Take a fresh look at your lifestyle.

துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா?

திரைத் தெறிப்புகள் – 53:

துறவிகளுக்குத் தனிமை என்பது பொருத்தமாக இருக்கலாம். ஆனால், மனித உறவுகளும், சொந்தங்களும் வேண்டும் எனும் விரும்புகிறவர்கள் யாரும் தனிமையின் அடர்த்திக்கிடையில் இருக்க முடியுமா?

இப்படி ஒரு ஆத்மார்த்தமான கேள்வியை தமிழ்த் திரைப்பட பாடல்களில் அபூர்வமாகக் கேட்க முடிந்திருக்கிறது.

1962-ம் ஆண்டில் கே. சங்கரின் இயக்கத்தில் உருவான ‘ஆடிப்பெருக்கு’ திரைப்படத்தில் இடம்பெற்ற,

“தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?”

– என்று துவங்கும் பாடலுக்கு இசையமைத்தவர் பின்னணிப் பாடகரான ஏ.எம்.ராஜா.

இந்தப் பாடலுக்கான வரிகளை எழுதி இருப்பவர் சில பாடல்களையே எழுதி இருக்கிறவரான கே.டி. சந்தானம்.

ஏ.எம். ராஜாவும் பி. சுசீலாவும் இணைந்து பாடியிருக்கும் இந்தப் பாடலுக்கு அவ்வளவு இனிமையாக இசையமைத்திருப்பார் மெல்லிசைக்குப் பேர் போனவரான ஏ.எம். ராஜா.

ஒரு மூங்கில் கூடையை மாறிமாறிப் பின்னுவதைப் போல, இந்தப் பாடலில் ஏ.எம். ராஜாவின் குரலும், பி.சுசீலாவின் குரலும் பின்னிப் பிணைந்திருக்கும்.

“துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா?
அதைச் சொல்லிச் சொல்லித் திரிவதனால் துணை வருமா?

மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா?
வெறும் மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா?”

இப்பாடலை இத்திரைப்படத்தில் பாடும் விதமாக நடித்திருப்பார்கள் ஜெமினி கணேசனும், சரோஜாதேவியும். பாடலுக்கு அவர்கள் காட்டும் முகபாவங்கள் கருப்பு – வெள்ளை அழகு.

“மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை.
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை.
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை.
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை…”

தங்களைச் சுற்றிய எதுவும் தனிமையில் இல்லை என்பதை உணர்த்தும் இந்தப் பாடல் நிறைவு பெறும்போது கூட முத்தாய்ப்பாக அருமையாய் இப்படி முடிந்திருக்கும்.

“பனி மலையில் தவமிருக்கும் மாமுனியும்,
கொடி படையுடனே பவனி வரும் காவலரும்,
கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்,
இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும்
தனிமையிலே இனிமை காண முடியுமா?”.

தனிமையைத் தவிர்த்த சொந்த உறவுகளின் பந்தத்தை வலியுறுத்தும் இந்தப் பாடலைத் தனிமையில் கேட்டுப் பாருங்கள்.

இப்பாடலில் மெல்லிய சுகந்தமாக மையப்படுத்தப்பட்டிருக்கும் அன்பின் மகத்துவத்தை உணர முடியும்.

– மணா