நாடகத்தின் மேல் அபிமானமும் தீராத நேசமும் கொண்ட உண்மைக் கலைஞன் வி.எஸ்.ஆர். அவர் எந்தப் பாத்திரத்திற்கும் தன் மொழியை மாற்றிக் கொண்டதில்லை.
அதனாலேயே அந்த தழுதழுப்பான குரலும் அந்த அழுத்தமான வடமொழி சொற்கள் கலந்த வசனங்களும் அவரது டிரேட் மார்க் ஆனது. அதனால் அவர் பேசும் வசனங்கள், சாகா வரம் பெற்றன!
மிமிக்ரி கலைஞர்கள் உண்மையாகவே ரசித்து லயித்து வி.எஸ்.ஆரின் குரலைப் பிரதிபலிப்பார்கள்.
எப்படி வாரியாருக்கு “மகனேய்ய்ய்.. ” என்கிற கீச்சுக்குரல் இழுப்பு, முத்திரை ஆனதோ அதேபோல் வி.எஸ். ஆருக்கு “ஷொல்லுங்க” அவருக்குச் ‘சா’வே வராது! ஷா தான் என்று நினைத்திருந்தோம். காலன் கணக்கு வேறு மாதிரியாக இருந்துவிட்டது. இறுதியில் அவருக்கு ‘சா’ வந்துவிட்டது!
எண்ணற்ற பாத்திரங்களில் அவரைப் பார்த்த தலைமுறை எங்களுடையது. ஜாம்பவான்களாக இருந்த சிவாஜி, எம்.ஜி. ஆர்., ஜெமினி போன்றோரின் படங்களில் அவர் ஒரு இன்றியமையாத இணைப்பு.
லேசான தலையாட்டலுடன் அவர் சொன்ன “பிள்ளைவாள்” இன்னமும் சிதம்பரனாரை நம் கண் முன் நிறுத்துகிறது.
அவர் குணச்சித்திர வேடங்களை ஏற்ற கறுப்பு வெள்ளை திரைப்படக் காலங்களில், சரியான போட்டி இருந்தது. ஒரு பக்கம் எஸ்.வி. ரங்கா ராவ். இன்னொரு பக்கம் எஸ்.வி. சுப்பையா.
அவர்களையும் சமாளித்து, தனக்கென ரசிகன் கவனத்தைத் திருப்பிய நடிகர்தான் எஸ்.வி.யைத் திருப்பிப் போட்ட வி.எஸ்.ராகவன்.
மத்தியதரக் குடும்பக் கதைகளை கே.எஸ். கோபாலகிருஷ்ணனுக்குப் பிறகுத் திறம்பட சொல்லிய இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் நடிகர் பட்டியலில் எப்போதும் வி.எஸ். ஆருக்கு ஒரு இடம் சாஸ்வதம்.
நாடகம் தந்த நல்முத்து
சதுரங்கம் என்கிற நாடகம் வி.எஸ்.ஆரின் கலை வாழ்வில் முக்கியமானது. மேடை நாடகத்தில் முதன் முறையாகத் தமிழில் ஒரு செட் நாடகம் போட்டவர் அவர்தான்.
ஆனாலும் கதைப் பின்னலும் பாத்திரங்களின் குணாதிசயமும் ரசிகனைக் கட்டிப் போட்ட காலம் அது.
ஒரே அறையின் பின்புலத்தில் ரசிகனை இருக்கையில் இருத்தி வைக்கும் தன்னம்பிக்கை அவரிடம் இருந்தது. அதில் தைரியம் வந்துதான் பாலசந்தர் ‘எதிர்நீச்சலையே’ மேற்கொண்டார்.
தமிழில் அக்ஷர சுத்தமாகப் பேசும் வி.எஸ்.ஆர். ஆங்கிலத்தில் அபாரப் புலமை பெற்றவர். கேம்பிரிட்ஜா / ஆக்ஸ்போர்டா? என்பார்கள் அந்தக் காலத்தில் கிண்டலாக.
அந்த மாதிரி ஒரு ஆங்கிலேயே உச்சரிப்புடன் அக்மார்க் சுத்தத்துடன் அவரது ஆங்கிலம் வெளிப்படும். வார்த்தைகளுக்குக் கொடுக்கும் அழுத்தமே அதன் உட்பொருளை விளக்கிவிடும்.
வி.எஸ்.ஆர் செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள வெண்பாக்கம் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.
தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து முடித்த பின்பு புரசைவாக்கத்தில் இருந்த அவரது சகோதரியின் வீட்டில் வசித்தபடி அவர் வேலை தேட ஆரம்பித்தபோது அவருக்கு 17 வயது.
பலருக்கும் தெரியாத தகவல் ஒரு பத்திரிகையாளராகத்தான் அவர் வாழ்க்கையைத் தொடங்கினார் என்பது.
எழுத்தாளர் துமிலன் (ந.ராமசாமி) நடத்தி வந்த ‘மாலதி’ என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தவர். அந்தப் பத்திரிகை மூடப்பட்டபிறகு அவரது எழுத்தாற்றல் அவரை நாடகத்துறைக்கு இழுத்துச் சென்றது.
1954-ல் ‘இண்டியன் நேஷனல் ஆர்ட்டிஸ்ட்’ என்ற நாடகக் குழுவை மூன்று நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். அதில் ஒருவர்தான் கே. பாலசந்தர். அவரது தொடக்க கால நாடகங்களில் பெரும்புகழ் பெற்றது ‘வைரமாலை’.
அதன் வெற்றியால் பின்னர் அது திரைப்படமானபோது நாடகத்தில் நடித்த அதே கதாபாத்திரத்தில் வி. எஸ். ராகவன் நடித்தார். அதுவே அவரது முதல் படம். அதன்பிறகு அவர் இல்லாத படமே இல்லை என்ற நிலை உருவானது.
- சிறகு இரவிச்சந்திரன்
– நன்றி: இந்து தமிழ் திசை