யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், தீபா, வேல.ராமமூர்த்தி, மாரிமுத்து, சென்ட்ராயன், மறைந்த மனோபாலா, கணேஷ்கர், படவா கோபி நடிப்பில் கதிர்வேலு என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம்.
ராக் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமணா பாலாஜி, பத்மாவதி தயாரித்து இருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் மறைந்து கலைஞர் மீண்டும் முதல்வரான சமயத்தில் கோவை ஆனைமலை பகுதியில் நடக்கும் கதை.
கி.பி. ஆறாம் நூற்றாண்டு காலத்தில் ‘முகலாய ஆட்சிக்கு’ எதிராகப் போராடிய ‘மராட்டிய சிவாஜி’ படையில், பெரும் வீரர்களாக இருந்து முகலாயர்களால் சிறை பிடிக்கப்பட்டு,
கடுமையாக தண்டிக்கப்பட்டு மராட்டியத்தில் இருந்து துரத்தப்பட்டு தென்னகம் வந்து, நிலையாக ஓரிடத்தில் தங்க முடியாமல் நாடோடிக் கூட்டமாக இன்றும் வாழ்ந்து வரும் குறவர் கூட்டம் ஒன்று, 1990 இல் கோவை ஆனைமலைப் பகுதிக்கு வருகிறது.
வயதில் மூத்த வழிகாட்டி (எம்.எஸ்.பாஸ்கர்), அவரது மனைவி (தீபா), மகன் சிங்காரம் (யோகிபாபு) மற்றும் இரண்டு மகள்கள் மற்றும் அந்தக் கூட்டத்தில் உள்ள முக்கிய அங்கத்தினர்கள் (மனோபாலா, கணேஷ்கர்) ஆகியோர் அடங்கிய அந்தக் கூட்டத்தை,
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வின் (மறைந்த மாரிமுத்து) தம்பி (சென்ட்ராயன்) உள்ளிட்ட ஓர் அடாவடிக் கூட்டம் சாதியின் பெயரால் அவர்கள் ஊரில் தங்கக் கூடாது என்று அடித்து விரட்டுகிறது.
ஊரின் பெரிய மனிதரும் மனிதாபிமானியுமான ஒருவரிடம் (வேல ராமமூர்த்தி) அந்தக் குறவர் மக்கள் உதவி கேட்க, அவர் ஊர்க் களத்து மேட்டில் தங்கிக் கொள்ளச் சொல்கிறார்.
எனினும் தொடர்ந்து அவர்களிடம் கலாட்டா செய்கின்றனர் எம்.எல்.ஏ-வின் தம்பியும் அவரது ஆட்களும்.
ரேஷன் கடையில் கூட அந்த மக்களுக்கு அரிசி கிடைக்காது. காரணம், அதற்கு ரேஷன் கார்டு வேண்டும். ரேஷன் கார்டு வாங்க இருப்பிட சான்றிதழ் வேண்டும். நாடோடிக் கூட்டமான அவர்களுக்கு நிரந்தர இருப்பிடம் இல்லாத காரணத்தால் சான்றிதழ் பெற வழியில்லை.
இந்தப் போராட்டச் சூழலிலும் கிண்டல், கேலி, அன்பு பாசம் என்று அவர்கள் வாழ்க்கை போகிறது.
வறுமைச் சூழலிலும் அந்தக் கூட்டத்தின் மூத்தவருக்கு லாட்டரிச் சீட்டு வாங்கும் பழக்கம் உள்ளது. (இந்தக் கதையை ஏன் 1990 இல் சொல்கிறார்கள் என்று இப்போது புரிந்து இருக்குமே)
எம்.எம்.ஏ தம்பி, மூத்தவரின் மகளிடம் தவறாக நடக்க முயல, எல்லோரும் சேர்ந்து அவனை அடித்து விடுகின்றனர்.
வஞ்சம் வைக்கும் அவன், பஸ்ஸில் அமர்ந்தபடி, மூத்தவரின் மகள்களிடம் பொருள் வாங்கிக் கொண்டு பணம் தராமல் ஏமாற்ற, அந்த களேபரத்தில் மூத்தவருக்கு காலில் அடிபட்டு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல்.

குடிமக்களுக்கான அடையாள அட்டை இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனை கை விரிக்க, தனியார் மருத்துவமனையில் பெரும்தொகையாக கேட்கிறார்கள்.
‘என் ஆசைக்கு இணங்கினால் அந்தப் பணத்தை நான் தருகிறேன்’ என்று அந்தப் பெண்ணிடம் எம்எல்ஏ தம்பி சொல்ல, ‘அப்பாவுக்காக அதை செய்தால் என்ன?’ என்று பெண் யோசிக்க, மனம் உடைந்த மூத்தவர், ‘நம் மகளுக்கு அந்த நிலை வரக் கூடாது’ என்று தற்கொலை செய்து கொள்கிறார்.
