Take a fresh look at your lifestyle.

எத்தனைக் காலம்தான் பழைய முகங்களையே பார்ப்பது?

எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோர் தமிழ்த் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவகுமார் போன்ற இளையதலைமுறையினரும் வெள்ளிவிழாப் படங்களை தந்தார்கள்.

எம்.ஜி.ஆர்., அரசியலுக்குச் சென்ற நிலையில், சிவாஜி, தனது வயதுக்கு ஏற்ற சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தபின், ரஜினி, கமல் என புதுமுகங்கள் முளைத்தார்கள்,  தழைத்தார்கள்.

அவர்கள் உச்சத்தில் இருந்தபோதே, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் ஆகியோர் வெற்றிக்கொடிப் பிடித்து வலம் வந்தனர்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினியும், கமலும் தங்கள் தளங்களைக் கெட்டியாக வைத்துள்ள நிலையில், சத்யராஜ் தொடங்கி கார்த்திக் வரையிலான நட்சத்திரங்கள் மூப்பு காரணமாக, அண்ணன், அப்பா வேடங்களுக்கு மாறினார்கள்.

இதன்பின் புதிய வரவுகளாக வந்த விஜய், அஜித், விக்ரம், சூரியா, தனுஷ், சிம்பு போன்றோரின் சினிமா வயது 30 ஆண்டுகள். அடுத்த நிலையில் உள்ள விஷால், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரின் சினிமா வயது – 15 பிளஸ்.

இவர்களைத் தவிர கடந்த 30, 35 ஆண்டுகளில் பெயர் சொல்லும்படியாக எந்த ஒரு ஹீரோவும் உதயமாகவில்லை என்பது கோடம்பாக்கத்தின் துரதிருஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

கே.பாலசந்தர், பாரதிராஜா, டி.ராஜேந்தர் ஆகிய இயக்குநர்களுக்கு பிறகு, எந்த டைரக்டரும் தொடர்ச்சியாக, புதுமுகங்களை அறிமுகப்படுத்தத் தயங்கியதே இதற்கு காரணம்.

அரவிந்த்சாமி, மாதவன் ஆகிய ஓரிருவருடன் மணிரத்னம், தனது அறிமுகங்களை நிறுத்திக்கொண்டார்.

பாக்யராஜ், மனிவண்ணன், பி.வாசு, கே.எஸ். ரவிக்குமார், விக்ரமன், ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்டோர் பல வெள்ளிவிழாப் படங்களை அளித்தவர்கள். ஆனால், இவர்கள், பெரிய அளவில், புதிய முகங்களை அறிமுகம் செய்ததில்லை.

சந்தை மதிப்புள்ள நாயகர்களையே, தங்கள் படங்களில் நடிக்கவைத்து வணிக வெற்றியை அடைந்ததோடு, தங்கள் கலைப்பணி முடிந்து விட்டதாக நினைத்தனர்.

90% வெற்றிப் படங்களைத் தந்த ஷங்கரும், சொற்ப நடிகர்களையே அறிமுகம் செய்தாரே தவிர, அவரும் ஓடும் குதிரையில் தான் சவாரி செய்தார். கடந்த ஐந்தாறு ஆண்டுகளில், புதியவர்கள் வரவில், கோடம்பாக்கத்தின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது.

இன்றைய தினம் வெற்றி இயக்குநர்களாக வலம் வரும், மணிரத்னம், ஷங்கர், லோகேஷ் கனகராஜ், எச்.வினோத், சிறுத்தை சிவா போன்றோர் உச்ச நட்சத்திரங்களை விட்டு நகர்வதாக இல்லை. மருந்துக்கேனும் புதியவர்களை அறிமுகம் செய்யும் திட்டமும் இவர்களிடம் இல்லை.

இன்னும் எத்தனைக் காலம் தான், பழைய ஆட்களையே பார்த்துக்கொண்டிருப்பது? புதிய ஹீரோக்கள் வருவார்களா? என ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் தமிழக ரசிகர்கள்.

– பாப்பாங்குளம் பாரதி.