நன்கு அறிமுகமான பிரபலங்கள் தேடிக்கொள்ளும் மோசமான முடிவுகள் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அவர்கள் எதிர்கொண்ட மன அழுத்தம், பகையையும் வன்மத்தையும் எதிர்கொள்ள முடியாத இயலாமை, நட்சத்திர அந்தஸ்து பறிபோகும் அச்சம், சாதாரணனாக வாழத் தயாராக இல்லாத மனம், சிகரத்தில் இருந்து பாதாளத்தில் விழும் எண்ணம் என்று பல விஷயங்கள் இதன் பின்னிருக்கின்றன.
குறிப்பாக, அவமானங்களையும் துரோகங்களையும் சீரணிக்க இயலாத பக்குவமின்மையின் பரவல் இனிவரும் தலைமுறையின் எதிர்காலத்தையே அச்சத்துக்கு உட்படுத்தியிருக்கிறது.
மனதை அழுத்தும் செய்திகள்!
இந்தி திரையுலகில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக உயர்ந்த சுஷாந்த்சிங் ராஜ்புத் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அகால மரணமடைந்தார். அதற்கு ஒரு வாரம் முன்னதாக, அவரது மேலாளராக இருந்த திஷா சலியன் ஒரு ஹோட்டலின் 9ஆவது மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்டதாகச் செய்திகள் வெளியாகின.
அதற்கடுத்து, டிக்டாக் உலகில் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த சியா கக்கர் எனும் 16 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவலைப் படித்தபோது மனம் பதறியது.
சுஷாந்தின் மரணம் கொலையா, தற்கொலையா என்ற விவாதம் நிகழ்ந்து கொண்டிருப்பதற்கு இணையாக, அவருக்கான நடிப்பு வாய்ப்புகள் அனைத்தும் தொடர்ந்து பறிக்கப்பட்டது குறித்தும் நட்சத்திர வாரிசுகளின் ஆதிக்கம் குறித்தும் பேச்சுகள் அப்போது பெருகியிருந்தன.
கண் கூசும் வெளிச்சத்தைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருப்பவரை இருளுக்குள் தள்ளினால் கட்டாயம் திணறித்தான் போவார். அதையும் மீறி மேலெழுந்தவர்கள்தான் தங்களுக்கான சாம்ராஜ்யத்தைப் படைத்திருக்கின்றனர். கண்டிப்பாக, இது வெறும் வார்த்தைகள் இல்லை.
கணப்பொழுதில் எல்லாமே தலைகீழாக மாறிவிடக்கூடிய சாத்தியமுள்ள உலகில், எவரும் எவருக்கும் அறிவுரையாக எதையும் சொல்ல முடியாதுதான். ஆனால், அதையும் மீறி இந்த உலகில் யாராவது எவருக்காவது நம்பிக்கையூட்டும் ஏதாவதொன்றைச் சொல்லித் தீர வேண்டியிருக்கிறது.
மனதை அழுத்துவது எதுவானாலும், அதிலிருந்து விடுவிக்கும் திறன் இசை உள்ளிட்ட சில கலைகளுக்கு மட்டுமே உண்டு.
குறிப்பாக, இசை தரும் எழுச்சி கடலின் ஆழத்தில் புதைக்கப்பட்ட மனத்தையும் பிரபஞ்சத்தின் எல்லைக்கு உந்தித் தள்ளும் சக்தி கொண்டது. அப்படிப்பட்ட இசையை உருவாக்கிய, நமக்குத் தெரிந்த சில கலைஞர்கள் சந்தித்த அவமானங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டவை.
ஆரம்பமே அபசகுனமா?
இளையராஜா இசையில் ‘அன்னக்கிளி’ படத்துக்கான பாடல்கள் ஒலிப்பதிவு செய்ய முற்படும்போது, மின்சாரம் தடைபட்டது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சில நிமிடங்கள் கழித்து மின்சாரம் வந்தபோது, கூடியிருந்த இசைக்கலைஞர்கள் முகங்களில் அவநம்பிக்கை.