கூட்டமே கலங்கிப் போகிறது. இந்நிலையில் மூத்தவர் வாங்கி இருந்த லாட்டரிச் சீட்டுக்கு ஒன்றரை கோடி பரிசு விழுந்து இருப்பதாக நேர்மையான லாட்டரி ஏஜென்ட் (இளவரசு) வந்து விஷயத்தை சொல்ல,
சிங்காரம் கணக்கில் அந்த பணத்தைப் பெற வங்கிக் கணக்கு வேண்டிய சூழல். ஆனால், அவர்களால்தான் வங்கி கணக்கு ஆரம்பிக்க முடியாதே.
இந்த நிலையில் ஊர்ப் பெரிய மனிதர், தனது அஞ்சு சென்ட் நிலத்தை சிங்காரத்துக்கு எழுதி வைத்து அதை இருப்பிடமாகக் காட்டி வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வைக்கிறார். பணம் அக்கவுண்டில் விழுகிறது.
தங்கள் கூட்டத்துக்காக தனி வீடுகள் மற்றும் ஊருக்கு பொதுவாக பள்ளிக்கு கூடம், மருத்துவமனை என்று கட்டுகிறார்கள்.
இவ்வளவு செய்தும் ஆண்ட பரம்பரைகளின் அவமானம் தொடர, அதிகாரம் வந்தால்தான் மரியாதை வரும் என்று சிங்காரத்தை சட்டமன்றத் தேர்தலில் நிற்க வைக்கிறார் பெரிய மனிதர்.
நடந்தது என்ன என்பதே சிங்காரம்.
சுதந்திரம் வாங்கி இத்தனை வருடங்கள் ஆன பிறகும் அடிப்படை உரிமைகளைக் கூட பெற முடியாத கடின சூழல், அதையும் மீறி சாதியத் தீண்டாமையால் அல்லல்கள், கெடுதல்கள், ஆபத்துகள் என்று வாழும் ஒரு சமூகத்தின் நிலை பற்றி பேசும் படம்.
கூட்டத்தின் மூத்தவராக குறவர் பாஷை பேசி அற்புதமாக நடித்திருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். அந்த கெட்டப் வயசான கருப்பசாமி மாதிரி இருக்கிறது. அருமை.
அவருக்கு ஈடு கொடுக்கிறார் மனைவியாக நடித்திருக்கும் தீபா.
ஆனால், படத்தின் ஹீரோவான யோகிபாபு இந்த கேரக்டரிலும் சென்னைத் தமிழ் தான் பேசுகிறார். கொடுமை. எனினும் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். சோக நடிப்பில் கவனிக்க வைக்கிறார்.
இளவரசு ஒரு காட்சியில் யோகிபாபுவை ஒளிவிளக்கு என்று அழைப்பது ரகளை (எம்.ஜி.ஆர். நடித்த ‘ஒளிவிளக்கு’ படத்தில் நாங்க புதுசா காட்டிக்கிட்ட ஜோடி பாடல்)
சாம் சி எஸ் பாடல் இசையைவிட பின்னணி இசையில் ஸ்கொர் செய்கிறார்.
குருராஜின் கலை இயக்கம் பிரமாதம்.

பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவும் லாரன்ஸ் கிஷோரின் ஒளிப்பதிவும் பெரிதாக சோபிக்கவில்லை.
பொருள் வாங்கிக் கொண்டு பணம் தராமல் போகும் காட்சி, மூத்தவர் மரணம், விருந்துப் பந்தலில் அவமானப்படுத்தப்படும் சிறுமிகள்… இப்படி ஒரு சில காட்சிகள் கனம்.
அப்பா கொடுத்த உடம்புதானே. அப்பாவுக்காக என்ன வேண்ணாலும் செய்யலாம் என்று அந்தப் பெண் சொல்லுமிடம் கலங்க வைக்கிறது. அருமை.
இவை தவிர எல்லாமே டாகுமெண்டரி போல இருக்கிறது. அந்த டாக்குமென்டரியிலும் ஏகப்பட்ட தவறுகள், அலட்சியங்கள்.
ஆறாம் நூற்றாண்டு முகலாய ஆட்சி என்று மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் என்றால் கூட பரவாயில்லை: மொட்டைத் தலைக்கும் மோட்டுவளைக்கும் முடிச்சு போடுகிறார்கள்.
