Take a fresh look at your lifestyle.

விரைவில் தொடங்குகிறது ‘துப்பறிவாளன் -2’!

நடிகர் விஷாலை, தமிழ் சினிமாவின் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்ற படங்களில் ‘துப்பறிவாளனு’க்கு முக்கிய பங்கு உண்டு.

மிஷ்கின் இயக்கியிருந்த இந்தப் படத்தில் விஷாலுடன் இணைந்து பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, அணு இமானுவேல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம், உலகளவில். 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. இதனால் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகள் வேகவேகமாக ஆரம்பமானது.

மிஷ்கினே, இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ‘துப்பறிவாளன் 2’ படத்தின் ஷுட்டிங் லண்டனில் நடைபெற்ற போது விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது மோதலாக உருவெடுத்தது.

இதனால், படத்தில் இருந்து மிஷ்கின் ஒதுங்கிக் கொள்ள, ‘அந்தப் படத்தை நானே இயக்கி நடிக்கப்போகிறேன்’ என அறிவித்தார் விஷால்.

ஆனால், உடனடியாக படத்தை ஆரம்பிக்கவில்லை. வேறு வேறு படங்களில் நடிப்பதில் பிஸி ஆனார். இப்போது விஷால், ஹரி டைரக்டு செய்யும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இது விஷாலின் 34 வது படம். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

விஷால் – ஹரி கூட்டணி ஏற்கனவே தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை கொடுத்துள்ளது. இரண்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்கள்.

இதனால் விஷாலின் புதிய படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி, காரைக்குடி, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

இதன் இறுதிக் கட்ட ஷுட்டிங் இப்போது காரைக்குடியில் மீண்டும் தொடங்கி உள்ளது. இந்த மாதத்துடன் படம் முடிந்து விடும்.

இதனைத் தொடர்ந்து, தானே இயக்கி நடிக்கும் ‘துப்பறிவாளன்-2′ படத்தை கையில் எடுத்து ஒரே மூச்சில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார் விஷால்.

‘சண்டைக்கோழி’ திரைப்படம் விஷால் நடிப்பில் உருவாகி, அவரது சினிமா சந்தையை விரிவுபடுத்திய படமாக அமைந்தது. ஆனால், ‘சண்டைக்கோழி – 2’ படம் வசூல் குவிக்கவில்லை என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

– பாப்பாங்குளம் பாரதி.