திரைத் தெறிப்புகள் – 42:
*
வாழ்வின் மீது நம்பிக்கை ஊட்டும் பல திரைப்படப் பாடல்கள் வெளி வந்திருக்கின்றன. அதேசமயம், வாழ்வின் அபத்தத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் யதார்த்தமாக, சித்தர்கள் பாணியில் வெளிப்படுத்தும் பாடல்களும் வெளி வந்திருக்கின்றன.
1962-ம் ஆண்டில் வெளிவந்த ‘பாத காணிக்கை’ படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதி இருக்கும் பாட்டும் இந்த ரகத்தைச் சேர்ந்தது தான்.
ஊன்றுகோலுடன் நடந்து வந்தபடியே நடிகர் அசோகன் பாடுவதாக அமைந்திருக்கும் இந்தப் பாடலை அழுத்தமாகப் பாடியிருப்பவர் டி.எம்.சௌந்தரராஜன்.
இந்தப் பாடல் இப்படி ஆரம்பிக்கும்;
“ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடு விட்டு ஆவி போனால்
கூடவே வருவதேன்ன…?”
– என்று துவங்கும் பாடல், பணத்திற்காக எந்த அற நெறிகளுக்கும் உட்படாமல், அதிகாரத்தில் இருந்தபடி ஆட்டம் போடும் எந்த மனிதருக்கும் பொருந்தும்.
அதிகாரப் பின்புலத்தோடு எவ்வளவு உயரத்திற்குப் போனாலும், ஒருநாள் சரிவைச் சந்தித்து, வாழ்வின் வெறுமையை உணர நேரிடும் என்பதைக் குறியீடாக உணர்த்துகிறது எம்.எஸ்.விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் இசையமைத்திருக்கிற இந்தப் பாடல்.
“வீடுவரை உறவு.
வீதி வரை மனைவி.
காடு வரை பிள்ளை.
கடைசி வரை யாரோ…?
ஆடும் வரை ஆட்டம்.
ஆயிரத்தில் நாட்டம்.
கூடிவரும் கூட்டம்
கொள்ளி வரை வருமா…?”
– என்கிற பாடலில் தென்படுவது பட்டினத்தாரின் சாயல்.
“தொட்டிலுக்கு அன்னை.
கட்டிலுக்குக் கன்னி.
பட்டினிக்குத் தீனி.
கெட்ட பின்பு ஞானி…”
என்று முழுக்க தத்துவப் பார்வையை மையப்படுத்தியபடி நகர்கிறது இந்தப் பாடல்.
“விட்டுவிடும் ஆவி.
பட்டு விடும் மேனி.
சுட்டுவிடும் நெருப்பு.
சூனியத்தில் நிலைப்பு…”
-என்று சூனியத்தைச் சுட்டியபடி நிறைவு பெற்றிருக்கும் இந்தப் பாடல், நன்றாக வாழ்ந்து சரிந்தவர்களுக்கு நிகழ்கால எச்சரிக்கையாகவும், சரியப் போகிறவர்களுக்கு எதிர்கால எச்சரிக்கையாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிற என்பதே கவியரசர் பாடலின் சிறப்பு.
– மணா