தாம் கற்ற கலையால் நொடிகளின் மீதேறி உலகை வலம் வந்து இறங்குபவர்களுக்கு, அது நழுவும்போது அசூயை ஏற்படுவது இயல்பு. மீண்டும் ஒலிப்பதிவு தொடங்கி பாடல் முழுவதும் பதிவானபிறகு, அடுத்த பாடல் பதிவாக ஏற்பாடு நடந்திருக்கிறது.
அப்போது, ‘எடுத்த பாடலை ஒருமுறை கேட்கலாம்’ என்றிருக்கிறார் இளையராஜா. ஒலிப்பதிவாளர் ஒலிப்பேழையை இயக்கினால் எந்த சத்தமும் வரவில்லை.
ஏதோ ஒரு தொழில்நுட்பக் கோளாறு என்று தெரிந்தபோதும் என்னவென்று அறிய முடியவில்லை. மனம் தளராமல், இன்னொரு முறை அதே பாடலையே ஒலிப்பதிவு செய்திடலாம் என்றிருக்கிறார் இளையராஜா.
வேறு யாராக இருந்தாலும், அந்த இடத்தில் தவங்கிச் சுருண்டிருக்கக் கூடும். அதன்பிறகு, அனைத்து பாடல்களும் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாடே திரும்பிப் பார்த்தது தனிக்கதை.
மேற்கண்ட நிகழ்வின்போது அந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்த பலரும் ‘இனி அவ்வளவுதான்’ என்றே நினைத்திருக்கின்றனர். ‘நல்ல சகுனம்தான்’ என்று ஒரு இசைக்கலைஞர் கிண்டலடித்திருக்கிறார்.
இதற்கு முன்னரும் பின்னரும் கூட இளையராஜா பெரும் அவமானங்களைச் சந்தித்திருக்கக் கூடும். பல சவால்களையும் துரோகங்களையும் தோல்விகளையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டிருக்கலாம். யார் கண்டது?
இது எல்லாம் ஒன்றாகச் சேர்ந்துதான், ஆண்டு முழுவதும் ஒருநாள் கூட இடைவிடாமல் அவரை உழைக்க வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இசையே கடமையாக இருந்திருக்கிறார்.
அதன் பலனாக, ஆயிரம் படங்களுக்கு மேலாக இசையமைத்த பெருமை மகுடமாக இன்றும் அவரது தலையில் தவழ்கிறது. அவமானத்தை சவாலாக மாற்றிக்கொண்ட அவரது லாவகம் இன்று நமக்கு எட்டாக்கனியாகத் தெரிகிறது.
ஏன் இசையமைப்பதில்லை எனும் கேள்வி!
ஒரு பாடகராகும் ஆசையில் சென்னைக்கு வந்த சிற்பி, 90களின் முற்பகுதியில் பல தயாரிப்பு நிறுவனங்களில் இசை வாய்ப்புகளைப் பெறும் நிலையை அடைந்து அவற்றைத் தவறவிட்டிருக்கிறார்.
மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘மண்ணுக்குள் வைரம்’ படம் தொடங்கப்படுவதற்கு முன்னதாக, தயாரிப்பாளர் கோவைத்தம்பியைச் சந்தித்து தான் உருவாக்கிய மெட்டுகளை இசைத்திருக்கிறார்.
அப்போது, அவருக்கு பட வாய்ப்பு கிடைக்குமென்ற சூழல் இருந்திருக்கிறது. ஆனாலும், அந்தப் படத்தில் தேவேந்திரன் அறிமுகப்படுத்தப்பட்டார்.
‘கொடி பறக்குது’ படத்தின்போது பாரதிராஜாவிடம் அறிமுகமாகியிருக்கிறார் சிற்பி. அந்த வாய்ப்பும் அவருக்குக் கிடைக்கவில்லை.
சின்னப்பையன் போன்ற தோற்றம் அவரது திறமையை திரை போட்டு மறைத்திருக்கிறது.
