Take a fresh look at your lifestyle.

பட விழாவில் அனுமனை வசைபாடிய ராஜமவுலி!

திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமவுலி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை ஹீரோவாக வைத்து படம் இயக்கியுள்ளார்.

படத்துக்குப் பெயர் சூட்டும் வைபவம் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.

நாயகன் மகேஷ்பாபு, நாயகி பிரியங்கா சோப்ரா, வில்லன் பிரிதிவிராஜ், ராஜமவுலி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

‘பான் வேர்ல்டு’ படமாக உருவாகி இருப்பதால் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ரசிகர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

ராஜமவுலியின் தந்தையும், படத்தின் கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத் தொடக்க உரை ஆற்றினார்.

“படக்குழுவுக்கு அனுமான் உறுதுணையாக இருந்து வழி நடத்துவார்”என அவர் தெரிவித்தார்.

இதையடுத்து எழுந்த ராஜமவுலி, படத்துக்கு ‘வாரணாசி’ என டைட்டில் வைக்கப்படுவதாக, பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் கூறினார். தொடர்ந்து டிரெய்லரை வெளியிட முயன்றபோது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. டிரெய்லரை வெளியிட முடியவில்லை.

இதனால் ராஜமவுலி அப்செட் ஆனார். மேடையிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் அனுமனை வசை பாட ஆரம்பித்தார்.

“எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது – இந்தப் படக்குழுவுக்கு அனுமான் வழி காட்டுவார்” என என் தந்தை சொன்னார் – “இப்படித்தான் அனுமான்வழி காட்டுவாரா?” என ஆரம்பித்து, புலம்பினார்.

ராஜமவுலியின் சர்ச்சை கருத்து அனுமன் பக்தர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.

“நீங்கள் நாத்தினாக இருந்து விட்டுப்போங்கள் – அதற்காக அனுமனை குறை சொல்வதை ஏற்க முடியாது” என்று ஒருவரும்; படம் வெற்றி பெற்றால் கடவுளைக் கண்டுகொள்வது கிடையாது – தோற்றால் மட்டும் கடவுள் மீது பழிபோடுவீர்கள்” என்று இன்னொருவரும் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

“தொழில்நுட்பக் கோளாறுக்கு உங்கள் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கண்டிக்காமல், அனுமனை ஏன் இந்த விவகாரத்தில் இழுக்கிறீர்கள்?” என்று மற்றொரு நெட்டிசன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

– பாப்பாங்குளம் பாரதி.