அமேசான் காட்டில் பிறந்து நாடோடியாக வாழும் சந்தானம், யார் எந்த உதவி கேட்டாலும் எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் உதவும் குணம் கொண்டவர்.
சந்தானத்தின் உதவும் குணத்தை அறிந்த சில இளைஞர்கள் கடத்தப்பட்ட தனது நண்பன் ஹரிஷை கண்டுபிடிக்க உதவி கேட்கிறார்கள்.
அவர் செய்யும் சில உதவிகள் உபத்திரவமாக மாற ,,,,பலரிடத்தில் தர்ம அடியும் உதையும் வாங்கி கொள்கிறார்.
நண்பர்களுடன் ஹரிஷை கண்டுபிடிக்க சந்தானம் புறப்படும்போது நண்பர்களின் தோழியும், கடத்தப்பட்ட ஹரிஷின் காதலியுமான நமீதா கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து கொள்கிறார்.
ஹரிஷை கண்டுபிடிக்கும் நேரத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சந்தானம் இறுதியில் ஹரிஷை கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்ற கேள்விக்கு விடை சொல்லும் படம்தான் ‘குலு குலு’
வழக்கமான நகைச்சுவையான சந்தானம் இல்லாமல் கதையின் நாயகனாக கூகுள் கதாபாத்திரத்தில் உடல் மொழியிலும் , வசனங்களிலும் அமைதியான ஆர்பாட்டமில்லாத இதுவரை பார்க்காத சந்தானமாக நடிப்பில் அசத்துகிறார் .
நாயகியாக அதுல்யா சந்திரா, ஆரம்பத்தில் மிரட்டும் வில்லனாக இறுதியில் காமெடி பீஸ்ஸாக மாறும் ப்ரதீப் ராவத் , ஹரிஷின் காதலியான நமீதா கிருஷ்ணமூர்த்தி, போலீஸாக நடித்துள்ள சாய் தீனா, மரியம் ஜார்ஜ், பிபின், ஹரிஷ், கவி ஜெ.சுந்தரம், மெளரிஷ், யுவராஜ் ,சேசு , மாறன் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியான ரகம் !
விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு கதைக்கு பக்க பலம் !
காமெடியாக படம் முழுவதும் பன்ச் வசனம் பேசும் சந்தானத்தை ஒரு காட்சியில் கூட சிரிக்க வைக்காமல் தமிழக,,,,, இந்திய அரசியல், மொழி பிரச்சனை, ஏழை பெண்களின் சுதந்திரம் ,வாழும் வாழ்க்கையின் அர்த்தம் என படம் முழுவதும் சீரியஸான ,,, அழுத்தமான வசனங்களை பேசும் மென்மையான கதாபாத்திரத்தில் சந்தானத்தை நடிக்க வைத்ததுடன் தமிழ் திரையில் இதுவரை வந்த கடத்தல் படங்களிலே வழக்கமான சினிமா பார்முலாவை தவிர்த்து புதுமையான கதை களத்துடன் ஹாலிவுட் படத்தின் தரத்தில் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ரத்னகுமார்.
ரேட்டிங் 3. / 5