Take a fresh look at your lifestyle.

“வருவதை எதிர்கொள்ளடா…!”

திரைத் தெறிப்புகள் – 44:

கவிஞர் கண்ணதாசனின் திரைப்பட வாழ்வில் மிக முக்கியமான இடத்தை வகித்த பாடல்களில் ‘கர்ணன்’ திரைப்படத்தில்  இடம்பெற்ற

“உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா – கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா…”

– என்று துவங்கும் பாடல் முக்கியமானது.

மகாபாரதக் கதைகளின் கிளையாக உருவான ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை, தன்னுடைய உச்சஸ்தாயிக் குரலில் பெரும் வீச்சைப் போலப் பாடியிருப்பவர் உச்சரிப்பில் பிரமிப்பையே ஏற்படுத்திய பாடகரான சீர்காழி கோவிந்தராஜன்.

போர்க்களத்தில் சரிந்த தேர்ச் சக்கரத்தில் சாய்ந்து – மார்பில் அம்பு பாய்ந்து, குருதி கொட்டியபடி தவித்துக் கொண்டிருக்கும் கர்ணனாக நடிக்கும் சிவாஜியைப் பார்த்து, நீலவண்ணக் கண்ணனாக என்.டி.ராமராவ் பாடுவதாக அமைந்திருக்கும் இந்தப் பாடல்.

“தாய்க்கு நீ மகனில்லை.
தம்பிக்கு அண்ணனில்லை.
ஊர்ப் பழி ஏற்றாயடா..
நானும் உன் பழி கொண்டேனடா…”

– என்று தொடரும் இந்தப் பாடல் மகா பாரதக் கதையின் சாரத்தை மிக எளிய கவித்துவ வரிகளில் உணர்த்தி இருக்கிறது.

இந்தப் பாடல் காட்சியின் நிறைவாக கண்ணனே வேறு வடிவம் எடுத்து கர்ணன் முன்பாகப் பாடுவதாக இடம்பெற்றிருக்கும் கீழ்க்கண்ட வரிகள் அடிக்கடி பல்வேறு அரசியல் சூழ்நிலையில் எடுத்துக் கையாளப்பட்டுப் பிரபலமான வரிகள்.

“செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா..
வஞ்சகன் கண்ணனடா…”

– என்று இந்தப் பாடல் நிறைவடையும்போது, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அழுத்தமான நடிப்பும், அவரது குரல் முனகலும்கூட, பார்ப்பவர்களை அந்தக் காட்சியோடு உணர்வுபூர்வமாக ஒன்ற வைக்கும்படி இருக்கும்.

தமிழ் மண்ணின் மகத்தான பாடகரான சீர்காழி கோவிந்தராஜனின் கனிந்த தமிழ் உச்சரிப்புக்காகவே இந்தப் பாடலை மீண்டும் ஒருமுறை கேட்டுப் பாருங்கள். மனதுக்குள் ஒருவித “தியானமான அமைதி “வந்து நிறைவதை உணர்வீர்கள்.

– மணா