‘8 தோட்டாக்கள்’, ‘குருதி ஆட்டம்’ ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் தனது 40-வது படத்தில் நடிக்கின்றார். இதனை மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகிறது.
அதன்படி முக்கிய வேடத்தில் சரத்குமார் நடிப்பதாக அரவது பிறந்தநாளில் அறிவித்தனர். அதைத் தொடர்ந்து அன்று மாலையில் நடிகைகள் தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா ஆர்ச்சர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
சித்தார்த்துக்கு ஜோடியாக, ‘முதலும் நீ முடிவும் நீ’, ‘குட் நைட்’ உள்ளிட்ட படங்களில் நடித்த மீதா ரகுநாத் நடிக்கின்றார்.
1997ஆம் ஆண்டு வெளியான ‘சூர்ய வம்சம்’ படத்தில் இணைந்து நடித்த சரத்குமார்-தேவையானி ஜோடி சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தில் மீண்டும் கைக்கோர்த்திருக்கின்றனர்.
பெயரிடப்படாத இந்தப் படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஸ்ரீ கணேஷ், “ஒரு தனிமனிதனின் வலிமையான பயணம்தான் இந்தப் படம். இது இயக்குநராக எனக்கும் பார்வையாளர்களுக்கும் புது அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். உலகளவுக்கு பொருந்தக் கூடிய கதையாக இது இருக்கும்” என்றார்.



