Take a fresh look at your lifestyle.

மரணப்படுக்கையிலும் பாடிக்கொடுத்த கண்டசாலா!

பழம்பெரும் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளருமான கண்டசாலாவின் நினைவு நாள் இன்று (பிப்ரவரி 11, 1974)

எல்லாப் பிரச்னைகளுக்‍கும் சூழல் ஒரு முக்‍கிய காரணியாக விளங்குகிறது. கோபம், வீரம், காதல், இன்பம், துன்பம் என ஒவ்வொரு சூழலிலும் ஒரு பாட்டு நம் கைபிடித்து நடக்‍கிறது.

பாட்டில்லாமல் இங்கு எதுவும் இல்லை. பாடாதப் பொருள் இந்த உலகில் ஏதும் இல்லை.

பாட்டு, காலத்தை மாற்றும்… காயங்கள் ஆற்றும்… கண்ணீரை தொட்டு, துடைத்து, தேற்றும்… பாட்டின் வல்லமையை ரசிகர்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான், இங்கு பாட்டில்லாமல் ஏதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடல்கள் பலவகை என்றாலும், திரையிசைப் பாடல்களில் மனம் லயிப்பது ஒரு இனிமையான அனுபவம்.

திரைப்பாடல் என்பது ஒரு கூட்டு முயற்சி என்றாலும், முதலில் நம்மை, நம் ரசனையைத் தொடுவது, பின்னணிப் பாடகர்கள்தான்.

அந்தப் பின்னணிப் பாடகர்களின் எத்தனையோ குரல்கள் நம்மை தொட்டிருக்கின்றன… நம் கண்ணீரை துடைத்திருக்கின்றன… நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்தி இருக்கின்றன.

திரை இசை காந்தக் குரல், கம்பீரக் குரல், காந்தர்வக் குரல் என, எத்தனையோ குரல்களை பதிவு செய்து வைத்திருக்கிறது.

இந்த பாடகரின் குரலோ வித்தியாசமானது. தெலுங்கு தான் தாய்மொழி என்றாலும், தமிழிலிலும் தன் தடத்தைப் பதித்தவர்.

அவர்தான் கண்டசாலா வெங்கடேஸ்வரராவ்… கண்டசாலா என்ற பெயரில் புகழ்பெற்ற இவர், மிகச்சிறந்த பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், கம்பீரமான குரல் கொண்டவர் என பழம்பெரும் திரைப்பட நடிகரும், சிறந்த ரசிகருமான ரங்காராவால் புகழப்பட்டவர் கண்டசாலா.

தெலுங்கு பிராமண சமூகத்தில் பிறந்த கண்டசாலா, கிருஷ்ணா மாவட்டம், குடுவாடா தாலுக்காவில் உள்ள சவுதப்பள்ளி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர்.

சிறு வயதில் தந்தையிடம் பயின்ற இசைதான், திரையிசையில் அவர் விருட்சமாக வளர உதவிய விதை.

சிறு வயதிலேயே தந்தை இறந்து விட, தாய்மாமன் அறவணைப்பில் வளரத் தொடங்கிய கண்டசாலாவுக்கு இசையின் மீது ஈர்ப்பு இருந்தது. இதையறிந்த அவரது தாய்மாமன், இசையில் அவருக்கு பயிற்சி அளித்தார்.

இளமைப் பருவத்தில் இரண்டு விஷயங்கள் மனம் லயித்துப் போகும். ஒன்று, இளம் பெண்ணின் வசீகரத் தோற்றம். மற்றொன்று, வீரம் செறிந்த போராட்டத்தின் பின்னணியின் தலைமை.

அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில், விடுதலைகோரி எழுந்த தலைவர்களின் வீர உரைகளைக் கேட்டு, நாட்டுப் பற்றை வளர்த்துக் கொண்ட கண்டசாலா, 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று, 18 மாதங்கள் பெல்லாரியில் உள்ள அலிப்பூர் சிறையில் இருந்தார்.

சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், நண்பர்களின் ஆலோசனைக்கு ஏற்ப, திரைப்படங்களில் பாட வாய்ப்புத் தேடினார்.

அகில இந்திய வானொலி அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. கண்டசாலாவின் குரலைக் கேட்ட தெலுங்கு திரையுலகம், அந்தக் குரலை சுவீகரித்துக் கொண்டது.

என்.டி.ராமாராவின் முதல் படமான ‘மானதேசம்’ படத்திற்கு கண்டசாலாதான் இசையமைப்பாளர்.

தொடர்ந்து, தெலுங்குப் படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு கண்டசாலாவின் குரல் வெற்றிப்படிக்கட்டுகளாய் அமைந்தது.

தமிழிலும் ‘பாதாள பைரவி’, ‘மாயாபாஜார்’, ‘லவகுசா’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையத்து, பாடல்களைப் பாடினார்.

‘தேவதாஸ்’ படத்தில் கண்டசாலா பாடிய, ‘உலகே மாயம், வாழ்வே மாயம்’ பாடல் உள்ளிட்ட எந்தப் பாடலையும் மறக்கவே முடியாது.

‘அன்புச் சகோதரர்கள்’ படத்தில் கண்டசாலா பாடிய ‘முத்துக்கு முத்தாக… சொத்துக்கு சொத்தாக…’ பாடல் காலம் கடந்தும், இசைக்காவியமாய், காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், துளு மற்றும் இந்தி உள்ளிட்ட பல பாடல்க‌ளை கண்டசாலா பாடியுள்ளார்.

பத்மஸ்ரீ விருது உட்பட சிறந்த பின்னணிப் பாடகருக்கான ஆந்திர அரசின் விருதை 30 ஆண்டுகளாகப் பெற்றுள்ளார்.

நோய்வாய்ப்பட்ட அவர், 1974-ம் ஆண்டு, சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

அதற்கு முந்தைய நாள் மருத்துவமனை படுக்கையில் இருந்தபடியே ஆவணப்படம் ஒன்றுக்காக அவர் பாட, ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

மரணப் படுக்கையிலும், தொழிலின் மீது அவருக்கு இருந்த பக்தியை இந்தச் சம்பவம் பறைசாற்றுகிறது.

கண்டசாலாவின் இசை அர்ப்பணிப்பு, காலத்தின் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.

✍️ லாரன்ஸ் விஜயன்