இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘தக் லைஃப்’. இந்தப் படத்தின் மூலம் கமல்ஹாசனும் மணிரத்னமும் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர்.
முன்னதாக இவர்கள் கூட்டணியில் வெளியான ‘நாயகன்’ படம் தமிழ்த் திரையுலகில் பெரும் பாராட்டைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷமி, அபிராமி, நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளன.
சில நாட்களுக்கு முன் சிம்பு இப்படத்திற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியதாக அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். நேற்று கமல்ஹாசன் அவரது டப்பிங் பணிகளைத் தொடங்கினார். அதற்கான ஒரு சின்ன ப்ரோமோ வீடியோவும் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் இன்று கமல்ஹாசனின் 72-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் தக் லைஃப் படத்தின் வெளியீட்டுத் தேதி மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘தக் லைஃப்’ படம், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.