ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் ‘கடைசி உலகப்போர்’. மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம்.
ராப் பாடகராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நாசர், நட்டி, அனகா, என். அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், சிவா சாரா RA,FJ,குஹன் பிரகாஷ், ராக்கெட் ராஜேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுந்தர்.சி: என்னோட மகள் கல்லூரியில் புதிதாக அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறார், அதை என் மனைவி வீடியோ எடுத்து அனுப்பி வைத்தார். அதைப்பார்த்த போது, எனக்குக் கண்ணீர் வந்தது. அதே போல் தான் என் தம்பிகளைப் பார்க்கும்போதும் வருகிறது.

என்னிடம் வெறும் தன்னம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு வந்து, இன்று தயாரிப்பு நிறுவனம் வரை வளர்ந்து வந்திருப்பது மகிழ்ச்சி.
ஆதியை மட்டும் தான் நான் அறிமுகப்படுத்தினேன், ஆனால் அவர் பல பேரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அவர் படத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை எனக்குத் தருமளவு, என் மீது அவர்கள் வைத்துள்ள மரியாதைக்கு நன்றி என்றார்.
நடிகர் நட்டி (எ) நட்ராஜ் பேசியது: இந்தப் படத்தில் என் பெயரிலேயே நடித்திருக்கிறேன். நானும் சுந்தர் சி குடும்பத்திலிருந்து வந்தவன் தான். ஹிப் ஹாப் ஆதியைப் பார்த்து மிக மகிழ்ச்சியாக உள்ளது.
இந்தப்படத்தின் கதையைக் கேட்டுப் பிரமித்துவிட்டேன், இந்த வயதில், இப்படி ஒரு கதை எழுதி, எடுப்பது சாதாரணமல்ல. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்.