தற்போது பாகிஸ்தானில் இருக்கும் சிந்து பகுதிக்கு இஸ்லாமியர்கள் நுழைந்தது எட்டாம் நூற்றாண்டில்தான். கிபி 712 இல் முகமது பின் காசிம் சிந்து பகுதியைக் கைப்பற்றுகிறான்.
முதல் இஸ்லாமிய பேரரசு அமைந்தது கிபி 1206 ஆம் ஆண்டுதான் குத்புதீன் ஐபக் என்பவர் அந்த டெல்லி சுல்தானியத்தை துவங்கி வைக்கிறார்.
அதற்கு மூன்று நூற்றாண்டுகள் கழித்து அதாவது கிபி 1526 ஆம் ஆண்டுதான் முகலாயர் ஆட்சி அமைகிறது. ஆறாம் நூற்றாண்டுக்கும் முகலாயருக்கும் என்ன சம்மந்தம்?
கேட்பவர், பார்க்கிறவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று அலட்சிய ஆணவத்தோடு வரலாறு என்று எதையாவது உளறும் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தவிர இவர்கள்தான் குறவர்கள் என்று ஒட்டுமொத்தமாக பிரதிநிதித்துவப்படுத்துவதும் தவறு.
குறிஞ்சி நிலக் குறவர்கள் தமிழ் மண்ணின் மைந்தர்கள். பாசி மணி, ஊசி மணி விற்பது எல்லாம் அவர்கள் காலகாலமாக மேற்கொண்டு, பின்னர் இங்கு வந்த எல்லோரும் பின்பற்றிய விஷயம்.
இன்று குறிஞ்சி நிலக் குறவர்களுக்கு எந்த அடையாளமும் இல்லை. எனவே எல்லா குறவர்களும் வெளியே இருந்து வந்தவர்கள் என்று நிறுவுவதும் அரைவேக்காட்டுத்தனம்.

ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயம் தங்களின் அடையாளம் பெற எப்படிப் போராடியது அல்லது போராட வேண்டும் என்று சொல்வதுதான் இது போன்ற படங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.
அதை விட்டு லாட்டரி சீட்டில் ஒன்றரை கோடி பணம் விழுந்தது. அதை வைத்து அவர்கள் பள்ளி, மருத்துவமனை கட்டிக் கொண்டார்கள் என்று கதை சொல்வது அபத்தம்.
அரசிடம் உதவி எதிர்பாராதீர்கள்; லாட்டரி சீட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளுங்கள் என்கிற தொனியே அதில் வெளிப்படுகிறது.
எல்லாம் வந்தும் சாதி தடுக்கிறது என்பதுதான் கதை என்றால் அதையும் ஒழுங்காக சொல்லவில்லை அதற்கு ஏற்ற கிளைமாக்ஸ் இல்லை.
லாட்டரி சீட்டு கதையாவது உண்மையாக இருந்ததா என்றால் அதிலும் சிக்கல். சீட்டு வாங்கியது அப்பா. அவர் இறந்து விட்டார். மகனுக்கு பெரிய மனிதர் நிலம் எழுதி கொடுத்து இருப்பிட சான்றிதழ் வாங்கித் தந்தால் போதுமா?
இதை வைத்து சிங்காரத்தின் அப்பாதான் மூத்தவர் என்று எப்படி நிறுவ முடியும்?
அப்பாவுக்கு இருப்பிடச் சான்றிதழ், அடையாள அட்டை இல்லாமல் எப்படி அவரது வாரிசு இன்னார் என்று வாரிசு சான்றிதழ் வாங்க முடியும்?
சரி, காசு கொடுத்தால் எல்லாம் வாங்கலாம் என்றால் அப்போ ஊர்ப் பெரிய மனிதர் நிலத்தை எழுதி வைக்கத் தேவையே இல்லை.
நேரடியாக காசு கொடுத்து வாரிசு சான்றிதழ் வாங்கி விடலாமே / உண்மையில் சிங்காரம் லாட்டரிச் சீட்டு வாங்கியவரின் மகன் என்பதால் அதில் பிரச்சனையும் இல்லையே.
ஒரு சமூகப் பிரச்சனைக் கதையை எடுப்பது முக்கியம் அல்ல. அதை சரியாகச் சொல்ல வேண்டும்.
பொதுவாக ஒரு விஷயம் – ஏதோ ஒரு கதை, கடைசியாக அந்த சமுதாயம் அல்லது பிரச்சனையில் இருந்து நிஜ வாழ்வில் ஜெயித்தவர்கள் சிலரின் பெட்டிகளின் கிளிப்பிங்ஸ். இதனால் எல்லாம் ஒரு படம் மக்களின் ஆதரவைப் பெற்று விடாது.
சிங்காரம்… அபத்தங்களின் ரீங்காரம்!
— சு. செந்தில்குமரன்
