடிக்கை தேவை இல்லாதது’ என அவர் விளக்கம் அளித்தார்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரை போலீசார் வேனில் அழைத்து சென்றார்கள். அப்போது கஸ்தூரி, ‘அரசியல் அராஜகம் ஒழிக.. நீதி வெல்லட்டும்’ என முழக்கமிட்டார். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

‘நான் ‘சிங்கிள் மதர்’… என்னை சிறையில் அடைக்க வேண்டாம்’ என அவர் கோரிக்கை வைத்தார். போலீசார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவரை, வரும் 29 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தனுஷை வறுத்தெடுத்த நயன்தாரா:

நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமண வீடியோ ‘நெட்பிளிக்ஸ்’ ஒடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

இந்த ஆவணப்படத்தின் டிரெய்லரில், ‘நானும் ரௌடி தான்’ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட 3 விநாடி வீடியோ பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வீடியோவை பயன்படுத்தியதற்காக, நயன்தாராவிடம், படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ், 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்துள்ள நயன்தாரா, தனுஷை வசைபாடி நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், 3 வினாடி வீடியோவை பயன்படுத்தியதற்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்பது வினோதமாக உள்ளது – கீழ்த்தரமான இந்தச் செயல், நீங்கள் எப்படிபட்ட மனிதர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது’ என அர்ச்சனை செய்துள்ளார்.

‘உங்களது இழிவான செயல்களை மறைத்துக்கொண்டு, போலி முகமூடி அணிந்து உங்களால் வலம் வர முடியும் – எல்லாவற்றையும் கடவுள் பார்த்து கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்’ என நயன்தாரா சாபமிட்டுள்ளார்.

நயன்தாராவுக்கு ஆதரவாகப் பல்வேறு நடிகைகள் அவருடைய அறிக்கையை இன்ஸ்டாகிராம் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து ஆதரவு தெரிவித்துள்ளனர், இந்தக் குற்றச்சாட்டு குறித்து நடிகர் தனுஷ் தரப்பில் நேரடியாக விளக்கம் அளிக்கப்படவில்லை.

ஜோதிகாவின் ஆவேசம்:

சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் கடந்த 14 ஆம் தேதி திரைக்கு வந்தது. முதல் காட்சி முடிந்தவுடன் சமூக வலைத்தளங்களில், இந்தப் படம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்கள் பரவின. இதனால் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா ஆத்திரம் அடைந்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் ‘கங்குவா’ படம், சினிமாவில் ஒரு வியக்க வைக்கும் சாதனை – முதல் அரை மணி நேரம் சரியாக இல்லை என்பதையும், சத்தம் அதிகம் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

‘ஊடகங்களிலும், சில சமூக வலைத்தளங்களிலும் இருந்து வரும் எதிர்மறை விமர்சனங்கள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன.

முன்பு பார்த்த மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் பழைய கதைகளுடன் பெண்களை துரத்துவது, இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் பேசுவது, மிகையான ஆக்ஷன் காட்சிகள் போன்றவற்றுக்கு இந்த அளவிலான விமர்சனங்கள் யாரும் செய்யவில்லை.

ஆனால் ‘கங்குவா’ படத்தின் முதல் நாள், முதல் காட்சி முடிவதற்கு முன்பே இவ்வளவு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இப்படம் தகுதியான ஒரு படமாக இருந்தபோதும், ஒரு குழுவாக திட்டமிட்டு எதிர்மறை விமர்சனங்கள் பரப்புவது ஏனென்று தெரியவில்லை.

‘கங்குவா படக்குழுவினரே, நீங்கள் பெருமையுடன் இருங்கள் – ‘நெகடிவ் கமெண்ட்’ அடிப்பவர்கள், அடித்துக்கொண்டே இருக்கட்டும் – அவர்களால் அதுதான் செய்ய முடியும்’ என ஜோதிகா, அந்த அறிக்கையில் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.

ஜோதிகாவும் அந்த விமர்சனங்களுக்கு கண்டன அறிக்கைதான் வெளியிட முடியும். வேறு என்ன செய்ய முடியும்?

– பாப்பாங்குளம் பாரதி.