நூல் அறிமுகம்: உலக சினிமா!
சிறுவயதில் திரைப்பட விழாக்களின் செய்திகளைப் படிக்கும்போதும் தூர்தர்ஷனில் மதியங்களில், பின்னிரவுகளில் துணையெழுத்துகளுடன் ஒளிபரப்பாகும் வேற்று மொழிப் படங்களைப் பார்க்கிறபோதும் இந்தக் கேள்வி எனக்குள் மேலும் வலுக்கிறது. ‘எது நல்ல திரைப்படம்?’
திரையரங்கில் நாம் கை தட்டி மகிழ்கிற தமிழ்த் திரைப்படங்களை, திரைப்பட விழாக்கள் ஏன் பொருட்படுத்துவதே இல்லை? நாம் உயர்வாக மதிக்கிற தமிழ்ப்பட இயக்குநர்களின் பெயர்கள் ஒன்றுகூட உலக இயக்குநர்களின் பட்டியலில் இல்லையே… ஏன்?
தீபாவளிக்கும் பொங்கலுக்கும் கூட்டத்தில் முண்டியடித்து, திரையரங்கில் நாம் பார்த்த படங்கள் எல்லாம் எந்த வகையில் சேரும்? இவையெல்லாம் நல்ல படங்கள் இல்லையெனில் எது நல்ல படம்? அது எப்படி இருக்கும்?
கல்லூரி நாட்களில் இருந்த அந்தத் தேடலின் பயனாக உலகத் திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது.
அதைப் பார்த்ததும் ஒரு ரசிகனாக நம் படங்கள் ஏற்படுத்தியிருந்த அபிப்பிராயங்கள் அனைத்தும் உடைந்து சிதறின.
அந்தப் படங்களில் பல்டியடிக்கிற ஹீரோ இல்லை; உரசிக் காதலிக்கிற ஹீரோயின் இல்லை; அவர்களைத் துரத்துகிற வில்லன் இல்லை; காமெடியன் இல்லை; குரூப் டான்ஸ் இல்லை; சண்டை இல்லை; சென்டிமென்ட் இல்லை; பாட்டும் இல்லை.
மாறாக, ஒவ்வொரு படத்திலும் வாழ்க்கையின் உயிர்ப்பு இருந்தது. அந்த நாட்டின் கலாச்சாரம் இருந்தது. ஒரு படத்தைப் பார்த்து முடிக்கையில் மனதுக்குள் ஏற்படும் அந்த உணர்வே ஒரு புது அனுபவமாக இருந்தது.
அந்தப் படங்களைப் பார்த்தப் பிறகு, நம் நிலையில் ஏதோ உயர்கிறது. ரசனை மாறுகிறது. ரசனை மாறினால் வாழ்க்கையில் எல்லாமே மாறுகிறது.
அந்த வகையில் சாதாரணப் பார்வையாளனாக எனக்குள் ரசனை மாற்றத்தை ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருந்த திரைப்படச் சங்கங்கள், சிறுபத்திரிகைகள், வெளிநாட்டுத் திரைப்பட நூல்களை மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர்கள்,
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தமிழில் மாற்று ரசனைக்காகத் தொடர்ந்து இயங்கிவரும் நண்பர்கள் என்று அனைவரையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் எனக்குச் செய்ததை, இந்நூல் வழியாகத் திருப்பிச்செய்ய முயற்சிக்கிறேன்.
உண்மையான திரைப்பட ஆர்வத்தோடு எங்கோ கிராமத்தில் இருக்கும் ஒரு பள்ளி மாணவனுக்குள் இந்தப் புத்தகம் சிறு துளிர்ப்புகளை ஏற்படுத்துமெனில், அதுவே போதுமானது.
பொதுவாக உலகப் படங்கள் என்றதும் ‘புரியுமா? போரடிக்குமா?’ என்று கேள்வி கேட்பவர்கள் இருக்கிறார்கள். அதற்கான எளிமையான பதில் ‘அவற்றைப் பாருங்கள்’ என்பதுதான்.
