Take a fresh look at your lifestyle.

படைப்பாளிகளைத் தந்த திரையுலகக் கலைத்தாய்!

எம்ஜிஆர், சிவாஜி சகாப்தம் போல கதாநாயகர்களைக் கடந்து படைப்பாளியே ஒரு பிராண்டாகி சினிமாவில் தனக்கான கொடியை பறக்கவிட்டவர் பாரதிராஜா!

மாறிக் கொண்டிருந்த சினிமா களத்தில் புதிய படைப்பாளிகளையும், கலைஞர்களையும் தந்து திரைத்துறையின் திசை வழியை  மாற்றி அமைத்தவர்! பாரதிராஜாவின் படைப்புலகம் ஒரு பார்வை;

ஒரு தலைமுறையையே தன் படைப்பாற்றலால் கட்டிப் போட்டவர் பாரதிராஜா. எம்.ஜி.ஆர் யுகம், சிவாஜி யுகம் என்பதற்கு இணையாக பாரதிராஜாவின் யுகம் பேசப்பட்டது.

எம்.ஜி.ஆர் சினிமாவில் இருந்து விலகி, அரசியலில் அடி எடுத்து வைத்த காலகட்டம்.

நடிகர் திலகம் சிவாஜியின் அலை மெல்ல, மெல்ல அடங்கிக் கொண்டிருந்த சூழலில், காலம் சரியாக பாரதிராஜாவிற்கு சினிமா கதவுகளைத் திறந்துவிட்டது.

ரஜினியும், கமலஹாசனும் அடுத்த தலைமுறையின் ஸ்டார் நட்சத்திரங்களாகப் போகிறவர்கள் என்பதை முன் கூட்டியே கணித்து, அவர்கள் இருவரையும் தன் முதல் படத்திலேயே சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டவர் பாரதிராஜா!

‘16 வயதினிலே’ படத்தில் கமலஹாசனின் சம்பளம் ரூ25,000. ரஜினியின் சம்பளம் 5,000.

இந்தப் படம் தான் கமலஹாசன் ஒரு நடிப்பு அசூரன் என திரையுலகத்திற்கு காட்டியது.

ஜினி இந்தப் படத்தில் பேசிய, “இது எப்படி இருக்கு?” என்று நக்கலாக கேட்கும் வசனம் அந்த நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ரொம்ப பிரசித்தமானது.

‘16 வயதினிலே’ வைத்தொடர்ந்து கிழக்கே போகும் ரயிலில் ராதிகா, சுதாகர் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.

இந்தப் படம் சக்கை போடு போட்டது. சிகப்பு ரோஜாக்களில் கமலை பெண்களைக் கொல்லும் கொடூர சைக்கோ வில்லனாக நடிக்க வைத்தார்.

புதிய வார்ப்புகளில் தன்னுடைய உதவி இயக்குநர் பாக்யராஜை நடிகராக்கினார்!

ரதி என்ற கதாநாயகியையும் அறிமுகப்படுத்தினார். நிறம் மாறாத பூக்களில் விஜயன் என்ற அற்புத நடிகரை அறிமுகப்படுத்தினார்.

‘நிழல்கள்’ படத்தில் நடிகர் ரவியை அறிமுகப்படுத்தியதோடு கவிஞர் வைரமுத்து என்ற பேராற்றல் பெற்ற கவிஞரை தமிழ் சினிமாவிற்கு தந்தார்.

‘அலைகள் ஓய்வதில்லை’யில் கார்த்திக்கையும், ராதாவையும் அறிமுகப்படுத்தி மதம் கடந்த காதலைச் சொன்னார்.

‘காதல் ஓய்வதில்லை’யின் பாதிப்பில் அன்று பள்ளி, கல்லூரி இளசுகள் வீட்டை விட்டு ஓடும் நிகழ்வுகள் நூற்றுக்கணக்கில் அரங்கேறின.

பிடிபட்டவர்களில் பலர் அலைகள் ஓய்வதில்லையின் தாக்கத்தால் ஓடியதாக சொன்னதும் பதிவாகி உள்ளன.

டிக்,டிக்,டிக் படத்தில் இளைமையின் துள்ளலைக் காட்டினார். காதல் ஓவியத்தில் இளையராஜாவும், வைரமுத்துவும் காவியப் பாடல்களைத் தந்தனர்.

மண் வாசனையில் ரேவதி, பாண்டியன் அறிமுகமாகினர்.

புதுமைப் பெண்ணில் பெண்ணின் சுயமரியாதையை தூக்கிப் பிடித்தார், முதல் மரியாதையில் நடிகர் திலகத்துடன் கைகோர்த்து காவியப் படம் தந்தார்.

