Take a fresh look at your lifestyle.

நான் ஒரு சிக்கலான மனிதன்!

‘லாரா’ பட விழாவில் பேசிய நடிகர் கார்த்திகேசன்.

காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’.

இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆர்.ஜே.ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார், கலை இயக்கம் முருகன்.

‘லாரா’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர், நடிகர் கார்த்திகேசன், “நான் ஒரு சிக்கலான மனிதன். என்னைச் சகித்துக் கொண்டு படம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.

அதை இந்த இயக்குநர் செய்து முடித்திருக்கிறார். கோடம்பாக்கத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் சினிமா வாய்ப்புக்காக ஏகப்பட்ட இடங்களுக்கு அலைந்து திரிந்து வாய்ப்பு கேட்டு, ஒரு கட்டத்தில் மனம் வருந்தி கோயம்புத்தூருக்குச் சென்று விட்டேன்.

போன இடத்தில் என்னை வளர்த்துக்கொண்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கே வந்திருக்கிறேன். நமக்கு கனவுகள் இருக்கலாம், கற்பனை இருக்கலாம். அதனை செயல்படுத்துவது முக்கியம். என்னைப் பொறுத்தவரை பணம் சம்பாதிப்பதைவிட நான் நண்பர்களை அதிகம் சம்பாதித்து இருக்கிறேன்.

தனிமரம் தோப்பாகாது என்பது போல் பல பேர் சேர்ந்து உழைத்ததால் தான் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு படம் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறேன்.

மனிதர்களைச் சம்பாதித்ததால் தான் உள்ளூரில் 500 ரூபாய் கடன் கொடுக்கத் தயங்குகிற இந்த உலகத்தில் எனக்கு 5 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு எனக்கு நண்பர்கள் ஆதரவு இருக்கிறது” என்றார்.