Take a fresh look at your lifestyle.

ஆகஸ்ட் 23-ல் வெளியாகிறது சூரியின் ‘கொட்டுக்காளி’!

‘கூழாங்கல்’ திரைப்படத்தை இயக்கிய பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கொட்டுக்காளி’ படம். இந்தப் படத்தில் சூரி கதாநாயகனாகவும் மலையாள நடிகை அன்னா பென் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்சன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

‘கொட்டுக்காளி’ படம் 53-வது டிரான்சில்வேனியா சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை வென்று அசத்தியது. அதற்கும் முன்பு, இந்தப் படம் 74-வது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் ஃபோரம் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டு 16 பிப்ரவரி 2024 அன்று திரையிடப்பட்டது.

இதன் மூலம் பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையையும் ‘கொட்டுக்காளி’ பெற்றது.

இந்நிலையில் இப்படம் ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சிவகார்த்திகேயன் எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மூடநம்பிக்கை, ஆணாதிக்கம் மற்றும் சிக்கலான மனித உணர்வுகள் குறித்து ‘கொட்டுக்காளி’ பேசும் என இப்படத்தின் இயக்குநர் வினோத்ராஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.