அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படமும் சூர்யாவின் ‘ரெட்ரோ’ படமும் ஒரே கதைக்களத்தை மையமாகக் கொண்டவை என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘துணிவு’ படத்துக்குப் பிறகு, 2 ஆண்டுகள் கழித்து, அஜித் நடிப்பில் வெளியான படம் ‘விடாமுயற்சி’. ஹாலிவுட் படத்தைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி பரவி சர்ச்சையானது.
‘அஜித் ரசிகர்களின் விருப்பத்தை இந்தப் படம் பூர்த்தி செய்யவில்லை. தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம்.
இதனைத் தொடர்ந்து அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ என்ற திரைப்படம் அடுத்த மாதம் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘ரிலீஸ்’ ஆகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள, இந்தப் படத்தில், திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் ‘மேக்கிங்’கை ஆதிக் ரவிச்சந்திரன் நேற்று இரவு வெளியிட்டார்.
3 நிமிடம் ஓடும் அந்த வீடியோ கலக்கல் ரகம். அந்த வீடியோவில் பல்வேறு ‘கெட்டப்’களில் அஜித் காட்சி அளிக்கிறார்.
அதிரடி சண்டைக் காட்சிகள், ஆட்டம் போட வைக்கும் டான்ஸ், ஏகப்பட்ட துணை நட்சத்திரங்களுடன் அஜித் நடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தொழில்நுட்பக் கலைஞர்களும் அஜித், ஜாலியாக பேசுவது போன்ற காட்சிகளும் அதில் உள்ளன.
இந்தப் படத்தின் கதைக்களம் குறித்த தகவல்கள் பொதுவெளியில் கசிந்துள்ளது. கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாத தாதா வேடத்தில் அஜித் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் வன்முறையை கை விட்டு, தனது குடும்பத்துடன் நிம்மதியாக வாழ முயற்சி செய்கிறார். ஆனால், அவரது கடந்த காலம் அவரை பின் தொடர்கிறது. ஒரு காலத்தில் அஜித் அரங்கேற்றிய, இரக்கமற்ற செயல்களும், குற்றங்களும், அவரை விடாது துரத்துகின்றன.
அதை அஜித் எப்படி எதிர்கொள்கிறார், நினைத்த வாழ்க்கையை அவரால் வாழ முடிகிறதா? என்பதே கதை.
தணிக்கைப் பணிகளுக்கு படக்குழு தரப்பு கொடுத்த குறிப்புகள் மூலம், ‘குட் பேட் அக்லி’ கதைக்களம் வெளியாகி இருக்கிறது. இந்த விவகாரம் இணையங்களில் பேசுபொருள் ஆகிவிட்டது. சூர்யா நடிக்கும் புதிய படத்தின் கதையும் இதுதான், என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
கங்குவா படத்தின் தோல்விக்குப் பின்னர் சூர்யா நடித்துள்ள படம் ‘ரெட்ரோ’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதன் கதை என்ன?.
ஒரு ‘கேங்ஸ்டர்’ வன்முறையை கைவிட்டு, காதலியை கல்யாணம் செய்து கொண்டு, அமைதியாக வாழ விரும்புகிறான். ஆனால் விதி விடவில்லை. அவனது பழைய எதிரிகள் அவனை ஓட ஓட துரத்துகிறார்கள். வேறுவழி இன்றி, தனது பழைய தொழிலுக்கே – அந்தக் ‘கேங்ஸ்டர்’ திரும்புகிறான்.
ஒரே கருவை மையமாகக்கொண்டு இரு படங்கள் ஒரே நேரத்தில் வெளிவருவது, தமிழுக்கு புதியது அல்ல. 80 களில் கமல்ஹாசன் நடித்த ‘வாழ்வே மாயம்’ என்ற படமும், மோகன் நடித்த ‘பயணங்கள் முடிவதில்லை’ படமும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் ‘ரிலீஸ்’ ஆனவை.
இரண்டு சினிமாக்களின் மூலக்கரு ஒன்றுதான். அந்தக் காலத்தில் இரண்டு படங்களுமே வெள்ளிவிழா கொண்டாடின.
– பாப்பாங்குளம் பாரதி.