வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து 400 கோடி ரூபாயை ஏமாற்றிய கல்லால் குழும நிறுவத்தைச் சேர்ந்த சரணவன் பழனியப்பன் விஜய் ஆனந்த் மூவர் கைது!
சென்னை:
பல சர்வதேச நாடுகளில் கனிம வள வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கல்லால் குழும நிறுவனத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் சரவணன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் ஆகிய இருவரும் செப்டம்பர் 16 ஆம் தேதியன்று நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்களை காட்டி முதலீட்டை கவர்தல்.. போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பல உலக நாடுகளில் கனிம வள வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கல்லால் குழும நிறுவனத்தில், பெட்டிக்கோ கமர்சியோ இன்டர்நேஷனல் எனும் நிறுவனம் கோடி கணக்கிலான ரூபாயை முதலீடு செய்திருக்கிறது. இந்த இரு நிறுவனத்திற்கும் இடையே நடைபெற்ற வர்த்தக ரீதியான பேச்சுவார்த்தையின் போது, ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி கல்லால் குழும நிறுவனம் செயல்படவில்லை. இந்நிலையில் கல்லால் குழும நிறுவனம் போலியான ஆவணங்களை காட்டி முதலீடுகளைப் பெற்றதை பெட்டிகோ கமர்சியோ இன்டர்நேஷனல் நிறுவனம் கண்டறிந்தது.
மேலும் இந்த நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து 400 கோடி ரூபாய் வரை ஏமாற்றி, நிதி மோசடியில் ஈடுபட்டிருக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக கல்லால் குழும நிறுவனத்தின் மீது பெட்டிக்கோ கமர்சியோ இன்டர்நேஷனல் நிறுவனம் சென்னை காவல் துறை ஆணையரிடத்தில் புகார் அளித்தது. இதனை விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், குற்ற செயலில் ஈடுபட்ட தொழிலதிபர்கள் சரவணன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் ஆகிய இருவரை செப்டம்பர் 16ஆம் தேதி அன்று, கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதியரசர், குற்றம் செய்தவர்களுக்கு15 நாள் நீதிமன்ற காவல் வைத்து விசாரிக்கும் படி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அந்த இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக பெட்டிக்கோ கமர்சியோ நிறுவனம் மத்திய குற்றவியல் காவல் துறையில் அளித்த புகாரில் தெரிவித்திருப்பதாவது..
கல்லால் குழும நிறுவனத்தை சார்ந்த கல்லால் லாஜிஸ்டிக் பிரைவேட் லிமிடெட் எனும் துணை நிறுவனம் எங்களை அணுகி, இந்திய மதிப்பில் 114 கோடி ரூபாய்க்கான பொருள் விவர பட்டியல் ஒன்றை சமர்ப்பித்தது. இதில் முதலீடு செய்யுமாறும், பங்குதாரராக இணையுமாறும் கேட்டுக்கொண்டது. பங்குதாரராக இணைந்த பிறகு, இந்த நிறுவனத்தில் பெட்டிக்கோ கமர்சியல் நிறுவனம் பரிந்துரைக்கும் மூவருக்கு இயக்குநர் பொறுப்பு வழங்கப்படும் என்றும், அந்த நிறுவனம் மேற்கொள்ளும் கனிம வள வணிகத் திட்டத்தில் இணைந்து பணியாற்ற அனுமதி அளிக்கும் என்றும், எங்கள் நிறுவனத்தில் செய்த முதலீட்டிற்கு நிகராக, கல்லால் குழும நிறுவனத்தின் துணை நிறுவனமான கல்லால் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் பங்குகள் வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தது. இதனைத் தொடர்ந்து எங்களது நிறுவனம் அவர்களது கோரிக்கையை ஏற்று, எங்களது நிறுவனம் கோடிக்கணக்கிலான ரூபாய் முதலீடு செய்தது. ஆனால் அவர்கள் ஒப்புக்கொண்ட படி நடந்து கொள்ளவில்லை. அதன் பிறகு விசாரித்த போது, அவர்கள் போலி ஆவணங்களை காட்டி எங்களை ஏமாற்றியது தெரிய வந்தது. அத்துடன் அவர்களின் சொத்துகள் மற்றும் வணிகம் அனைத்தும் வருமான வரித்துறை சோதனையில் சிக்கி இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இவர்கள் மீது மோசடி, பண மோசடி, நம்பிக்கை துரோகம், போலி ஆவணங்களை காண்பித்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் கல்லால் குழும நிறுவனத்தை சார்ந்த சரவணன் பழனியப்பன், விஜயகுமாரன், அரவிந்த் ராஜ், விஜய் ஆனந்த் உள்ளிட்டவர்கள் மீது சென்னை காவல்துறை ஆணையரிடத்தில் புகார் அளிக்கப்பட்டது. ” என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த புகாரின் தன்மை மற்றும் பொருளாதார மோசடியின் தொகை ஆகியவற்றை முன்வைத்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட கல்லால் குழும நிறுவனத்தைச் தொழிலதிபர்கள் சரவணன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 15 நாள் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
கல்லால் குழும நிறுவனத்தைச் சார்ந்த இவர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களிடம் வர்த்தக உடன்பாடு என்ற பெயரில், கோடிக்கணக்கிலான ரூபாயை ஏமாற்றி, நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருப்பதால், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இந்நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளை, தங்களின் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவந்திருப்பதாகவும், விரைவில் இந்த மோசடியில் ஈடுபட்டமேலும் விஜயகுமாரன் மற்றும் அரவிந்த ராஜ் ஆகியோர்களையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.