Take a fresh look at your lifestyle.

‘கேம் சேஞ்சர்’ படத்தில் இரட்டை வேடத்தில் ராம்சரண்!

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராம்சரண். தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ சிரஞ்சீவியின் மகன். இதற்கு முன்னர் ராஜமவுலியின் இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடித்திருந்தார்.

ஆக்கப்பூர்வமான விமர்சனத்தையும் நல்ல வசூலையும் அள்ளிய அந்தப் படத்தைத் தொடர்ந்து, ராம்சரண் நடித்து முடித்துள்ள படம் ‘கேம் சேஞ்சர்’.

நம்ம ஊர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் டைரக்ட் செய்துள்ள இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார்.

அரசியல் படம். ஊழலை களை எடுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடித்துள்ளார் ராம்சரண். அவருக்கு ஜோடியாக நடித்துள்ள கியாரா அத்வானியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி வேடத்தில் வருகிறார்.

இவர்கள் தவிர அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு படத்தைத் தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சுமார் 3 ஆண்டுகள் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ஜூலையில் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்தது.

ராம்சரண் – கியாரா ஜோடியின் பாடல் காட்சி ஒன்று, உலகின் பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

‘கேம் சேஞ்சர்’ டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் இன்னும் முடிவடையாததால், இந்தப் படம் பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நாளில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘விஸ்வம்பரா’ திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தந்தை – மகன் இருவரின் திரைப்படங்களும் ஒரே நாளில் மோதுகின்றன. ‘கேம் சேஞ்சர்’ படத்தில் ராம்சரண், இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘இந்தியன்-2’ திரைப்படம் தோல்வி அடைந்துள்ள நிலையில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் வெற்றி, அவருக்கான அக்னி பரிட்சையாக பார்க்கப்படுகிறது.

– பாப்பாங்குளம் பாரதி