Take a fresh look at your lifestyle.

நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்…!

திரைத் தெறிப்புகள் – 48 :

குரலிலேயே உச்சிக்கு ஏற முடியுமா?

தன்னுடைய குரல் வீச்சலால் உயரத்துக்குப் போன பலர் தமிழ்த் திரையிசையிலும், நாடக உலகிலும் இருந்திருக்கிறார்கள்.

பெண் குரல்களில் அப்படிப்பட்ட நல் உயரத்தை எட்டியவராக கே.பி. சுந்தரம்பாள் அவர்களைச் சொல்லலாம்.

அந்த விதமாக ஆண் குரல்களில் உச்சம் தொட்ட சில குரல்களில் ஒன்றாக நாகூர் இ.எம். ஹனீஃபாவைச் சொல்லலாம்.

ஏற்கனவே பீம்சிங்கின் இயக்கத்தில் 1961-ம் ஆண்டில் வெளிவந்த ‘பாவமனிப்பு’ படத்தில் இடம்பெற்ற மத நல்லிக்கணத்தை வலியுறுத்தும்  பாடலான “எல்லோரும் கொண்டாடுவோம்…” என்கின்ற பிரபலமான பாடல்களில் ஹனீஃபாவின் குரலும் ஒலித்திருக்கிறது.

1997-ம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த ‘ராமன் அப்துல்லா’ படத்தின் இடம் பெற்ற “உன் மதமா? என் மதமா?” என்கின்ற பாடலைத் தனித்து தன்னுடைய வளமான குரலில் பாடியிருப்பார் நாகூர் ஹனீஃபா.

மத ஒற்றுமையையும், அனைத்து மதத்தவர்களுக்கும் இடையிலான பூசல்களைத் தீர்க்கும் விதத்தில் நறுக்கென்று அமைந்திருக்கும் இந்தப் பாடலை, பட்டுக்கோட்டையார் பாணியில் எழுதி இருப்பவர் கவிஞர் வாலி. இப்பாடலுக்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா.

ஏய்.. எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு.
கத்திக் கத்தி தொண்டைத் தண்ணி வத்தியாச்சு.

சுத்தமாகச் சொன்னதெல்லாம் போதலையா!
மொத்தமாக காதுல தான் ஏறலியா…!”

– என்கின்ற முன்னோட்டத்துடன் துவங்கும் இந்தப் பாடல், நிகழ்காலத்திற்கு மிகவும் தேவையான இடத்தைப் பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்திருக்கிறது.

“உன் மதமா? என் மதமா ?ஆண்டவன் எந்த மதம்?
நல்லவங்க எம் மதமோ ஆண்டவன் அந்த மதம்.

அட போங்கடா போங்கடா.. போங்கடா..
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா?
கூட வாங்கடா. வாங்கடா.. வாங்கடா..
சொல்லாத சங்கதி சொல்லுறேன் கேளுடா…”

அந்த ஆண்டவன் தான் கிறிஸ்தவனா? முஸ்லிமா? இல்லை இந்துவா?” – என்று நகரும் இந்தப் பாடல் வெகு மக்களுக்கான எளிய மொழியில், வீரியத்துடன் மதங்களுக்கு அப்பாற்பட்ட மனித நேயத்தின் குரலாக ஒலிக்கிறது.

“நீயும் நானும் ஒண்ணு.
இது நெசந்தான் மனசுல எண்ணு.
பொய்யையும் புரட்டையும் கொன்னு
இந்த பூமிய புதுசாப் பண்ணு.

கணக்கிலொரு கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும் இருப்பது உண்மையடா..
கூட்டல் மட்டும் வாழ்க்கையில் நடக்குது.
பாவத்தைப் பெருக்குது.
இது என்ன ஜென்மமடா?

இப்ப புதுசா கணக்கெழுது 
இங்கு வரட்டும் நல்ல பொழுது”.

– என்று பாடியிருக்கும் ஹனீஃபா இந்தப் பாடலை பாடுவதற்கு முன்பு இயக்குநரான பாலு மகேந்திராவை சந்தித்தபோது, படத்தின் பெயரை ‘அப்துல்லா ராமன்’ என்று இருந்ததை, ‘ராமன் அப்துல்லா’ என்று மாற்றச் சொல்லியிருக்கிறார்.

பாலு மகேந்திராவும் அதற்குச் சம்மதித்து படத்தின் பெயரை மாற்றியிருக்கிறார்.

இந்தப் பாடலை தற்போது கேட்கும் போதும் “மனிதமே முக்கியம்” என்பது தான் இதன் அடிநாதமாய் ஒலிப்பதை உணர முடியும்.

நிறைவாக,

“அட பத்திரம் பத்திரம் பத்திரம்
தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில் வருது.
இது சத்தியம் சத்தியம் சத்தியம்.
சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது.”

– என்று மனித ஆத்மாவின் கம்பீரக் குரலில் ஒலித்திருக்கும் நாகூர் ஹனீஃபாவின் நூற்றாண்டு நெருங்க இருக்கிறது.

நூற்றாண்டு கடந்தாலும் ஹனீஃபாவின் ஒங்கி ஒலிக்கும் குரலை நாம் சுலபமாகக் கடந்துவிட முடியாது.

*

-மணா. 

*