இதிலிருக்கும் படங்கள் முதல் முறை பார்க்கும்போதே நமக்குப் பிடிக்கும். இரண்டாவது முறை பார்த்தால் நம்மை வசீகரிக்கும். மூன்றாவது முறை பார்த்தால் அது ஓர் அற்புதமான அனுபவமாக மாறும்.
விகடனில் இந்தத் தொடர் வெளிவந்தபோது பல நண்பர்கள், ‘இதுபோன்ற படங்களைத் தமிழில் நாம் ஏன் எடுக்கவில்லை?’ என்று தொடர்ந்து கேட்கிறார்கள்.
நிச்சயமாக எடுக்க முடியும். அடுத்த பத்து வருடங்களில் எங்கோ வேறொரு தேசத்திலிருந்து ஒருவர் உலக சினிமாவைப் பற்றி எழுதுகையில், அதில் பத்து தமிழ்ப் படங்களாவது இடம்பெற வேண்டும். அதற்கான தீவிரமான தேடலுடன் களம் இறங்கினால், நம்மால் எடுக்க முடியும்.
ஒரு திரைப்படத்தை எப்படிப் பார்க்கவேண்டும்?
இரண்டு வருடங்களுக்கு முன்பு புதுதில்லியில் நடந்த திரைப்பட ரசனைக்கான வகுப்பில் கலந்துகொண்டபோது அங்கு வந்திருந்த ஆசிரியர் இந்தக் கேள்வியை எழுப்பினார். கேள்வி என்னை வசீகரித்தது.
“ஒரு திரைப்படத்தை எப்படிப் பார்க்கவேண்டும்? இப்போது நாம் எப்படிப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்?
நாம் ஒரு படத்தில் நமக்குப் பிடித்த நடிகர்களைப் பார்க்கிறோம். கதையைப் பார்க்கிறோம். கூடுதலாக ஒளிப்பதிவையும், இசையையும், இயக்குநரையும் பாராட்டுகிறோம்.
அத்துடன் அந்தப் படம் முடிவடைந்துவிடுகிறது. நண்பர்களுடன் அரட்டையடிப்பதுபோல நம் வாழ்க்கையில் நாம் செய்கிற பல பொழுதுபோக்குகளில் திரைப்படம் பார்ப்பதும் ஒன்று.
அதற்குமேல் அதில் என்ன இருக்கிறது? இருக்கிறது… அதற்கு மேலும் ஒரு திரைப்படத்தில் விஷயங்கள் இருக்கவேண்டும். படம் பார்ப்பது வெறும் பொழுதுபோக்கு என்ற நிலையைக் கடந்து ஓர் அனுபவமாக அது மாறவேண்டும்.
அத்தகைய படங்களே நல்ல படங்கள். அவற்றைப் பார்க்கப் பழகுவதே ஒரு ஒழுக்கம்” என்று சொன்ன ஆசிரியர் சில படங்களிலிருந்து சில காட்சிகளைத் திரையிட்டு, திரைப்பட மொழியை உலகின் இயக்குநர்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று விளக்கினார்.
சந்தேகம் மேலும் வலுவடைந்தது.
‘திரைப்பட மொழி என்றால் என்ன? அதைக் கற்றுக்கொண்டால்தான் படம் பார்க்க முடியுமா?’
‘இல்லை. திரைப்பட மொழி மிக எளிமையானது. உலகத்திலிருக்கும் நல்ல படங்களைப் பார்த்தாலே போதுமானது. நல்லது எது என்று நமக்குத் தெரியத் துவங்கினால் பொழுதுபோக்கு என்ற பெயரில் வரும் மோசமான படங்களை நாமே ஒதுக்கிவிடலாம்.
அவ்வாறு தரம் பிரித்தறியும் நுட்பத்தைப் பெற நம் ரசனை மாறவேண்டும். திரைப்படம் கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் பொழுதுபோக்கு என்ற பெயரில் கூத்தடிப்பதும், அதை நாம் நம் குழந்தைகளுடன் பார்த்துக்கொண்டிருப்பதும் அபத்தமானது.
