Take a fresh look at your lifestyle.

எம்.ஜி.ஆர் பார்வையில் எதிரி என்பவர் யாா்?

‘நடிகன் குரல்’ இதழில் வாசகா் ஒருவர் கேட்ட கேள்விக்கு எம்.ஜி.ஆா். சொன்ன பதில்:

வாசகர் கேள்வி : தங்களுக்கு எதிரிகள் என்று யாரும் இருக்க முடியாது என்பது பலர் முடிவு.

ஆனால் எதிரிகள் சிலர் இருப்பதாகச் சிலர் பேசுவதன் மூலமாகவும், சிலருடைய செயல்களின் மூலமாகவும் வெளிப்பட்டாலும், அவர்களை நீங்கள் ‘எதிரி’ என்று நினைக்கவில்லை என்று நான் கருதுகிறேன்.

‘எதிரி என்ற சொல்லுக்குத் தாங்கள் காணும் பொருள் என்ன? தங்கள் விளக்கத்தால், தற்போதைய சிலருடைய போக்கு மாறவேண்டும் என்பது பலர் விருப்பம். இதற்குத் தங்கள் மறுமொழி தேவை. விளக்கமாகக் கூறுவீர்களா?

எம்.ஜி.ஆரின் விளக்கம்: ‘எதிர்’ என்ற பதத்திலிருந்துதான் ‘எதிரி’ என்ற பதம் தோன்றியிருக்க வேண்டும். எதிர்க் கருத்தைச் சொல்பவன் எதிரி என்பதுதான் அதற்குப் பொருளாக இருக்க முடியும்.

ஜனநாயகத்தில் எல்லோருக்கும் எண்ண, எழுத, பேச உரிமை இருக்க வேண்டும். அப்படியானால் ஒரே கருத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தாய்த் திருநாட்டில் இருக்க முடியும் என்று எதிர்பார்க்கக் கூடாது அல்லவா?

ஜனநாயக அமைப்புப்படி இன்றைய எதிர்க் கருத்தைச் சொல்கிறவர்கள் (எதிரி என்று அழைக்கப்படுகிறவர்கள்) எதிர்காலத்தில் பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து உடையவர்கள் ஆகலாம் அல்லவா!

எதிர்க் கருத்தைச் சொல்பவர்கள் நமக்கு எதிராக இருப்பவர்களே தவிர, கொடியவர்கள் என்று பொருள் கூற வேண்டியவர்கள் அல்லா்.

லட்சிய வேறுபாடு உள்ளவர்கள் என்பதுதான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய கருத்து. மாற்றுக் கருத்துக்கள் சொல்பவரை மாற்றார்கள் என்று சொல்வதுபோல எதிர் கருத்துக்கள் சொல்லுவோா் எதிரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

ராஜாஜி பதவியில் இருந்தபோது, கழகத்திற்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. கைத்தறி வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் முயற்சியை ராஜாஜி செய்வதாகத் தெரியவந்தது.

உடனே அண்ணாவின் ஆதரவு அறிக்கை வடிவில் வெளிவந்தது. இதனால், லட்சியத்தில் எதிர்ப்பட்டு இருக்கிறதை விட்டுக் கொடுத்தார்கள் என்றா பொருள்? அப்படி இல்லையல்லவா? எதிரி என்றால் எதிரியாகவே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

ஜனநாயக அடிப்படையில் பெரும்பான்மையான வாக்குகள் பெற்றவர்கள், ‘ஆளும் கட்சியினர்’ என்று அழைக்கப்படுகின்றனர். அடுத்து சிறுபான்மையான வாக்கு பெற்றவா்கள் ‘எதிர்க் கட்சியினா்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.

லண்டனில் ஆளும் கட்சி கன்சா்வேடிவ் கட்சியாக இருந்தது முன்பு. எதிர்க்கருத்தைச் சொல்லும் கட்சி, தொழிற்கட்சியாக இருந்தது.

தற்போது, ஆளும் கட்சியாகத் தொழிற்கட்சி வந்திருக்கிறது. இதற்கு முன்பு இதே தொழிற்கட்சிக்குப் பெயா் எதிர்க்கட்சி. இப்போது ஆளும் கட்சி.

ஆளும் கட்சியில் இருந்தவர்களுடைய கருத்து அன்று மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதே கருத்து இன்று மக்களால் எதிர்க் கருத்தாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆதலால் பொதுவாக, ஆளும் கட்சியில் இருப்பவர்கள் நல்லவர்கள், எதிர்க் கட்சியில் இருப்பவர்கள் கெட்டவர்கள் என்று சொல்ல முடியாது.

கால மாறுபாட்டுக்கு ஏற்ப, அறிவு வளர்ச்சியின் காரணமாக, இன்று நாம் கருதுகிற எதிர்க் கருத்துக்கள், நாளைய தினம் உடன்பட்ட கருத்துக்களாக மாறலாம்.

இப்படிப்பட்ட நிலையில், யாரை யாா் ‘எதிரி’ என்று கூறினாலும், கருதினாலும் காலத்தால் உடன்படக்கூடிய தற்போதைய கருத்து மாறுபாடு கொண்டவர்கள் என்று எண்ணுவதைத் தவிர, வேறென்ன கருத முடியும்?

– 1967-ல் வெளிவந்த நடிகன் குரல் இதழிலிருந்து…