Take a fresh look at your lifestyle.

‘கஜினி’ இரண்டாம் பாகம் உருவாகிறது!

சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, யோகிபாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கங்குவா’.

எரிமலையை வழிபடும் இனக்குழுவை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள வரலாற்றுப் புனைவு. சென்னை, கோவா, ஐதராபாத், கொடைக்கானல், ராஜமுந்திரி, பாங்காக் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

அடுத்த மாதம் (நவம்பர்) 14 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 8 மொழிகளில் உலகம் முழுக்க வெளியாக உள்ளது இந்தப்படம்.

இதனால், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடியாகச் சென்று ஊடகங்களை சந்தித்து ‘கங்குவா’வை விளம்பரப்படுத்தி வருகிறார் சூர்யா.

ஐதராபாத் சென்ற அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் சூர்யா கண் கலங்கினார். அப்போது பேசிய அவர், ‘எனக்கும், ஆந்திர ரசிகர்களுக்கும் ரத்த சம்மந்தம் உள்ளது’ என உணர்ச்சி வசப்பட்டார்.

மும்பையில் நடைபெற்ற பட ‘புரமோஷன்’ நிகழ்ச்சியில் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது ‘கஜினி-2’ திரைப்படம் உருவாக வாய்ப்பு உள்ளதா? என செய்தியாளர்கள் சூர்யாவிடம் வினா எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சூர்யா, “நீண்ட நாட்கள் கழித்து தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், ‘கஜினி 2’ திரைப்படம் எடுக்கும் எண்ணத்துடன் என்னிடம் வந்து பேசினார். கண்டிப்பாக பண்ணலாம் என கூறியிருக்கிறேன். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அது நடக்கலாம்” என தெரிவித்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கஜினி’.

2005 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் அமீர்கான் நாயகனாக நடிக்க 2008 ஆம் ஆண்டு இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அதையும் ஏ.ஆர்.முருகதாஸே இயக்கினார்.

இரண்டு படங்களும் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

– பாப்பாங்குளம் பாரதி.