மீள்பதிவு:
குறைந்த பட்ஜெட்டில் தயாரான படங்கள் பெருவெற்றியைப் பெறுவதும், பிரமாண்டமாகத் தயாரிக்கப்படும் படங்கள் மண்ணைக் கவ்வுவதும் சினிமா பேசத் தொடங்கிய காலம் தொட்டு நிகழ்ந்து வருகிறது.
தமிழ் சினிமாவுலகில் மீண்டும் இந்நிலை ஏற்பட்டிருப்பது திரைக்கதைகளுக்கான முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களுக்கே எதிர்காலம் உண்டென்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது.
எப்படிப்பட்ட கதையானாலும், காட்சிகளாகக் கோர்க்கப்படும் திரைக்கதையைச் சேர்ந்தே ஒரு திரைப்படம் வெற்றியடையும். அறுபதுகளில் அதனைத் தன் படங்களின் மூலமாகச் செய்து காட்டியவர் ஸ்ரீதர்.
கே.பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா, மணிரத்னம் தொடங்கி இன்றைய இளம் இயக்குனர்கள் வரை, ஒவ்வொருவரது படைப்புகளும் அவற்றின் திரைக்கதையால் மட்டுமே ரசிகர்களைச் சென்றடைந்திருக்கின்றன.
சட்டகத்துக்குள் அடைக்கப்பட்ட திரைக்கதை!
நாயகன் மற்றும் கதைக்களம் அறிமுகம், கதாபாத்திரங்களுக்கு இடையிலான முரண், அதனால் ஏற்படும் பிரச்சினைகள், அதற்குக் காரணமாக விளங்கும் வில்லன், நாயகியின் மீதான நாயகனின் மோகம், எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க முடியாத தவிப்பு, தீர்வைக் காணும் முயற்சி, இதனிடையே ரசிகர்களின் அயர்வைப் போக்கக் கதையுடன் கலக்கும் நகைச்சுவை என்றே அக்காலத்திய படங்கள் அமைந்திருந்தன.
தலைவாழை இலை போட்டு அறுவகை ருசியையும் கொண்ட உணவுகளைப் பரிமாறுவதுபோல, எத்தகைய கதையம்சம் கொண்ட திரைப்படமானாலும் பெரும்பாலும் இந்த டெம்ப்ளேட் அடிப்படையாக அமையும்.
மிக லாவகமாக இத்திரைக்கதை சூத்திரத்தைத் தன் படங்களுக்குள் புகுத்திக் கொண்டவர் எம்ஜிஆர். அதுவே அவரது தொடர் வெற்றிகளுக்கு ஆதாரமானது.
எந்த இயக்குனராக இருந்தாலும், அவர் பாணிக்கு மாற வேண்டியது கட்டாயம். பி.ஆர்.பந்துலு, ஸ்ரீதர், ஏ.பி.நாகராஜன், மாதவன், கே.சங்கர் என்று எந்த ஜாம்பவானும் இதில் விதிவிலக்கு கிடையாது.
கமர்ஷியல் சினிமாவின் முதுகெலும்பு!
1980-களில் எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர், ஏ.ஜகன்னாதன், மணிவண்ணன், பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் போன்ற கமர்ஷியல் இயக்குனர்களும் கூட சரிவிகிதத்தில் எல்லா அம்சங்களும் கலந்த சீரான வேகத்துடன் நகரும் திரைக்கதைகளையே தேர்ந்தெடுத்தனர்.
இதிலிருந்து வேறுபட்டு, இயல்பான வாழ்வியல் அம்சங்களுடன் ரசிக்கக்கூடிய காட்சிகளைக் கோர்த்து திரைக்கதை எழுதியவர் கே.பாக்யராஜ். திரைக்கதைதான் திரைப்படத்தின் முதுகெலும்பு என்று இவரது படங்கள் நிரூபித்தன.
