Take a fresh look at your lifestyle.

எட்டி உதைத்த வில்லன்: அலறித் துடித்த சினேகா!

இது – ரீ-ரிலீஸ் சீசன். ஒரு மாமாங்கத்துக்கு முன் வெளியான ஹிட் படங்கள் மீண்டும் திரையிடப்பட்டு கல்லா கட்டி வருகின்றன. அண்மையில் வெளியான ரீ-ரிலீஸ் படங்களில் விஜயின் ‘கில்லி’ பெரிய அளவில் வசூலித்தது.

இப்போது தனுஷின் ‘புதுப்பேட்டை’ படமும் ரீ-ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஜூலை 26-ம் தேதி தனுஷ் பிறந்த நாள். இதனையொட்டி ‘புதுப்பேட்டை’ படத்தினை 4கே தொழில்நுட்பத்தில் தரம் உயர்த்தி மறுவெளியீடு செய்ய உள்ளனர்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா, அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘புதுப்பேட்டை’ 2006-ம் ஆண்டு வெளியானது.

இந்தப் படத்தை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

இந்நிலையில், புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சினேகா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ள சுவாரஸ்ய தகவல்:

“புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிகர் பாலா சிங், என்னை உதைப்பது போன்ற ஒரு காட்சி வரும். அந்தக் காட்சியில் உண்மையாகவே பாலா சிங், என்னை உதைத்துவிட்டார்.

இந்தக் காட்சியை எடுத்த பின்னர், கேரவன் சென்று வலியால் அலறித் துடித்தேன். பதற்றம் அடைந்த செல்வராகவன் கேரவனுக்கு ஓடோடி வந்தார்.

வலி அதிகமாக இருக்கிறதா என்று என்னிடம் விசாரித்தார். ‘இருந்தது. இப்போ பரவாயில்லை’ என சொன்ன பிறகுதான் அவருக்கு நிம்மதி’ என சினேகா தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். 

– பாப்பாங்குளம் பாரதி.