அண்மைக்காலமாக நட்சத்திரங்களின் சம்பளம், தங்கத்தின் விலையைப் போல் எகிறிக் கொண்டே செல்கிறது. அந்தக் காலத்தில் கே.பி. சுந்தராம்மாள் ஒரு படத்தில் நடிக்க 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியது, பல ஆண்டுகள் பேசுபொருளாக இருந்தது.
இந்தியாவில் எந்த ஒரு நடிகரும், நடிகையும், அப்போது அவ்வளவு பெரும் தொகையை ஊதியமாகப் பெற்றதில்லை.
இப்போது, அது, ‘ஜுஜுபி’. 30 ஆண்டுகளுக்கு முன்பே கவுண்டமணி ஒரு நாள் ‘கால்ஷீட்’டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வாங்கினார்.
முன்பெல்லாம் இந்திப் படங்கள் மட்டுமே ‘பான் இந்தியா’ படங்களாக இருந்தன. இதனால் இந்தி நட்சத்திரங்கள் தான், இந்தியாவில் அதிக சம்பளம் பெற்றார்கள்.
ஆனால் சில ஆண்டுகளாக தென்னிந்திய மொழி நடிகர்களை வைத்து ‘பான் இந்தியா’ படங்கள் அதிக அளவில் உருவாகின்றன.
பாக்ஸ் ஆபீசிலும் அவை ‘ஹிட்’ ஆவதால், இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறுபவர்களாக, தென்னிந்திய நடிகர்கள் உயர்ந்துள்ளனர்.
இப்போது இந்தியில் அதிக ஊதியம் பெறுபவர் ஷாரூக்கான். ஒரு படத்துக்கு 150 கோடி ரூபாய் வாங்குகிறார். ஆனால் நம்ம ஊர் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் 200 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுகின்றனர்.
‘புஷ்பா’ படம் பெரிய அளவில் வசூல் குவித்ததால், அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. அந்தப் படத்துக்கு, அதன் ஹீரோ அல்லு அர்ஜுன் 300 கோடி ரூபாய் வாங்கியுள்ளார்,
கன்னடப் படமான ‘கேஜிஎஃப்’ வெளிவரும் வரை அதன் நாயகன் யாஷ், அந்த மாநிலத்தில் மட்டுமே அறியப்பட்டிருந்தார்.
அந்தப் படமும், அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமும் வெளிவந்த பின், யாஷின் வணிக சந்தை எங்கோ சென்று விட்டது.
கமலை மிஞ்சிய யாஷ்:
நிதேஷ் திவாரி இயக்கும் ‘ராமாயணம்’ திரைப்படம் பான் இந்தியா படமாகத் தயாராகி வருகிறது. ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கிறார்கள். ராவணனாக நடிக்க யாஷ், ஒப்புக்கொண்டுள்ளார்.
இரண்டுப் பாகங்களாக இந்தப் படம் உருவாகிறது. இதில் ‘வில்லன்’ ராவணன் வேடத்தில் நடிக்க யாஷ் வாங்கிய சம்பளம் ரூ. 200 கோடி.
இந்தியாவில் வில்லனாக நடிக்க அதிக ஊதியம் பெற்ற நடிகராக யாஷ் கருதப்படுகிறார்.
கல்கி படத்தில் வில்லனாக நடிக்க, கமல்ஹாசன், இதைவிட குறைவாகவே சம்பளம் வாங்கி இருந்தார்.
– பாப்பாங்குளம் பாரதி.