Take a fresh look at your lifestyle.

சிக்மா – இன்னும் சிறப்பாக உருவாக்கியிருக்கலாம்!

தமிழகத்தின் மிக முக்கிய புள்ளியின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் (பட வெளியீட்டையொட்டி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அந்த முக்கிய புள்ளியின் பெயர் கூட சொல்லப்படாததால் நாமும் அதே ‘புரோட்டோகால்’ கடைபிடிப்போம்.)

சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத், ராஜு சுந்தரம், சிவ பண்டிட், அன்புதாசன் நடிப்பில், லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் படம்.

கோட்லபாடி வீரைய்ய ரெட்டி (சம்பத்) என்ற போதைப் பொருள் கடத்தல் தாதா, ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை ஒரு பெரிய லாக்கரில் வைத்து ஒரு அயல்நாட்டு தீவில் பதுக்கி இருப்பதோடு அதை திறக்க ஒரு பழங்கால பாணி சாவி ஒன்றும் வைத்து இருக்கிறார்.

அவரிடம் பிசினஸ் பேச வரும் எழில் என்ற ஒருவன் (கிரண் கொண்டா) சென்னையில் ரெட்டியின் போதை மாத்திரையை பெருமளவில் கொண்டு வந்து வைத்து வியாபாரம் செய்ய ஒரு திட்டம் சொல்கிறான்.

அதன்படி சென்னையில் தியேட்டர் காம்ப்ளக்ஸ் வைத்துக் கொண்டு, அண்டர் கிரௌண்டில் சூதாட்ட விடுதி நடத்தி, அதையும் வருகிற எல்லோருமே தோற்கும்படி செட் செய்து நடத்தி வரும் வின்சன்ட் (சிவ பண்டிட்) என்பவனின் கிளப்பை, போதைப் பொருட்களைப் பதுக்கி வைக்கவும், அந்த சூதாட்ட விடுதியின் மூலம் வியாபாரம் செய்யவும் முடியும் என்கிறான் எழில்.

எழில் சொல்வதை ஏற்கும் வீரைய்ய ரெட்டி, லாக்கரின் சாவியை எழிலிடம் கொடுத்து பிஸினஸுக்காக வேண்டிய பணம் எடுத்துக்கொள் என்கிறான்.

அதன்படியே எழிலும் வின்சென்ட்டும் செயல்பட, ஒரு நிலையில் இருவருக்கும் சண்டை வர, வின்சென்டின் பாதுகாவலன் (யோக் ஜேபி) ஏழிலைக் கொன்று ஒரு இடத்தில் புதைக்கிறான்.

புதைத்த இடத்துக்கு பக்கத்தில் ஒரு பழைய கட்டிடம். அதற்கு ஒரு வரலாறு உண்டு.

சிறுவயது முதலே படிப்பதில் ஆர்வம் கொண்ட ஒரு பெண் (ஷீலா ராஜேந்திரன்) தனது வீடான அந்த இடத்தையே ஒரு லைப்ரரி ஆக்கி பராமரிக்கிறார்.

ஆனால், அவரது கணவன் சூதாடும் பழக்கம் காரணமாக நிறைய கடன் வாங்க, கடன்காரர்கள் அந்த லைப்ரரி மேல் கடன் கொடுத்து இருக்கிறார்கள்.

கணவன் இறந்த நிலையில், அவரும் இறந்துவிட அவர்களின் மகனான குரு (சந்தீப் கிஷன்) அம்மாவின் ஆன்மா இருக்கும் அந்த இடத்தை இழக்கக் கூடாது என்று வாங்கிய கடனுக்கு வட்டி கட்டிக் கொண்டு இருக்கிறான்.

அவனுக்கும் சாம் என்ற ரேடியோ ஜாக்கிக்கும் (ஃபரியா அப்துல்லா) சிநேகம்.

குரு வளர்க்கும் நாய் ஒன்று, எழிலின் பிணம் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து ஒரு சாவியை கொண்டு வந்து குருவின் லைப்ரரியில் போடுகிறது.

அந்த சாவிதான், கோட்லபாடி வீரைய்ய ரெட்டி எழிலுக்கு கொடுத்த – அந்த ஆயிரம் கோடி பணம் உள்ள லாக்கரில் சாவி. ஆனால் அது அப்போது குருவுக்கு தெரியாது.

ஒரு நிலையில் கடன்காரர்கள் நெருக்க, சாமுக்கு தர வேண்டிய காசையும் எடுத்துக் கொண்டு வின்சென்ட்டின் சூதாட்ட கிளப்புக்கு சூதாடப் போகிறான் குரு.

அங்கே விளையாட வரும் வரும் யாரும் ஜெயிக்க முடியாதபடி வின்சென்ட் செட் செய்து வைத்திருப்பதை குரு கண்டுபிடிக்கிறான்.

இருவருக்கும் சண்டை வருகிறது. எழிலையும் சாவியையும் தேடி வரும் கோட்லபாடி வீரைய்ய ரெட்டிக்கு உண்மைகள் தெரிய, சாவி விஷயம் குருவுக்கும் தெரிய, மேலே சொன்ன பலரும் அந்த ஆயிரம் கோடியை அடிக்க முயல நடந்தது என்ன என்பதுதான் இந்த சிக்மா.

