Take a fresh look at your lifestyle.

அஜித் படத்துக்கு புதிய சிக்கல்!

ரூ. 150 கோடி கேட்கிறது ‘ஹாலிவுட்’ நிறுவனம்.

‘பட்ட காலிலேயே படும்… கெட்ட குடியே கெடும்’ என்ற பழமொழி, ‘லைகா’ சினிமா தயாரிப்பு நிறுவனத்துக்கு நூறு சதவீதம் பொருந்தும்.

அந்த நிறுவனம் தயாரித்த லால் சலாம், இந்தியன் – 2, வேட்டையன் ஆகிய படங்கள் தொடர்ச்சியாக தோல்வி கண்டன.

இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தை ‘லைகா’ தயாரித்து வருகிறது. படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை.

இதற்குப் பிறகு, அஜித் ஒப்புக்கொண்ட ‘குட் பேட் அக்லி’ படம் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது.

விடாமுயற்சி, பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு வாய்ப்பு இல்லை. பொங்கலுக்கு ‘குட் பேட் அக்லி’ படம்தான் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

உச்ச நட்சத்திரங்களின் படங்களில் தொலைத்த தொகையை விடாமுயற்சியில் எடுத்து விடலாம் என லைகா நிறுவனம் கனவில் மிதக்க, அந்தப் படம், புதிய சிக்கலை உருவாக்கி உள்ளது.

‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. டீஸரில் உள்ள காட்சிகள், ‘பிரேக்டவுன்’ என்ற ஹாலிவுட் படத்தில் உள்ளவை என தெரிய வந்துள்ளது.

‘பிரேக் டவுன்’ திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளியானது. குர்த் ரசேல், கதாநாயகனாக நடிந்திருந்தார். ஒரு விபத்தில் மனைவியை தொலைத்த, ஹீரோவின் மனஅழுத்தத்தை அந்தப் படம் விவரித்தது.

‘பிரேக்டவுன்’ படத்தை, காப்பி அடித்து, விடாமுயற்சி உருவாகி இருப்பதாக இணையங்களில் செய்திகள் பரவின.

இதனை பார்த்த ‘பிரேக்டவுன்’ படக்குழுவினர் லைகா நிறுவனத்துக்கு இ-மெயில் ஒன்றை அனுப்பி உள்ளனர்.

அதில், ‘நீங்கள் தயாரிக்கும் விடாமுயற்சி, எங்களது படத்தின் ரீமேக் என தெரிய வந்துள்ளது’- அதற்கு, இழப்பீடாக 150 கோடி ரூபாய் தர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் லைகா நிறுவனம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

ஏற்கனவே படப்பிடிப்பு தாமதம், எகிறிய பட்ஜெட் என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட ‘லைகா’வுக்கு, ஹாலிவுட் நிறுவனம் அனுப்பிய நோட்டீஸ், புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.