இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பான் இந்திய க்ரைம் ஆக்ஷன் என்டர்டெயினராக அக்டோபர் 22 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜீப்ரா.
புதுமையான களத்தில், பரபர திரைக்கதையுடன் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றித் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், நான் இந்தளவு வெற்றியை எதிர்பார்த்து நடிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் பாஸிடிவ் ரிவ்யூஸ் வந்து கொண்டே இருக்கிறது. இந்தியில் ஹவுஸ்புல் ஆகிறது.
எல்லாப் பக்கமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சத்யதேவை தமிழுக்கு வரவேற்கிறேன். அவர் தமிழ் கற்றுக்கொள்வதாகச் சொன்னார். நான் 15 ஆண்டுகளாகத் தெலுங்கில் நடிக்கிறேன் ஆனால் இன்னும் தெலுங்கு கற்றுக்கொள்ளவில்லை.
இப்படத்தில் சத்ய தேவ் என்னை தெலுங்கில் டப் செய்ய வைத்து விட்டார். அதற்கு அவருக்கு நன்றி. இந்த டீமே அற்புதமான டீம். தமிழில் இப்போது பிஸியான ஆள் அசோக்தான். பான் இந்தியப் படங்கள் அதிகமானவுடன், இவர் வேலை அதிகமாகிவிட்டது.
ஒரு படத்தில் எடிட்டர் பற்றிப் பாராட்டுகிறார்கள் என்றால், அவர் உழைப்பு அப்படிப்பட்டது. இயக்குநர் ஈஸ்வர் அற்புதமாகப் படத்தைத் தந்துள்ளார்.
படத்தின் மேல் சத்யா காட்டிய ஆர்வம், அர்ப்பணிப்பு பெரியது. அவ்வளவு உழைத்திருக்கிறார். படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் வாழ்த்துகள். படத்திற்கு பெரும் ஆதரவு தந்த, உங்கள் அனைவருக்கும் நன்றி.
இது குறித்து பேசிய தயாரிப்பாளர் தினேஷ், பத்திரிக்கை நண்பர்களே நாங்கள் அனைவரும் தமிழ்க்காரர்கள். இந்தக்கதை இங்கு சென்னையில் தான் உருவானது. நான் முதலில் மீடியாவில் தான் வேலை பார்த்தேன்.
நான் முதன்முதலில் அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியில் வேலை பார்த்தேன், அடுத்தடுத்து வேலை பார்த்து, இந்தப்படம் செய்துள்ளேன். இந்தப்படத்திற்காக ஐந்து படமெடுக்குமளவு திரைக்கதையைத் தந்தார் ஈஸ்வர்.
அவ்வளவு ஸ்டஃப் இருக்கிறது அவரிடம். இந்தியாவின் நல்ல இயக்குநர் ஆகும் திறமை அவரிடம் இருக்கிறது. நீங்கள் அனைவரும் பாராட்டி இருந்தீர்கள். உங்கள் ஆதரவில் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
முதல் படமே மிகப்பெரிய பட்ஜெட்டில் தரலாம் என நம்பிக்கை வந்துள்ளது. அந்த நம்பிக்கை தந்ததற்கு அனைவருக்கும் நன்றிகள்.
இதைத் தொடர்ந்து பேசிய எடிட்டர் அனில் கிரிஷ், 15 வருட கனவு நனவாகியுள்ளது. 15 வருடம் முன்பு கோயம்புத்தூரிலிருந்து வந்து நானாக வளர்ந்து இந்தப் படத்தில் எடிட்டராக பணியாற்றியுள்ளேன்.
நான் யாரிடமும் வேலை செய்ததில்லை, எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சின்ன சின்னதாக ஷார்ட் ஃபிலிம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக இந்த இடத்தை அடைந்துள்ளேன்.
2018 ல் ஈஸ்வரை மீட் செய்தேன். அவருடனான டிராவல் மறக்க முடியாதது. பென்குவின் படத்தை என்னை நம்பி தந்தார். இப்போது ஜீப்ரா. பாலா சார், தினேஷ் சார் எங்களுக்கு ஆதரவு தந்ததால் தான் இந்தப் படம் உருவானது.
எனக்கு இந்த வாய்ப்பை தந்த ஈஸ்வருக்கு இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். சத்யராஜ் சார் இருந்தாலே ஷூட் கலகலப்பாக இருக்கும். அவருடன் வேலை பார்த்தது ஆசீர்வாதம். சின்ன பட்ஜெட்டில் ஆரம்பித்த படம் பாலா சாரின் விஷன் இந்தப் படத்தைப் பெரிய படமாக்கியுள்ளது.