சிக்மா என்ற சொல்லுக்கு மொழியியல் மற்றும் கணிதவியல் மற்றும் இணைய உலக ரீதியாக பல பொருட்கள் உண்டு. இங்கே சிக்மா என்பது தனித்தன்மையான, வெற்றிகரமான, சிறப்பான, நிதானமான, அஞ்சாத மனிதனைக் குறிக்கும் சொல்.

கட்டுக்கட்டாய் பணம், போதைப் பொருள், வன்முறை என்ற ரீதியில் போகுகிறது கதை.

படம் துவங்கும்போது எடிட்டிங்கில் எபெக்ட்டில் ஒரு வித்தியாசம் காட்டுகிறார் இயக்குநர் ஜேசன் சஞ்சய். அப்புறம் காணோம்.

லைப்ரரி அம்மா, பாட்காஸ்ட் நடத்தும் நாயகன் என்று அந்த பகுதி பிரெஷ்.

முதல் பாதியில் வசனங்கள் பல இடங்களில் ரகளையாக இருக்கிறது.

படத்தில் வரும் பெண்கள் எல்லாம் விதவிதமான – கேரக்டருக்குப் பொருத்தமான அழகிகளாக இருக்கிறார்கள்.

வில்லன்கள் பலரும் மெச்சூர்டு ஆண்களாக இருக்கிறார்கள். வில்லனைக் காதலிக்கும் பெண்ணாக இளம் அழகிகள் இருக்கிறார்கள்.

கமர்ஷியல் மேக்கிங் கை வருகிறது ஜேசன் சஞ்சய்க்கு.

படத்தில் ‘புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை; வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை’ பாடலைப் பயன்படுத்துகிறார்.

ஹீரோவுக்கு நல்ல அம்மா, சூதாடி அப்பா என்று கேரக்டர் செட் செய்து இருக்கிறார். சென்னையை போதையின் பிடியில் வீழ்த்த முயலும் சக்திகளை கதையாக வைத்து இருக்கிறார்.

சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத், யோகி ஜேபி, வில்லியாக வரும் மகாலட்சுமி நடிப்பில் அசத்துகிறார்கள்

ராஜு சுந்தரம் காமெடி நடிப்பு என்ற பெயரில் கடுப்பேற்றுகிறார்.

கிருஷ்ணன் வசந்தின் ஒளிபரப்பு, தமனின் இசை பழுதும் இல்லை. பலமும் இல்லை.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வந்தாலும் படத்தில் தெலுங்கு தன்மையே அதிகம் இருக்கிறது.

கதைச் சுருக்கத்தில் வரும் முதல் பெயரிலேயே அது புரிந்திருக்கும். தமிழில் படங்களைத் தயாரித்து கோட்டபாடி ஜே ராஜேஷ் மேல் இவர்களுக்கு எதுவும் கோபமா என்று தெரியவில்லை.

கோட்டபாடி ‘கோட்லபாடி’ ஆகியிருக்கிறது.

கதை, திரைக்கதையில் பெரிதாக புதுமையோ, ஈர்ப்போ இல்லை. சுவாரஸ்யமாக எதுவும் அமையவில்லை.

இரண்டரை மணி நேரப் படம். ஆனால், வெகு நேரம் ஓடுவது போல உணர்வு. தெரிந்த முடிவுக்கு ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இரண்டாம் பாதியில் படம் முடிந்து விட்டது என்ற உணர்வு பலமுறை ஏற்பட்ட பிறகும் படம் ஓடிக் கொண்டே இருக்கிறது.

இயக்குநர் சஞ்சயின் தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர் பெரிய இயக்குநர். அவரது பாட்டி ஷோபா சந்திரசேகர், அவரும் ஓர் இயக்குநர்.

அவரது உறவினர் சுரேந்தர் பாடகர். விக்ராந்த் நடிகர். தூரத்து சொந்தமாக தயாரிப்பாளர்கள் உண்டு.

தவிர ஜேசன் சஞ்சய் தமிழகத்தின் அந்த முக்கிய புள்ளியின் மகன். அமெரிக்காவில் டைரக்ஷன் படித்தவர். படத்தின் தயாரிப்பு லைக்கா புரடக்ஷன்.

அப்படி இருக்க, வித்தியாசமான, புதுமையான கதை, பிரெஷ் ஆன திரைக்கதை, பரபரப்பான கன்டென்ட் அல்லது கலைப் பூரவமாக ஓர் அற்புதமான படம் என்று ஜேசன் அடித்து தூள் கிளப்பி இருக்க வேண்டாமா?

தமிழ்நாடே கொண்டாடுகிற அல்லது பரபரப்பாக பேசுகிற ஒரு படத்தை செய்திருக்க வேண்டாமா?

அதை விட்டுவிட்டு, ஊரில் இருந்து கிளம்பி வந்து, எந்த பின்புலம் இல்லாமல் சினிமாவில் நுழைந்து, தோற்றால் கேரியரே போய் விடும் என்று பயப்படுகிற ஓர் புதிய இயக்குநர்,

safe play என்று எண்ணி எடுக்கும் படத்தைவிட ஒரு சாதாரண படத்தை ஜேசன் சஞ்சய் எடுக்க வேண்டுமா என்ற கேள்வி வரத்தான் செய்கிறது.

மொத்தத்தில் சிக்மா… போதைப் பொருள் ஊக்குவிப்பு, முறையற்ற பணத்தின் மீதான ஆசை போன்ற ஸ்டிக்மா ஏதும் இல்லாமலாவது இருந்திருக்கலாம்.

— சு. செந்தில் குமரன்