நடிகர் ராமராஜன், நடிகை ராணி நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவானது வில்லுப்பாட்டுக்காரன் திரைப்படம்.
இப்படத்தைக் கருமாரி கந்தசாமி மற்றும் ஜே. துரை ஆகியோர் தயாரித்து இருந்தனர். மேலும் சந்திரசேகர், எம். என். நம்பியார், விகாஷ் ரிஷி, செந்தில், கவுண்டமணி, குலதெய்வம் ராஜகோபால், சண்முகசுந்தரம் ஆகியோர் நடித்துள்ளனர்.
வில்லுப்பாட்டுக்காரன் திரைப்படத்தின் கதை என்ன?
கிராமத்தலைவர், அங்குள்ள கோயிலைப் புனரமைப்பு செய்ய நினைக்கிறார். அதற்கான நிதி பெறும் பொறுப்பினை வில்லுப்பாட்டுக்காரரான காளிமுத்து வசம் ஒப்படைக்கிறார்.
தேவைக்குண்டான பணம் கிட்டியபின், கோயிலைக் கட்ட பக்கத்து ஊர் சிற்பியை ஒப்பந்தம் செய்கிறாள். சிற்பியின் மகள் அபிராமி தந்தைக்குப் பணிவிடைகள் செய்ய, தந்தையுடன் சேர்ந்து கோயில் கட்டும் கிராமத்திற்குப் புலம்பெயர்கின்றனர். படிப்படியாக கோயில் கட்டுமானப் பணிகள் வளர்ச்சி பெறுகின்றன.
சிற்பியின் மகள் அபிராமியும் வில்லுப்பாட்டுக்காரன் காளிமுத்துவும் மனதார காதலிக்கின்றனர். இதில் கிராமத்துத்தலைவர் மகன் செல்லதுரை அபிராமியை பலவந்தப்படுத்தி அடைய முயற்சிக்கிறான்.
ஆனால், திடீரென அபிராமிக்கும் முறைமாமனான அபிராமிக்கும் கல்யாண நிச்சயம் முடிகிறது. கோயிலும் குடமுழுக்குத் தயார் நிலையில் உள்ளது. அந்த குடமுழுக்கை நிறுத்த பல்வேறு சதி வேலை செய்கிறான் கிராமத்தலைவரின் மகன் செல்லத்துரை. இறுதியில் அதை முறியடிக்கிறான் வில்லுப்பாட்டுக்காரன் காளிமுத்து.
இறுதியில் காளிமுத்துவுக்கும் அபிராமிக்கும் திருமணம் நடைபெற்றதா இல்லையா என்பதைச் சொல்லியிருக்கிறது, வில்லுப்பாட்டுக்காரன்.
இதில் காளிமுத்துவாக ராமராஜனும் அபிராமியாக ராணியும் நடித்துள்ளனர். தவிர, முறைமாமன் ராஜசேகரனாக சந்திரசேகரும்; கிராமத்தலைவரின் மகன் செல்லத்துரையாக விகாஷ் ரிஷியும் நடித்துள்ளனர். மேலும் சிற்பியாக எம்.என்.நம்பியாரும் கிராமத்தலைவராக சண்முக சுந்தரமும் நடித்துள்ளனர்.
தவிர அப்பாக்கண்ணு கதாபாத்திரத்தில் கவுண்டமணியும், தங்கப்பனாக செந்திலும் காளிமுத்துவின் தாயாக எஸ்.என்.லட்சுமியும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் மொத்தம் ஆறுபாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கலைவாணியோ ராணியோ, சோலை மலை ஓரம், வானம் என்னும் ஆகியப் பாடல்கள் இன்றும் கேட்கும் ரகம். மேலும் தந்தேன் தந்தேன் என்னும் உதடு ஒட்டாத பாடலை கவிஞர் வாலி இத்திரைப்படத்திற்காக எழுதியுள்ளார். இப்படத்திலுள்ள அனைத்துப் பாடல்களும் ரிலீஸானபோது மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளன.
பாடலில் தனித்து நின்று வெற்றி பெற்ற வில்லுப்பாட்டுக்காரன் திரைப்படத்தின் பாடல்கள் இன்றைய தலைமுறையினரும் ரசிக்கும் வகையில் இருப்பது அதன் தனிச்சிறப்பு.
– நன்றி : காளிமுத்து ராஜ் முகநூல் பதிவு