பாண்டியராஜன், ஆர்.பார்த்திபன் உட்பட அவரது சீடர்களும் இதனையே கைகொண்டனர். அவரது படங்கள் வெற்றியடைந்த காலகட்டத்தில் திரைக்கதை ஆசிரியர்கள் என்ற பிரிவு அருகிப்போனது. ஆனாலும், திரைக்கதையை உருவாக்குவதற்கான விவாதமும் அதற்கான குழுவும் தேவை என்ற நிலை உருவானது.
நிற்க. இது எல்லாமே 90-கள்வரை தமிழ் திரைப்பட உலகில் நிலவிய நிலைதான். அதன்பின் மணிரத்னத்தின் நுழைவுக்குப் பின்னர் கமர்ஷியல், ஆர்ட் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லா படங்களிலும் திரைக்கதை சிறந்ததாக அமைய வேண்டிய கட்டாயம் உருவானது.
2000களில் நல்ல திரைக்கதையைக் கொண்டவரே ஒரு படத்தை இயக்க முடியும் என்ற நிலைமையும் உருவானது.
இயல்பைப் பிரதிபலிக்க வேண்டும்!
இயல்பு வாழ்க்கையில் ஒவ்வொருவரும் நாயகர், நாயகிதான். வயதோ, குணநலன்களோ, இதர வேறுபாடுகளோ கொண்டு மட்டும் ஒருவரை முன்னிலைப்படுத்த முடியாது.
ஆனால், திரையில் இதற்கு நேர்மாறான விஷயம்தான் பிரதிபலிக்கப்படும். கடந்த 20 ஆண்டுகளாக இந்த நிலையில் மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது தமிழ் சினிமா.
ஒவ்வொரு பாத்திரத்துக்கும் திரைக்கதையில் முக்கியத்துவம் உண்டென்ற கட்டாயம் தற்போது உருவாகியுள்ளது. இதனை மிகச்சரியாகக் கைக்கொண்ட படங்களே வெற்றியை ஈட்டி வருகின்றன.
2019 ஜனவரி முதல் அக்டோபர் இறுதிவரை வெளியான திரைப்படங்களைச் சீர்தூக்கிப் பார்த்தால் இதனை அறிந்துகொள்ள முடியும்.
விஸ்வாசம் தந்த வெற்றி!
பொங்கல் பண்டிகையையொட்டி பேட்ட, விஸ்வாசம் படங்கள் திரைக்கு வந்தன. தொடக்கத்தில் ‘பேட்ட’ வசூலில் முந்தினாலும், ‘விஸ்வாசம்’ நீண்ட நாட்கள் தியேட்டர்களில் ஓடி பெரிய வசூலைப் பெற்றது.
மனைவியையும் குழந்தையையும் பிரிந்த ஒரு மனிதன், சில ஆண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் அவர்களோடு இணைவதுதான் விஸ்வாசம் படத்தின் கதை.
ஆனால், அதை திரையில் சொன்ன விதத்தில் வித்தியாசத்தைக் காட்டியிருந்தார் இயக்குநர் சிவா. திரைக்கதையில் தொய்வு ஏற்பட்ட இடங்களில் அஜித்தின் இருப்பு படத்தைத் தூக்கி நிறுத்தியது.
இதனால் குடும்பமாகச் சேர்ந்து தியேட்டருக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பேமிலி டிராமா வகை திரைப்படங்களுக்கான தேவையை இது உணர்த்தியது.
ரஜினியின் நடிப்பும், இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களும் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமும் ‘பேட்ட’ படத்தை வெற்றியடைய வைத்தது.
இதனையடுத்து, ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெளியான ‘எல்கேஜி’ பெருவெற்றி அடைந்தது. இது சிறுபடங்களுக்கும் ரசிகர்கள் வரவேற்பு தருவார்கள் என்பதை மற்றொருமுறை உணர்த்தியது.
