அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் சொர்கவாசல். இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படம், 90-ல் நடக்கும் மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகராக மட்டுமல்லாமல் முதன்முதலில் மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஆர்ஜே பாலாஜி. இப்படம் நல்ல வசூலும் வரவேற்பும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ‘வீட்ல விசேஷம்’ படம் இயக்கினார்.
இதுவும் குடும்பங்கள் பார்க்கும் திரைப்படமாகவே அமைந்தது. அதைத் தொடர்ந்து சூர்யாவின் 45-வது படத்தை இயக்க உள்ளார்.
சில நாள்களுக்கு முன், சொர்கவாசல் படத்தின் டீசர் வெளியானது. இதில், இடம்பெற்ற சென்னை மத்திய சிறையிலிருக்கும் கைதிகள் மற்றும் சிறைக் காவலர்களுக்கு இடையான காட்சிகள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
தற்போதுவரை, யூடியூப்பில் இந்தப் படத்தின் டீசர் 4 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.