Take a fresh look at your lifestyle.

‘விடாமுயற்சி’ முதல்நாளில் ரூ. 22 கோடி வசூல்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள்னர்.

அனிருத் இசையமைத்திருக்கிறார்.

சினிமா ரசிகர்களால் கடந்த சில மாதங்களாகப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘விடாமுயற்சி’ நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

2 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் அஜித் படமென்பதால், அவரது ரசிகர்கள், தியேட்டர்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைகளில் படம் வெளியானது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. பல வெளிநாடுகளில் காலை 6 மணிக்கே ஷோ ஆரம்பமானது.

அஜித்தின் நடிப்பு, அனிருத்தின் பின்னணி இசை போன்ற அம்சங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

முதல்நாளில் திரை உலகப் பிரபலங்கள் ஆரவ், திரிஷா, அனிருத், ‘குட் பேட் அக்லி’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்துள்ளனர்.

முதல் நாளில் இந்தப் படம் தமிழகத்தில் 21 கோடியே 50 லட்சம் ரூபாயை அள்ளியது. தெலுங்கில் 50 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. வெளிநாடுகளின் வசூல் நிலவரம் தெரியவில்லை.

படத்துக்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால், வார இறுதி நாட்களில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் திரையரங்குகளுக்கு திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தயாரிப்பாளரை அதிர்ச்சி அடைய செய்யும் விதமாக, ‘விடாமுயற்சி’ வெளியான சில மணி நேரங்களில் திருட்டு இணைய தளங்களில் முழுப்படமும் வெளியானது.

பலர், செல்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களில் பதிவிறக்கம் செய்து படத்தை பார்த்துள்ளனர்.

-பாப்பாங்குளம் பாரதி.