துணுக்குத் தோரணங்களாக நகைச்சுவை வசனங்களை அடுக்குவதாக அல்லாமல் தற்கால அரசியல் நிகழ்வுகளைக் கிண்டலடித்துத் திரைக்கதை ஆக்கியிருந்தது ரசிகர்களின் வரவுக்குக் காரணமானது. இவற்றில் சில மீம்ஸ்களாக சமூக வலைதளங்களில் உலா வந்தவைதான்.
தடம் பதித்த திரைக்கதை!
பள்ளி, கல்லூரித் தேர்வுக் காலத்தின்போது படம் ரிலீஸ் செய்தால் வெற்றி கிடைக்காது என்ற மாயை கடந்த சில ஆண்டுகளாகவே உடைந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடம்’ அதனைப் பிரதிபலித்தது.
ஒத்த உருவமைப்புள்ள இரண்டு பேர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்படுகின்றனர். இருவரில் ஒருவர் குற்றவாளி என்ற நிலையில், அதனை போலீசார் கண்டுபிடித்தனரா என்று இதன் திரைக்கதை நீளும்.
இரண்டு நபர்களும் ஒன்றாகப் பிறந்த இரட்டையர்கள் என்பது தொடங்கி, இருவரும் வளர்ந்த விதம், குணாதிசயங்கள், ப்ளஸ் மைனஸ் என்பது போன்ற பல விவரங்கள் திரைக்கதை நகரும்போது அடுத்தடுத்து தெரிய வருவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
புதிர் போட்டியில் பங்கேற்பவர்கள் போல ரசிகர்களின் கையைப் பிடித்து ஓடிக்கொண்டே கதை சொல்லியிருந்தார் படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி. இருக்கையின் நுனிக்கு இழுத்துவந்து பயத்தைத் திணிக்கும் பேய்ப்படங்கள் போலவே, இப்படம் தந்த புதிய அனுபவமே வெற்றியை உறுதிப்படுத்தியது.
தடையறத் தாக்க, மீகாமன் என்று தனது முந்தைய படங்களில் சாதாரண கதையை அசாதாரண திரைக்கதையால் வித்தியாசப்படுத்திய மகிழ் திருமேனி இப்படத்திலும் அதையே நிகழ்த்தியிருந்தார்.
வழக்கமான கதை என்றாலும், ‘காஞ்சனா 3’ படத்தில் அலுப்பைத் தராத வகையில் திரைக்கதை கட்டமைக்கப்பட்டிருந்தது. அதேபோல தில்லுக்கு துட்டு 2, ஏ-1 என்று இரண்டு ஹிட்களைத் தந்தார் சந்தானம்.
பேய்ப்படங்களைக் கிண்டலடிக்கும் தில்லுக்கு துட்டு 2, சந்தானம் ஹீரோவாக நடித்தால் எடுபடாது என்ற வார்த்தைகளைச் சுக்குநூறாக்கியது. குறிப்பாக, ஏ1 படத்தின் சீரான திரைக்கதையே அதன் வெற்றிக்கு முழுமுதற் காரணம்.
‘பிங்க்’ எனும் இந்திப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட ‘நேர்கொண்ட பார்வை’யும் கூட, அஜித் நடித்த படம் என்பதையும் தாண்டி அதன் வழக்கத்திற்கு மாறான திரைக்கதைக்காகவே பாராட்டுகளையும் வசூலையும் பெற்றது.
கோமாளி காட்டியுள்ள புதிய பாதை!
2019ஆம் ஆண்டின் ப்ளாக்பஸ்டர் ஹிட்களில் ஒன்றாக மாறியிருக்கிறது ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’.
‘பீட்சா’ கார்த்திக் சுப்புராஜ், ‘சூது கவ்வும்’ நலன் குமாரசாமி, ‘மாயா’ அஸ்வின் போன்றவர்கள் எந்த இயக்குனரிடமும் உதவியாளர்களாக இல்லாமல் தன் முதல் படத்தை இயக்கினர்.
