திரைத் தெறிப்புகள் – 59 :
*
மெல்லிசைப் பாடல்களில் கொடிகட்டிப் பறந்த எஸ்.பி.பி., தனக்கு மிகவும் பிடித்த டி.எம்.எஸ்-ஸின் பாடல் என்று “உன் கண்ணில் நீர் வழிந்தால்” என்று துவங்கும் பாடலைச் சொல்லியிருப்பார்.
மகாகவி பாரதி வரிகளிலிருந்து கிளை பரப்பி கவியரசர் கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல், 1970-ல் வெளிவந்த ‘வியட்நாம் வீடு’ படத்தில் இடம்பெற்றது.
“உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ…”
– என்று அற்புதமாகப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்.
கவித்துவமும், கனிந்த அன்பும் ததும்பியிருக்கும் இந்தப் பாடலைக் கேட்கும் போது அவ்வளவு நெகிழ்வாக இருக்கும்.
திரையில் முதிர்ந்த தோற்றத்தில் சிவாஜியும், பத்மினியும் வெளிப்படுத்துகிற முகபாவங்களே அவ்வளவு பொருத்தமாக இருக்கும்.
“உன்னைக் கரம் பிடித்தேன்.
வாழ்க்கை ஒளிமயமானதடி.
பொன்னை மணந்ததனால் சபையில்
சபையில் புகழும் வளர்ந்ததடி…”
– என்று நகரும் இந்தப் பாடலுக்கு மிகக் குறைந்த இசைக் கருவிகளோடு, மிக நிறைவான இசையைத் தந்திருப்பார் கே.வி. மகாதேவன்.
சொந்த உறவுகள் ஒதுக்கிய நிலையில், வயது முதிர்ந்தாலும் அன்பால் இறுக இணைந்திருக்கும் தம்பதியின் வாழ்வை எவ்வளவு சிக்கனமான வரிகளில் உணர்த்திருக்கிறார் கவியரசர்.
“காலச் சுமைதாங்கி போலே
மார்பில் எனைத் தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்.
அதில் என் விம்மல் தணியுமடி…
ஆலம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன…
வேர் என நீ இருந்தாய்.
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்..”
முதுமைக் காலத்தில் தேவைகள் குறைவாக இருந்தாலும், அதை உணர்ந்து நிறைவேற்றுபவர்கள் அதைவிடக் குறைவாகவே இருப்பார்கள்.
இந்தச் சமயத்தில் தன்னுடைய தேவைகளின் குறிப்பறிந்து நிறைவேற்றும் துணையைத் தெய்வம் என்று உரிமைப் பாராட்டும் அளவிற்கு இருக்கிறது, இவர்களது முதிர்ந்த அன்பு.
“முள்ளில் படுக்கையிட்டு
இமையை மூட விடாதிருக்கும்
பிள்ளைக் குலமடியோ ..
என்ன பேதைமை செய்ததடி…
பேருக்கு பிள்ளை உண்டு.
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு…
என் தேவையை யார் அறிவார்?
உன்னை போல்
தெய்வம் ஒன்றே அறியும்…”
– என்ற வரிகளை டி.எம்.எஸ்., என்கின்ற நம் காலத்தின் கலைஞன் அழுத்தம் கொடுத்துப் பாடும்போது எவ்வளவு உயிர்த் துடிப்புக்கூடி விடுகிறது, இந்த எளிதில் மறக்க முடியாத எளிய வரிகளுக்கு!
பாடகர் எஸ்.பி.பி., மதிப்பிட்டது சரிதான்!
*
- மணா
*
#வியட்நாம்_வீடு #Vietnam_veedu #கேவி_மகாதேவன் #KV_Mahadevan #கவியரசர்_கண்ணதாசன் #Kaviyarasar_Kannadasan #டிஎம்_சௌந்தர்ராஜன் #TM_Soundarrajan #சிவாஜி_கணேசன் #Sivaji_ganesan #பத்மினி #Padmini #எஸ்பி_பாலசுப்ரமணியம் #SP_Balasubramaniam