Take a fresh look at your lifestyle.

அக்டோபரில் வெளியாகிறது ரஜினியின் ‘வேட்டையன்’!

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படத்தை பிரமாண்டமாக வெளியிடத் தயாராகி வருகிறது லைகா புரொடக்ஷன்ஸ்.

இத்திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தனது படைப்புகளின் மூலம் சமூகம் சார்ந்த கதை சொல்லலுக்கு பெயர் போன புகழ்பெற்ற இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படம், அவருக்கு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் முதல்முறையாக இணைந்து பணிபுரியும் பெருமைமிகு படைப்பாக அமைகிறது.

இந்தப் பான் – இந்தியப் படமானது லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரஜினிகாந்திற்கு இடையிலான வெற்றிகரமான கூட்டணியில் 2.0, தர்பார், சமீபத்தில் வெளியான லால் சலாம் போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் இணையும் படமாகும்.

அதே போல இன்னொரு அதிரடியான கூட்டணியான ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இருவரும் பேட்ட, தர்பார், ஜெயிலர் ஆகிய திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய பிறகு நான்காவது முறையாக மீண்டும் இணைந்துள்ளனர்.

இந்தப் படம் ‘பாலிவுட் மெகா ஸ்டார்’ அமிதாப் பச்சன் உட்பட ஒரு தனித்துவமான நட்சத்திரப் பட்டாளத்தை கொண்டுள்ளது.

அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் அந்தா கனூன், கெராஃப்தார் மற்றும் ஹம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக ரஜினிகாந்துடன்  திரையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரும் சூப்பர் ஸ்டாருடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரனின் நிர்வாகத்தின் கீழ் தயாரிப்பிற்கு பிந்தையப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ‘வேட்டையன்’ அதன் பிரம்மாண்டமான மற்றும் அழுத்தமான கதை சொல்லல் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுக்கும்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் பான் – இந்தியா சினிமா அனுபவத்திற்கான உத்திரவாதம் அளிக்கிறது.