உண்மைச் சம்பவங்கள் நேர்த்தியாக படமாக்கப்படும் பட்சத்தில், அவை மக்கள் மனதில் பற்றிக்கொள்வதோடு, தயாரிப்பாளர்களையும் திருப்தி அடையச்செய்யும்.
நாயகன் படம் ஆரம்பித்து ஜெய்பீம் வரை உதாரணங்களை அடுக்கலாம்.
இந்த வரிசையில் வாச்சாத்தி வன்கொடுமை நிகழ்வை சினிமாவாக எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார், நடிகை ரோகிணி. இயக்குநர், டப்பிங் கலைஞர், கவிஞர் என பன்முகங்கள் கொண்ட ரோகிணி, அரசியல் தளத்திலும் இயங்கி வருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்.
அந்தக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் பிரச்சாரமும் செய்துள்ளார்.
வாச்சாத்தி கிராமத்துக்கு நிதியும், நீதியும் வாங்கிக் கொடுப்பதற்காக, சட்டப் போராட்டம் நடத்திய சிபிஎம் இயக்கத்தைச் சார்ந்தவர் என்பதால், அந்தக் கிராமத்துக்கு நேர்ந்த குரூரத்தை இயக்கும் முழுத் தகுதியும் வாய்ந்தவர் ரோகிணி.
வாச்சாத்தியில் என்ன நடந்தது?
கடந்த 1992 ஆம் ஆண்டு நிகழ்ந்த வாச்சாத்தி வன்முறைச் சம்பவம், உலகம் அறிந்த சேதி என்றாலும் அதனை மீண்டும் நினைவு கூர்வோம்.
தர்மபுரி மாவட்டம் அருர் அருகேயுள்ள மலைக் கிராமம் வாச்சாத்தி. இங்கே வசிப்பவர்கள் அனைவருமே மலைச்சாதி.
1992 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20 ஆம் தேதி வனத்துறை, வருவாய் துறை, காவல்துறை ஆகிய முப்படைகளும் இந்த ஊருக்குள் புகுந்தன.
சந்தன மரங்களை வெட்டிப் பதுக்கி வைத்திருப்பதாக சொல்லி, ஹமாஸ் தீவிரவாதிகள் மீது யுத்தம் தொடுப்பது போல், அப்பாவி கிராம மக்களை கொடூரமாக தாக்கினர்.
உச்சக்கட்டமாக 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். சிபிஐ விசாரித்து, மூன்று துறைகளைச் சேர்ந்த 269 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
விசாரணையின் போதே 54 பேர் இறந்து போனார்கள். எஞ்சிய 215 பேருக்கு 3 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதித்து தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அண்மையில் இந்தத் தீர்ப்பை சென்னை உயர்நீதி மன்றமும் உறுதி செய்தது.
நெஞ்சை நொறுக்கும் இந்த நிஜத்தை, திரையில் வடிக்கப் போகிறார், ரோகிணி.
முக்கிய கதாபாத்திரத்தில், ‘ஜெய்பீம்’ படத்தில் செங்கேணியாக நடித்த லிஜோ மோல், மற்றும் ரோஹிணி நடிக்கவுள்ளனர்.
ஆதவன் தீட்சண்யா திரைக்கதை, வசனம் எழுதுகிறார். மற்ற நட்சத்திரங்கள் உள்ளிட்ட கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார் ரோகிணி.
– பாப்பாங்குளம் பாரதி.