மேலைநாடுகளில் எது நல்ல படம் என்பதைக் குழந்தைகளுக்கு மாணவ நிலையிலேயே கற்றுத்தருகிறார்கள். ஒப்பிட்டுப் பார்த்தால்தான் நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பது புரியும்!’
ஒரு நல்ல திரைப்படம் கதையை மட்டும் சொல்வதில்லை. அதில் வாழ்க்கைமுறை இருக்கிறது. கலாச்சாரம் இருக்கிறது. மனிதநேயம் இருக்கிறது.
ஆழமாகப் பார்ப்பவர்களுக்கு, பல நுட்பமான விஷயங்கள் அதனுள் இருக்கின்றன. எந்த நல்ல படமும் தன்னை நம்பிப் பார்க்கிற பார்வையாளனை ஏமாற்றுவதில்லை.
எனினும் உலக சினிமாவை முதலில் அணுகுபவர்களுக்கு அது பிடிக்கவேண்டும் என்பதால் முதல் தொகுதியில் அதிகம் கதைச் சார்ந்த எளிமையான படங்கள் இருக்கின்றன.
கதையைக் கடந்தும் திரைப்படம் இயங்குவதால் கதையை வெவ்வேறு கோணத்தில் அணுகுகிற, ஒரு கதையாக இல்லாமல் வாழ்க்கை அனுபவமாகப் பதிவு செய்கிற படங்கள் இரண்டாவது தொகுதியில் உள்ளன.
‘திரைப்படம் என்பது பிரமாண்டமானது. எளிதில் அணுக முடியாதது’ என்றெல்லாம் நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் பிரமைகளை முதலில் நாம் விடவேண்டும்.
உலகின் பெரிய இயக்குநர்கள் பலர் மிகச் சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள்.
ஒரு நல்ல திரைப்படம் எடுக்க எந்தக் கல்லூரியிலும் படிக்கவேண்டிய அவசியம் இல்லை. வாழ்க்கை அனுபவமே போதுமானது. எனவே, பல துறையிலும் இருக்கிற ஆர்வமுள்ள இளைஞர்கள் வரவேண்டும்.
நம் திரைப்படங்களுக்கென இருக்கிற பழைய விதிகளையும் சமன்பாடுகளையும் உடைத்து, புதிய அலையை இங்கு ஏற்படுத்தவேண்டும். அந்த உறுதி நம்வசம் இருந்தால் உலகத்தரமான படங்களை நம்மால் எடுக்கமுடியும்.
ஒரு நல்ல திரைப்படத்தை நாம் ஏன் பார்க்க வேண்டும்?
திரைப்படம் என்பது, வெறும் பொழுதுபோக்குச் சாதனம் மட்டும் அல்ல; அது நம்மைச் சிரிக்கவைக்கிற, அழவைக்கிற, சிந்திக்கவைக்கிற, உணர்வுகளை மிக நெருக்கமாகப் பரிமாறிக்கொள்கிற வலிமையான தொடர்பு சாதனமாகவும் இருக்கிறது.
ஆனால், நாம் பார்க்கிற திரைப்படங்கள் என்ன விதமான உணர்வுகளுடன் நம்மைத் தொடர்புகொள்கின்றன?
குடும்பத்துடன் ஓர் உணவுவிடுதிக்குச் செல்கிறோம். அங்கு இருக்கும் எல்லா உணவையும் குழந்தைகளுக்கு நாம் அனுமதிப்பதில்லை.
‘அவர்களுக்கு ஏற்றது எது?’ என்பது நமக்கு முதலில் தெரியும் என்பதால், அங்குத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஒரு திரையரங்கத்துக்குச் செல்கிறோம். அங்கு நடப்பது என்ன படம்? என்ன கதை?
திரையில் நடக்கிற வன்முறையையும், வயதுக்கு மீறிய காட்சிகளையும் குழந்தைகளுடன் பார்க்கிறோம்.