இதேக் காலகட்டத்தில் மனோபாலாவினால் ‘ஊர்க்காவலன்’ படத்தில் வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியிருக்கிறது. பாடல்கள் கம்போசிங் செய்யும் திறமை சோதிக்கப்பட்டு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை அளிக்கப்பட்டாலும், அடுத்தநாள் அந்த வாய்ப்பு இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷுக்கு சென்றிருக்கிறது.
இது தவிர பூஜையோடு கைவிடப்பட்ட படங்கள், பாதியில் நின்ற படங்கள் என்று அரை டஜன் வாய்ப்புகளைத் தாண்டி வந்த அனுபவமும் சிற்பிக்கு உண்டு. ‘செண்பகத்தோட்டம்’, ‘அன்னைவயல்’ என்ற முதலிரண்டு படங்களும் பெரிதாகக் கவனிக்கப்படாமல் போயின.
‘கோகுலம்’, ‘நான் பேச நினைப்பதெல்லாம்’, ‘நாட்டாமை’ என்று வரிசையாக ஹிட் தந்த பிறகும் கூட, 1995ஆம் ஆண்டில் சிற்பி எந்த வாய்ப்பையும் பெரிதாகப் பெறவில்லை. 1996இல் வெளியான ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம்தான் அவரது கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தக் காலகட்டத்தில் ‘சுந்தர புருஷன்’ படத்துக்காக 3 மாதங்கள் கம்போசிங்கில் இருந்திருக்கிறார். லிவிங்ஸ்டன், எஸ்.டி.சபா, எஸ்.ஜே.சூர்யா என்று அப்படத்தின் கலைஞர்களோடு இணைந்து 150க்கும் மேற்பட்ட டியூன்களை உருவாக்கியிருக்கிறார்.
படத்தில் இடம்பெற வேண்டிய 6 பாடல்களுக்காக ஏன் இப்படியொரு உழைப்பு? அதனை ஒரு பளுவாக, தேவையற்றதாகக் கருதவே இல்லை சிற்பி.
அப்போது அவர் குவித்த உழைப்பு அதற்கடுத்த ஆண்டுகளில் இசை வாய்ப்புகளாக உருவம் பெற்றது. இடைப்பட்ட காலத்தில் அவர் எத்தனையெத்தனை அவமானங்களை, துரோகங்களை, வாய்ப்பிழப்புகளைச் சந்தித்திருப்பார்.
‘அடுத்த வாய்ப்பு உங்களுக்கு ஏன் கிடைக்கவில்லை’ என்ற கேள்வியை எதிர்கொண்டிருப்பார். இதைவிட பெரிய அவமானம் என்ன இருந்துவிட முடியும்?
கவனிக்கத்தக்க வகையில் 80க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், இப்போதும் ‘அடுத்த படம் எப்போ இசையமைக்கப் போறீங்க’ என்ற கேள்வி அவரிடம் கேட்கப்படுகிறது. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சாந்தமான முகத்துடன் அவர் பதில் தருகிறார்.
ஒரு கலைஞனின் தேடல் எதுவென்று அறியாமல், அவரது நிறைவையோ சலிப்பையோ உணராமல், புதிய முயற்சிகளைத் தெரிந்துகொள்ளாமல் அவசரத்தனத்தில் உதிர்க்கப்படும் இது போன்ற கேள்விகளும் கூட அவமானங்கள்தான்.
ஆனால், அதையும் இயல்பாகக் கடந்து போவதில் இருக்கிறது வாழ்வை எதிர்கொள்ளும் சூட்சமம்.
வெளிச்சத்திலும் புறக்கணித்தால்..!
இளையராஜாவுக்கு முதல் வாய்ப்பு கிடைத்த அதே நாளில் இயக்குனர் வி.சி.குகநாதனைச் சந்தித்திருக்கின்றனர் இசையமைப்பாளர் சந்திரபோஸ் மற்றும் தேவா. அந்தக் காலகட்டத்தில் இருவரும் போஸ்-தேவா என்ற பெயரில் இசையமைப்பாளர்களாகக் களமிறங்க முயற்சித்திருக்கின்றனர்.
