Take a fresh look at your lifestyle.

பொங்கல் ரேசிலிருந்து விலகிய ‘விடாமுயற்சி’!

பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு என்றால், தமிழ்நாட்டில் சினிமாக்கள் வரிசைக் கட்டி நிற்கும்.

இப்போது, அப்படி இல்லை.

ஒன்றிரண்டு படங்களே வெளியாகின்றன. அதுவும், பெரிய நட்சத்திரங்களின் படங்கள் மட்டுமே.

இந்த ஆண்டு தமிழர் திருநாளில், மூன்று படங்கள் வெளிவருவதாக இருந்தது.

அஜித்தின் ‘விடாமுயற்சி’, பாலாவின் ‘வணங்கான்’ மற்றும் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்களே அவை.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள விடாமுயற்சியை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். அஜித்துடன், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் நிறைய பணத்தைக் கொட்டியுள்ளது லைகா.

பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், லைகா நிறுவனம் பின்வாங்கி விட்டது.

‘தவிர்க்க இயலாத காரணங்களால் விடாமுயற்சி பொங்கலுக்கு வரவில்லை’  என அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இன்றைய தேதியில் வணங்கான், கேம் சேஞ்சர் ஆகிய இரு படங்களின் ரிலீஸ் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் வணங்கான் மட்டுமே நேரடி தமிழ்ப்படம். கேம் சேஞ்சர் தெலுங்கில் எடுக்கப்பட்டு, தமிழில் ‘டப்’ செய்யப்பட்டுள்ளது.

வணங்கான்:

பாலா இயக்கியுள்ள ‘வணங்கான்’ படம் ஆரம்பமானபோது, சூர்யா ஹீரோவாக நடித்தார். கன்னியாகுமரியில் பல நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

பின்னர் அந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகிக்கொண்டார். அவருக்கு பதிலாக அருண் விஜய், உள்ளே வந்தார். இதில் அவர் மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார்.

கேம் சேஞ்சர்:

நம்ம ஊர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தில் ராம் சரண், ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு இரட்டை வேடம். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வருகிறார்.

அவருக்கு ஜோடியாக நடித்துள்ள கியாரா அத்வானிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி வேடம். அரசியலை மையமாகக் கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் ஷங்கர். 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஐந்து பாடல் காட்சிகளுக்கு மட்டும் 75 கோடி செலவாகியுள்ளது.

தொடர்ச்சியாக தோல்விகளைத் தந்த பாலாவுக்கு; ‘வணங்கான்’ வெற்றி, ஒரு கட்டாயத் தேவையாக உள்ளது.

நாலைந்து ஆண்டுகள் உழைப்பில் உருவான ‘இந்தியன்-2’  படத் தோல்வியால் உழன்றுள்ள ஷங்கருக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் வெற்றியே அவரது அடுத்த நகர்வுகளைத் தீர்மானிக்கும். எனவே இந்த இரண்டு படங்களும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

– பாப்பாங்குளம் பாரதி