‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித்குமார், ‘துணிவு’ படத்துக்குப் பிறகு நடித்து வரும் படம் ‘விடாமுயற்சி’. மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.
திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது.
இது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. ஓரிரு மாதங்களாக படப்பிடிப்பு நடக்கவில்லை. இது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்தன.
படத்தைத் தயாரிக்கும் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக ஒரு தகவல் உலா வந்தது. இந்தச் செய்தியை பட நிறுவனம் உறுதிப்படுத்தவும் இல்லை. மறுக்கவும் இல்லை.
அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பிய, அஜித், மத்தியபிரதேசத்தில் ‘பைக்’ ரேசில் சில நாட்கள் ஈடுபட்டார். இடையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டார்.
அந்தப் படத்தின் முதல் ‘ஷெட்யூல்’ முடிவடைந்துள்ளது. இதனை அடுத்து ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
இதற்காக இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்ட படக்குழு ஏற்கெனவே அஜர்பைஜான் சென்றுவிட்டது. அஜித்குமாரும் அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஒரு மாதம் வரை அஜர்பைஜானில் படப்பிடிப்பு இடைவிடாது நடக்க இருக்கிறது. படம் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது.
– பாப்பாங்குளம் பாரதி