கடலோரக் கவிதைகளில் சத்யராஜை கதாநாயகனாக்கினார், ரேகாவை அறிமுகப்படுத்தினார். வேதம் புதிது படத்தில் சாதி பெருமிதங்களை கேள்விக்கு உட்படுத்தினார்!

இப்படியாக 1977 தொடங்கி 1987 வரை படைப்பாளியான பாரதிராஜா தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த காலம் எனலாம்.

இதில், வாலிபமே வா வா மிகைப்படுத்தப்பட்ட செக்ஸ்சாக எடுத்ததில் கடும் விமர்சனம் பெற்றது.

இன்றைக்கு விஜய், அஜித் படங்கள் பேசப்படுவதைவிடவும், அன்று பாரதிராஜா என்ற படைப்பாளியின் படங்கள் அதிகமாக பேசப்பட்டன, கொண்டாடப்பட்டன!

பாரதிராஜா படத்திற்கென்றே அக்கறை எடுத்து இளையராஜா தந்த பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பின. அவை இன்றும் காலம் கடந்து நிற்கின்றன.

1989-ல் ‘கொடி பறக்குது’ என ரஜினியின் நாயக பிம்பத்தை பாரதிராஜா உயர்த்தி கொடி பிடித்த அவலத்தை மக்கள் ஏற்கவில்லை. படம் தோல்வி அடைந்தது.

அதன் பிறகான என்னுயிர் தோழன், புது நெல்லு புது நாத்து, நாடோடித் தென்றல் ஆகியவையும் கவனம் பெற்றன. கிழக்குச் சீமையிலேவில் இளையராஜாவிற்கு மாற்றாக ஏ.ஆர்.ரகுமானோடு இணைந்தார்.

ரகுமானும், வைரமுத்துவும் சேர்ந்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின.

கருத்தம்மா ‘பெண் சிசுக் கொலையை’ப் பேசியது. ஆனால், பிரச்சினையின் வேர் பிடித்துச் சொல்லப்படவில்லை என்ற விமர்சனத்தைப் பெற்றது.

1994-க்கு பிறகான பாரதிராஜாவின் படங்கள் முன்பை போல பெரும் கவனம் பெறவில்லை. ஆயினும் அதற்குப் பிறகும் நல்ல திரைப்படங்களை அவர் தந்த வண்ணமே இருந்தார்.

“கிராமங்களை நோக்கிய ஒரு ஈர்ப்பை பாரதிராஜா உருவாக்கினார். ஆயினும், மிகைப்படுத்திய காதல் ரொமன்ஸ் காட்சிகள், வெள்ளை நிற தேவதைகளை ஆட வைத்தது, கொடூர வன்முறைகளைக் காட்டியது, சைக்கோ கதாபாத்திரங்களை உருவாக்கியது..

போன்றவற்றுக்காக சினிமா விமர்சகர்கள் பாரதிராஜாவை ஒரு வெற்றிகரமான கமர்சியல் இயக்குநராக சொல்ல முடியுமே தவிர, யதார்த்த சினிமாவுக்கான உன்னதப் படைப்பாளி என்ற அங்கீகாரத்திற்கு பொருத்தமானவரில்லை” என்பார்கள், சினிமா விமர்சகர்கள்.

பாரதிராஜா யதார்த்தமான கிராமங்களையோ, கிராமத்தின் சாதியச் சிக்கல்களையோ, அதன் உண்மையான பிரச்சினைகளையோ பேசாமல், வெற்றிகரமான சினிமாவிற்கு தேவையான கச்சாப் பொருளாக கிராமங்களைப் பயன்படுத்திக் கொண்டார் என்ற விமர்சனங்களும் அவர் மீது வைக்கப்பட்டுள்ளன.

இன்றைக்கு பாரதிராஜாவின் பழைய ஹிட் படங்களைப் பார்த்தால், பலவற்றை ஏற்க முடியவில்லை. இவ்வளவு ‘சைல்டிஷாக’ எடுத்திருக்காரே… என்று கூடத் தோன்றுகிறது.

ஆனால், சினிமாவில் தனக்கான ஒரு காலகட்டத்தை அவர் முழுமையாக கட்டி ஆண்டார் என்பதையும், எண்ணற்ற கலைஞர்களை, படைப்பாளிகளை  தமிழ் மற்றும் இந்திய சினிமா உலகிற்கு தந்தார் என்பதும், சகாப்தம் படைத்த கலைஞர் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

– சாவிதிரி கண்ணன்

நன்றி: அறம் இணைய இதழ்