திரையரங்கை நாம் தவிர்த்தாலும் தொலைக்காட்சி இருக்கிறது. இணையம் இருக்கிறது. தவிர்க்க முடியாமல், காட்சிகளாக நம்மைச்சுற்றி நிகழும் இந்தச் சாதனங்களில் இருந்து நமக்குத் தேவையானதை, சிறந்ததை நாம் தேர்வு செய்வது எப்படி?
சுற்றுச்சூழல் மாசு அடைவது குறித்து உணரத் துவங்கியிருக்கிற நாம், தினமும் காட்சி ரீதியாக மனசுக்குள் படிந்துகொண்டிருக்கும் மாசு குறித்த விழிப்புணர்வை அடைந்து இருக்கிறோமா?
தவறுதலாக நாம் எடுத்துக்கொள்ளும் மோசமான ஓர் உணவு, அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு நமக்குத் தொந்தரவாக இருக்கலாம்.
ஆனால், வெறும் பொழுதுபோக்குத்தானே என்று நினைத்துத் தொடர்ச்சியாக நாம் பார்த்துக் கொண்டிருக்கும் தவறான திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், மெல்லக் கொல்லும் நஞ்சு (Slow poison) போல முழு வாழ்க்கைக்குமான நம் இயல்பையே மாற்றத் துவங்குகின்றன.
‘இருட்டைப் பற்றி புலம்புவதைவிட ஒரு விளக்கை ஏற்றி வையுங்கள்’ என்றொரு பழமொழி இருக்கிறது. தவறான படங்களைப் பற்றி வருந்துவதைவிட நல்ல படங்களை அறிமுகப்படுத்துவதே சிறந்தது.
அந்த வகையில் உலகமெங்கும் எடுக்கப்பட்ட நல்ல படங்களைத் தேடிப் பார்ப்பதன் மூலம் மோசமான திரைப்படத்தை மட்டுமல்ல, நல்லவை என்ற போர்வையில் இருக்கும் போலிகளையும் நாம் அடையாளம் காணமுடியும்.
அதற்கு ஒரே வழி உலகின் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பதுதான். அதன்மூலம் குடும்பத்திலும், நம் நண்பர்கள் மத்தியிலும் ஒரு மாற்று ரசனையை ஏற்படுத்த முடியும்.
சூழல் மாசுபடுவதைத் தடுக்க, மரம் வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதுபோல, காட்சி ரீதியாக மாசுபடுவதைத் தடுக்க, குறைந்தது இருபது சிறந்த உலகப் படங்களையாவது நாம் பார்த்திருக்க வேண்டும்.
எளிமையான திரைப்பட நூலகத்தை வீட்டில் அமைப்பதன் மூலம், குழந்தைப் பருவத்திலேயே நல்ல திரைப்படங்களை அறிமுகம் செய்துவைக்க வேண்டும்.
ஊருக்கொரு திரைப்பட சங்கத்தை ஏற்படுத்தவேண்டும். திருமணங்களில், விழாக்களில் சிறந்த படங்களின் குறுந்தகடுகளைப் பரிசளிக்க வேண்டும்.
‘உணவுப் பழக்கத்திலிருந்து ஒழுக்க விதிகள் வரை எது சிறந்தது?’ என்று கற்றுத்தருகிறது நமது கலாச்சாரம்.
ஆனால், அந்தக் கலாசாரத்தையே பாதிக்கிற திரைப்படத்தில் எது சிறந்தது என்று நாம் கற்றுக்கொள்ளாமல் இருப்பது எவ்வளவு ஆபத்தானது!
அந்த வகையில் சிறந்த படங்களை அறிமுகப்படுத்தும் வழியாக, ரசனை மாற்றத்தைத் துவக்கிவைக்க இந்த நூல் உதவும் என்று நான் நம்புகிறேன்.
– ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான நூலாசிரியர் செழியன் முன்னுரையிலிருந்து.
*****
உலக சினிமா!
செழியன்
சீர் வாசகர் வட்டம்
₹200/-
தொடர்புக்கு: டிஸ்கவரி புக் பேலஸ் | 9790946650 | 8754506060