Take a fresh look at your lifestyle.

சினிமா என்பது சதுப்பு நிலம்; அதை அணுகுவது கடினம்!

நாஞ்சில் சம்பத் பேச்சு

கார்த்திக் குமார் இயக்கத்தில், V.மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் பிதா. மாறுபட்டக் களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் குணா: “மண்டியிட்டு வாழ்வதைவிட சண்டையிட்டு சாவதே மேல் என்ன சொன்னான் என் அண்ணன் வேலு பிரபாகரன். நான் இந்த விழாவிற்கு வந்ததற்கான காரணம் அண்ணன் வேலு பிரபாகரன் தான்.  இந்தப் படைப்பைத் தம்பி கார்த்திக் நன்றாக எடுத்திருப்பார் என நம்புகிறேன்.

தயாரிப்பாளர் மதியழகன் பல திரைப்படங்களை எடுத்துள்ளார், அவர் சமீபத்தில் எடுத்த சாமானியன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் “இந்த வீடு பேங்கினுடையது உங்களுடையது அல்ல” என, மக்களிடம் கொள்ளையடிக்கும் பேங்க் பற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு அற்புதமான திரைப்படத்தை எடுத்திருந்தார்.

அந்தக் கதையை எழுதியவர் தான் கார்த்திக். அவரை வைத்து இப்போது மதியழகன் நடித்து எடுத்திருக்கும் படம் கண்டிப்பாக ஒரு நல்ல படைப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

திருமுருகன் காந்தி:

திரைத்துறை சார்ந்து பெரிய அறிமுகம் இல்லை. மண் சார்ந்து ஒரு படமெடுத்துள்ளார்கள் என்று சொன்னார்கள். டிரெய்லரில் பிரபாகரன் அய்யா படம் பார்த்தபோது ஒரு நம்பிக்கை வந்தது. சமூக அக்கறையோடு இயங்கக் கூடிய நாயகனை மதி முன்னிறுத்துகிறார்.

முதல் படம் போல் தோன்றவில்லை. ஈழத்தினை பற்றிப் பேசும்போது மனதில் பெரும் வலி இருக்கிறது.

இங்கு ஈழத்திற்காக போராடிய அண்ணன் பிரபாகரன் பெயரைக்கூடச் சொல்ல முடியாத நிலை நிலவுகிறது. அதைப்பற்றிப் பேசவே பயப்படும் காலத்தில், ஒரு படைப்பைத் தர முயலும் இந்த குழுவிற்கு என் வாழ்த்துகள்.

நடிகை வனிதா விஜயகுமார்:

எல்லோருடைய வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். பல பர்சனல் பக்கங்கள் இருக்கும். அதில் நடக்கும் விஷயங்கள் நம்மை முடக்கிவிடும். ஆனாலும் அதைத் தாண்டி நல்ல விஷயங்களும் நடக்கும்.

எக்ஸாம் தோல்வி  அடைந்தால் சூசைட், காதல் தோல்வி அடைந்தால் சூசைட் என்ற நிலை இப்போது இருக்கிறது. ஆனால், அதைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது; வெற்றி இருக்கிறது.

உங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து வாழுங்கள். வெற்றியை எதிர்பார்க்கத் தேவையில்லை. அது உங்களை வந்தடையும்.

இந்தப் படம் எடுக்கும்போதே படத்தின் தரம் தெரிந்தது. திட்டமிட்டு உழைத்தார்கள். கார்த்திக் மதியழகன் மிகக் கடுமையாக உழைத்துள்ளார். படத்தின் வெற்றி விழாவில் இன்னும் நிறையப் பேசுகிறேன் என்றார் நம்பிக்கையாக.

தயாரிப்பாளர், நடிகர் V மதி:

இது வித்தியாசமான தருணம். நான் நடிகனாக அறிமுகமாகும் முதல் மேடை. இந்த மாதத்திலேயே தயாரிப்பாளராக நான்கைந்து படங்களுக்கு இந்த மேடைக்கு வந்திருக்கிறேன். இப்பொழுது நடிகனாக உங்கள் முன்னால் வந்திருக்கிறேன்.

இப்படத்தில் ஈழம், மேதகு பிரபாகரன் போன்ற விஷயங்களைப் பரபரப்புக்காகப் பயன்படுத்தவில்லை. அவர்களை எந்த விதத்திலும் அவமதிக்கவில்லை. மிகவும் உண்மையாக ஒரு படைப்பை உருவாக்கி உள்ளோம். இதுவரை இல்லாத வகையில் மிக வித்தியாசமான படைப்பாக இந்தப் படம் இருக்கும் என்கிறார்.

நாஞ்சில் சம்பத்:

நான் வாழ்ந்த ஊரைச் சார்ந்தவன் தம்பி கார்த்திக். ஒரு அதிர்வை உண்டாக்கும் படைப்பைத் தம்பி செய்கிறான் என்பது மகிழ்ச்சி. நான் நடித்த ஒரு படத்தின் பெயர் சேகுவாரா. அதில் என் பெயர் அண்ணாதுரை. அந்தப்பெயர் வரக்கூடாதென்கிறார்கள். சினிமா என்பது சதுப்புநிலம். அதை அணுகுவது கடினம். நான் சினிமாக்காரன் இல்லை. நான் இருக்கும் இடத்தில் இருக்கும் அரசியலை விட இங்கு அதிக அரசியல் இருக்கிறது.

அந்தக் களத்தில் தம்பி கார்த்திக் ஒரு நல்ல படைப்பைத் தர முயற்சிக்கிறார். அவர் முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும். ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படைப்பாளியாக கார்த்திக் குமார் வருவார்.

11 படங்களைத் தயாரித்த மதியழகன் இப்படத்தில் நடிகராக மாறியுள்ளார். இந்தக் கூட்டணி வெல்வதற்கு என் வாழ்த்துகள்.