அப்படங்களும் வழக்கத்திற்கு மாறான கதையம்சத்தைக் கொண்டிருந்தன.
அவை வெற்றிப்படங்கள் என்றபோதிலும், இதுநாள்வரை கமர்ஷியல் படத்துக்கென்று இருந்துவரும் கதைக்களத்தைக் கைக்கொண்டு தன் திரைக்கதையை வித்தியாசப்படுத்திக் காட்டியதால் மட்டுமே வெற்றியைச் சுவைத்திருக்கிறார் கோமாளி இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.
16 ஆண்டுகள் கோமாவில் இருந்த ஒருவன் தற்கால வாழ்வை எதிர்கொள்ளத் தடுமாறுவதுதான் படத்தின் சாராம்சம்.
இத்தனை ஆண்டு கால இடைவெளியில், ஒட்டுமொத்த இந்தியாவும் மாறிவிட்டது என்பதை சீரியசாக சொல்லாமல் சிரிக்க சிரிக்க விவரித்ததில் இப்படம் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் குத்தகைக்கு எடுத்தது.
‘தனி ஒருவன்’ வெற்றிக்குப் பிறகு, எந்தவித ஆர்ப்பரிப்பும் இல்லாமல் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம்பிடித்தவர் ஜெயம் ரவி.
கடந்த சில ஆண்டுகளாக அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களமும் சரி; அவரது கதாபாத்திரமும் சரி, ஏதோ ஒருவகையில் மற்ற ஹீரோக்களிடம் இருந்து அவரை வித்தியாசப்படுத்தி வருகிறது.
கிளைமேக்ஸில் சண்டைக்காட்சி இருந்தாக வேண்டுமென்று அடம்பிடிக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில், வெகு இயல்பாக மனிதநேயத்தை விளக்கும் காட்சியில் நடித்திருந்தார் ரவி.
அது மட்டுமல்லாமல், குறும்படங்களைப் போலவே இப்படத்தின் திரைக்கதையும் அமைந்திருந்ததை அவர் ஏற்றுக்கொண்டது நிச்சயம் ஆச்சர்யம்தான்.
திரைக்கதை அடிப்படைத் தேவை!
சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்மவீட்டுப் பிள்ளை’, சூர்யா நடித்த ‘காப்பான்’ உள்ளிட்ட சில படங்கள் பெரும் செலவில் தயாரிக்கப்பட்டன. இவை தோல்வி அடையவில்லை என்றாலும், பெரிய வெற்றியைச் சுவைக்கவில்லை.
ஆனாலும், இவற்றின் திரைக்கதை கவனமாக உருவாக்கப்பட்டிருப்பதை நம்மால் அறிய முடியும். இடைப்பட்ட காலத்தில் வெளியான நட்பே துணை, நெடுநல்வாடை, சூப்பர் டீலக்ஸ், டூலெட், மான்ஸ்டர், கொலைகாரன், தர்மபிரபு, ராட்சசி, ஆடை, கடாரம் கொண்டான், சிக்சர், ஒத்தசெருப்பு சைஸ் 7, சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. இவற்றில் சில படங்கள் தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்களுக்கு பெரும் லாபத்தைத் தந்திருக்கின்றன.
இது தவிர கேம் ஓவர், வாட்ச்மேன், கே-13, தொரட்டி உள்ளிட்ட சில படங்கள் தியேட்டரில் வெற்றியைச் சுவைக்காவிட்டாலும் அவற்றின் திரைக்கதைக்காகச் சிலாகிப்பைப் பெற்றிருக்கின்றன.
இவ்வளவு ஏன், கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான ‘அசுரன்’, தீபாவளிக்கு வெளியான ‘கைதி’ ஆகிய படங்கள் பெருவெற்றி அடைந்திருப்பதற்கு அடிப்படைக் காரணம் திரைக்கதை மட்டுமே!
(தொடரும்..)
-உதய் பாடகலிங்கம்