இளையராஜா அன்னக்கிளி பாடல்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவலை குகநாதனிடம் அவரது நண்பர் சொல்ல, பட வாய்ப்பு தருவது பற்றி இருவரிடமும் பேசிக் கொண்டிருந்த குகநாதன் அப்படியே சென்றுவிட்டாராம்.
அப்புறம் அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை என்கிறார் தேவா. இது, மாங்குடி மைனர் படத்திற்கு முன்பு நிகழ்ந்திருக்கலாம்.
தனது விடாமுயற்சியினால் 90களுக்கு முன்பே சந்திரபோஸ் புகழ் பெற்றுவிட்டார். ஆனால், கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் புகழ் ஏணியின் உச்சத்தில் இருக்கும்போது, இருவருக்கும் நடுவே பட வாய்ப்புகளை அள்ளினார் தேவா.
இடைப்பட்டக் காலத்தில் வாய்ப்புகளுக்காக அலைந்து திரிந்ததும் அப்போது கிடைத்த அனுபவங்களும் நிச்சயம் மகிழ்ச்சியோடு சொல்லக்கூடியவை அல்ல. ஆனால், அதையும் சிரித்த முகத்தோடு சொல்லும் மனம் தேவாவிடம் இருப்பது அவரது எதையும் தாங்கும் இதயத்தையே காட்டுகிறது.
இவர் அளித்த பேட்டியொன்றில் சமீபத்தில் சந்தித்த அவமானம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு திருமண வீட்டில் கச்சேரி நடந்து கொண்டிருக்கிறது. மணமக்களுக்கு பரிசு தந்துவிட்டு கிளம்ப எத்தனிக்கும்போது ஒரு கானா பாடல் பாடுமாறு திருமண வீட்டினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அதற்காக முன்வரிசையில் அமர்ந்து காத்திருக்க, ‘அடுத்தது ஒரு கானா பாடல்’ என்று மேடையில் இருந்த இன்னொரு இசையமைப்பாளர் சொல்கிறார்.
உடனே, தனக்கான அழைப்பு என்று தேவா எழ, “யார் யாரோ கானா பாட்டு பாடுறாங்க, நானும் ஒரு பாடல் பாடுறேன்” என்று சொல்லிவிட்டு அந்த இசையமைப்பாளர் பாடத் தொடங்கியிருக்கிறார். அவ்வளவுதான், தேவா அப்படியே அந்த இடத்தைக் கடந்து வந்திருக்கிறார்.
மிகுந்த வலி தந்த சம்பவத்தைக் கூட, மிக இயல்பாகப் பேசிக் கடக்கிறார். இத்தனைக்கும் இப்போதும் அவருக்கான முக்கியத்துவம் திரைத்துறையில் இருக்கிறது.
இவ்வளவு இருந்தும் இத்தகைய பரிசை அவர் பெற வேண்டியிருக்கிறது என்றால், வாய்ப்புகளே இல்லையென்றால் இந்த உலகம் எப்படி ஒரு கலைஞனை நோக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே தயக்கமாகத்தான் இருக்கிறது.
இதனை மனதுக்குள்ளேயே பூட்டி வன்மம் வளர்க்காமல், வருந்தி சிதைந்துவிடாமல் கடந்து வருகிற பக்குவத்தைக் கடந்தக் காலத்தில் நிரம்பிக் கிடக்கும் தொடர் தோல்விகள் அவருக்குத் தந்திருக்கின்றன.
இது போன்ற பல உதாரணங்கள் இருக்கலாம். அவை எல்லாமே பொதுவெளியில் முன்வைக்கப்படுவதே, யாரோ ஒருவருக்கு நல்வழி காட்டும் என்ற எண்ணத்தில்தான்..
அவமானங்கள் நிச்சயம் வெகுமானங்கள் அல்ல; ஆனால், அப்படிக் கருதினால் மட்டுமே வெளிச்சமும் இருளும் பெரிய வித்தியாசத்தைத் தராது.